புலிகளை தோற்கடித்து விட்டோம் என்று ராஜபக்சே கொக்கரித்தார். பிரபாகரன் போரில் கொல்லப்பட்டுவிட்டார் என்று ராணுவம் கதை விட்டது. இந்நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் சேனல் 4 தொலைக்காட்சி நிருபர் அலெக்ஸ் தாம்சனுக்கு புலிகளின் வெளியுறவு பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
அலெக்ஸ் தாம்சன்: இலங்கை போரில் புலிகளின் தற்போதைய நிலைப்பாடு என்ன?
செல்வராஜ்யா பத்மநாதன்: எங்கள் இயக்கம் ஆயுதங்களை கீழே போட தயாராக இருக்கிறது. மேலும் அமைதி முயற்சியில் பங்கேற்கவும் தயாராக இருக்கிறது.
அலெக்ஸ் தாம்சன்: போரில் ஈடுபட்டுள்ள புலிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
செல்வராஜ்யா பத்மநாதன்: 2 ஆயிரம் பேருக்கு குறைவுதான். அவர்கள் போர் முனையை சுற்றி நின்றுள்ளனர். எங்கள் மக்கள் ஒவ்வொரு மணி நேரமும் நுõற்றுக்கணக்கில் இறந்து கொண்டிருக்கின்றனர். நேற்று மட்டும் 3 ஆயிரம் பேர் இறந்திருக்கின்றனர். 25 ஆயிரம் பேர் காயம் அடைந்திருக்கின்றனர். எனவே நாங்கள் போர் நிறுத்தத்துக்கு தயாராக உள்ளோம்.
அலெக்ஸ் தாம்சன்: அவர்கள் எல்லோரும் மக்கள் தானா?
செல்வராஜ்யா பத்மநாதன்: ஆமாம்
அலெக்ஸ் தாம்சன்: இலங்கை அரசு என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறீர்கள்?
செல்வராஜ்யா பத்மநாதன்: நேற்றிலிருந்து நாங்கள் போரை நிறுத்த வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கூறுகிறோம். நாங்கள் ஆயுதங்களை கீழே போட்டு அமைதி முயற்சியில் பங்கு பெற தயாராக இருக்கிறோம்.
அலெக்ஸ் தாம்சன்: இந்த போர் முடிவுக்கு வந்து விட்டதா?
செல்வராஜ்யா பத்மநாதன்: ஆமாம் இந்தப் போர் முடிவுக்கு வர விரும்புகிறோம்.
அலெக்ஸ் தாம்சன்: புலிகள் கொரில்லா தாக்குதல் நடத்துவார்கள் என்று கூறப்படுகிறதே?
செல்வராஜ்யா பத்மநாதன்: நாங்கள் கடந்த 38 ஆண்டுகளாக போரை நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால் போரில் தினமும் மனித உயிர்கள் பலியாகிக்கொண்டிருக்கின்றன. மேலும் 30 ஆண்டுகள் தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டிருந்தால் என்ன நடக்கும் என்று சொல்ல முடியவில்லை. அமைதியான வழியில் தமிழர்களுக்கு தீர்வு ஏற்பட வேண்டும் என்று நம்புகிறோம்.
அலெக்ஸ் தாம்சன்: புலிகள் தலைவர் பிரபாகரன் என்ன உத்தரவிட்டிருக்கிறார்?
செல்வராஜ்யா பத்மநாதன்: பிரபாகரனிடம் 4 மணி நேரம் பேசினேன். அவர்தான் இந்த உத்தரவை கூறினார். இது குறித்து இலங்கை அரசிடமும், சர்வதேச சமூகத்திடமும் சொல்லிவிட்டோம். அவர்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம். ஆனால் இதுவரை யாரும் பதில் அளிக்கவில்லை. போரை நிறுத்தவும் இல்லை.
அலெக்ஸ் தாம்சன்: பிரபாகரன் இன்னும் போர் முனையில்தான் இருக்கிறாரா?
செல்வராஜ்யா பத்மநாதன்: ஆமாம்.
அலெக்ஸ் தாம்சன்: நீங்கள் போர் முனை பகுதியில் இருக்கும் பிரபாகரனிடம் பேசினீர்களா? அவர் சரண் அடைய தயாராக இருக்கிறாரா?
செல்வராஜ்யா பத்மநாதன்: சரண்அடைய மாட்டார். ஆனால் நாங்கள் ஆயுதங்களை ஒப்படைக்க தயாராக இருக்கிறோம். சரண் அடைய மாட்டோம்.
அலெக்ஸ் தாம்சன்: மக்களை ஏன் கேடயமாக பயன்டுத்தி அவர்களை வெளியேற விடாமல் தடுக்கிறீர்கள்?
செல்வராஜ்யா பத்மநாதன்: நாங்கள் எப்போதும் மக்களை மனித கேடயங்களாக பிடித்து வைக்கவில்லை. மக்கள் எங்கள் சொந்தங்கள். அவர்கள் ராணுவத்தை நம்பாமல் எங்களுடன் இருக்கின்றனர். முகாம்களில் சித்தரவதைப்படுத்தப்படுகின்றனர். எனவே அவர்கள் முகாம்களில் தங்கியிருக்க விரும்பவில்லை. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அரசு அனுப்பாமல் தடுத்து விட்டது. நாங்களாக முன்வந்து 35 ஆயிரம் பேரை அனுப்பியுள்ளோம். நாங்கள் மனித கேடயங்களாக மக்களை பிடித்து வைத்திருக்கவில்லை. இது தவறான தகவல். தவறான பிரசாரம்.
அலெக்ஸ் தாம்சன்: ஆனால் இது உண்மையல்ல புலிகள்தான் மக்கள் மீது சுடுகின்றனர். அவர்களை வெளியேற விடாமல் தடுக்கின்றனர் என்று கூறப்படுகிறதே?
செல்வராஜ்யா பத்மநாதன்: உண்மையில் நாங்கள் அவர்களை சுடுவதில்லை. சில நேரங்களில் ராணுவத்தின் மீது சுடும்போது தவறுதலாக பட்டிருக்கலாம். எங்கள் சொந்த மக்களை நாங்கள் ஏன் கொல்ல வேண்டும்?
அலெக்ஸ் தாம்சன்: புலிகளின் தளபதி ஒருவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு புலிகள் ஆயுதங்களை கீழே போட முன் வந்துள்ளதாகவும், சரண் அடைய விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறதே?
செல்வராஜ்யா பத்மநாதன்: நாங்கள் சரண் அடைய விரும்பவில்லை. ஆயுதங்களை கீழே போட விரும்புகிறோம்.
அலெக்ஸ் தாம்சன்: இந்த போர் முடிந்து விட்டதா அல்லது போர் முறை மாறுமா?
செல்வராஜ்யா பத்மநாதன்: போர் ஏறக்குறைய முடிந்து விட்டது அல்லது அரசியல் பாதையை தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால் அடுத்த சில மணி நேரம் என்ன நடக்கிறது என்பதை பொறுத்து அமையும். ஆனால் நாங்கள் ஆயுதங்களை கீழே போட தயாராக இருக்கிறோம். எங்கள் நாட்டுக்காக அரசியல் ரீதியாக தீர்வு காண தயாராக இருக்கிறோம்.