Friday, April 10, 2009

மக்கள் பிரச்சனைகளை மறக்க மத உணர்வுகளை தூண்டி


தேர்தலுக்கு தேர்தல் மக்கள்தான் ஓட்டுப்போடுகின்றார்கள். சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள், சிந்தனையாளர்கள் வலியுறுத்துகின்றனர். சுயசிந்தனைக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றுதான் ஓட்டுப்போடுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பே பிரசாரத்தை முடிக்க சொல்கிறார்கள். ஆனால் வாக்குப்பதிவுக்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே மக்களை குழப்பும், மக்கள் உணர்வுகளை தூண்டும் வேலைகளில் அரசியல்வாதிகள் இறங்கி விடுகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த நாட்டை பீடித்த பிரச்னைகளாக பொருளாதார சரிவு, வேலையின்மை, விலைவாசி உயர்வு ஆகியவைதான் சாதாரண பொது ஜனத்தின் கண்களுக்கு தெரிந்தது. ஆனால் இன்றோ வருண்காந்தி சொன்னதும், அதற்கு லல்லு பதில் சொன்னதும்தான் வாக்களார்கள் மனதில் எதிரொலிப்பதாக இருக்கிறது. இப்போது லேட்டஸ்டாக சீக்கியர்கள் படுகொலை வழக்கில் ஜெகதீஷ் டைட்லர் விடுவிக்கப்பட்டதும், சிதம்பரத்தின் மீது ஷூ வீசப்பட்டதும் சேர்ந்திருக்கிறது. இன்னும் இருக்கும் நாட்களுக்கும் இதுதான் எதிரொலிக்கப்போகிறது என்றே தெரிகிறது. யதார்த்த மனிதனின் பிரச்னைகளை யோசிக்கக்கூட விடாமல் பிரச்னைகளை உருவாக்கி, வாக்காளர்களை ஏமாற்றி உணர்வுகளை தூண்டும் நடவடிக்கைகள்தான் இப்போது நடக்கின்றன.
மனித மனதை நல்வழிப்படுத்த, தூய்மை படுத்த வந்த மதங்களை உணர்வு ரீதியாக தூண்டி, வேறுபடுத்தி, நீ வேறு, நான் வேறு என்று சண்டையிட வைத்து, நீ இந்த மதமா உனக்கு ஆதரவு நான். நீ அந்த மதமா உனக்கு ஆதரவு இதோ நான் இருக்கிறேன் என்று அரசியல் மேடைகள் முழங்குகின்றன. பக்கத்து வீட்டுக்காரனிடம் கேக், கொழுக்கட்டைகளை பகிர்ந்து கொண்டது போய் இப்போது மதவிரோதம் வளர்க்கிறது அல்லது இந்த அரசியல்வாதிகளால் வளர்த்தெடுக்கப்படுகிறது. இந்த தேர்தலும் அதற்கு விதிவிலக்கல்ல? எந்த தேர்தலில் மக்கள் பிரச்னை எதிரொலிக்கும் என்பதே அப்பாவி வாக்காளரின் கேள்வி? அதற்கு விடை சொல்வது யார்?

No comments:

Post a Comment