Sunday, April 12, 2009

கிங்மேக்கர் காமராஜர்


ஒரு காலத்தில் மத்திய ஆட்சியை நிர்ணயிக்கும் கிங் மேக்கராக விளங்கிய காமராஜர் விருதுநகரில் குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மாள் தம்பதியின் மகனாக 1903ம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் அவருக்கு சூட்டினார்கள். ஆணாகப் பிறந்த காமராஜரை காமாட்சி என்று அழைத்தனர். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், தன் செல்லக் குழைந்தையை ராஜா என்று அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது. சத்ரிய வித்யா சாலா பள்ளியில் ஆரம்ப கல்வி பயின்றார். படிக்கும் போது மிகவும் பொறுமையுடனும் விட்டு கொடுக்கும் மனதுடனும் விளங்கினார். தந்தை குமாரசாமி நாடார் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். காமராஜருக்கு ஆறுவயதாக இருந்த போது தந்தை இறந்து விட்டார். 6ம் வகுப்புக்கு பின்னர் பள்ளிக்கும் செல்லவில்லை. தன் மாமா கருப்பையாவின் துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். மாலை நேரங்களில் விருது நகரில் நடக்கும் அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் ஆர்வமுடன் கலந்து கொள்வார். 16வது வயதில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆனார்.
ஆங்கிலேயே அரசின் உப்பு வரி விதிப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. அப்போது தமிழகத்தில் ராஜாஜி தலைமையில் போராட்டம் நடந்தது. வேதாரண்யத்தில் நடந்த போராட்டத்தில் காமராஜர் கலந்து கொண்டார். இதனால் கைது செய்யப்பட்டு கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒரு வழக்குக்காக வேலூர் சிறையில் இருந்த போது விருதுநகர் முன்சீப் கவுன்சில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்ததும் தலைவர் பதவி வகிக்க விருப்பம் இல்லை என்று கூறி ராஜினாமா செய்து விட்டார். ஒரு கட்டத்தில் காங்., பொது செயலளாராக தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை மாகாண சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். 1954ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்றார். 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். பெருந்தலைவர் என்ற பெயரையும் பெற்றார். காமராஜர் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும். பிரதமர் ஆகும் வாய்ப்பு வந்த போதும் அதை மறுத்து விட்டார். இதனால் தமிழர் ஒருவர் பிரதமர் ஆகும் கனவு இன்று வரை நிறைவேறாமலேயே போனது. இந்தியாவின் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தியை பதவியில் அமர்த்தியதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. இவரது ஆட்சிக்கு பின்னர் தமிழகத்தில் காங்., ஆட்சியே தலையெடுக்கவில்லை. காமராஜர் ஆட்சியை ஏற்படுத்துவோம் என்று இன்றைக்கு காங்., தலைகள் முழங்கி கொண்டே இருக்கின்றன. முழக்கத்தோடு சரி. திராவிடகட்சிகளுக்கு வால் பிடிக்க மட்டும்தான் காங்கிரஸ் என்பதுதான் நிதர்சன உண்மை.

2 comments:

  1. எனக்கு தெறிந்த "நல்ல ஆட்சி, நல்ல அரசியலின் கடைசி தலைவர், பெருந்தலைவர் காமராஜர்."

    ReplyDelete
  2. பெருந்தலைவரை நினைவுபடுத்தும் குறுந்தகவல். காமராஜர் பண்ணிய மிகப் பெரிய தவறு மத்தியில் அவர் கிங்மேக்கராக இருந்ததுதான். அவரே கிங்காக இருந்திருந்தால் இந்திய அரசியலும் பொருளாதாரமும் மிகச் சிற்ப்பாக இருந்திருக்கும். படிக்காமல் தமிழகத்தில் பல சாதனைகளைப் புரிந்த தலைவர் மத்தியில் அதைச் செய்ய தவறிவிட்டார் என்பது எனது ஆதங்கம்

    ReplyDelete