Saturday, May 2, 2009
இன்று பத்திரிகை சுதந்திர தினம்:தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் இருக்கிறதா?
ஊடகச் சுதந்திரம் என்பது மிரட்டலும் தணிக்கையும் இல்லாமல் தகவலை வெளியிடுவதற்கான சுதந்திரமாகும். சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், ஊடகம் ஆகியவை மக்களாட்சியின் நான்கு தூண்களாக கருதப்பட்டுகின்றன. அதன் நீட்சியாக சுதந்திரமான ஊடகம் சமூகத்தின் முக்கிய அங்கமாக கருதப்படுகிறது.
வெவ்வேறு நாடுகளில் ஊடகச் சுதந்திரம் வெவ்வேறு நிலைகளில் உள்ளது. நேர்டிக் நாடுகள், கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஊடகங்கள் மிகச் சுதந்திரமாக இயங்குகின்றன. சீனா, ஈரான், வட கொரியா, கியூபா, இலங்கை ஆகிய நாடுகளில் ஊடகங்கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா ஒரளவு கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரு இடைப்பட்ட நாடாக உள்ளது.
சர்வதேச அளவில் ஊடகச் சுதந்திரம் இருக்கிறதா? என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். தமிழகத்தில் இருக்கிறதா? என்ற கேள்விக்கு வருவோம். இந்த கேள்விக்கு வலைப்பூ வாசகர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் என்னை பொறுத்தவரை ஊடகச் சுதந்திரம் தமிழகத்தில் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது.
ஊடகச் சுதந்திரம் என்பது முதல்வர் கருணாநிதியை சுற்றித்தான் இருக்கிறது. அவரை பற்றி அவருடைய ஆட்சி பற்றி விமர்சனம் செய்யாமல் இருப்பதுதான் ஊடகச் சுதந்திரம் என்று பலர் கருதிக்கொண்டிருக்கிறார்கள்.
மீறி யாராவது விமர்சனம் செய்தால் கருணாநிதி எதிர் கட்சி வரிசையில் இருந்தாலும் நேரடி விவாதம் நடந்து கொண்டிருக்கும் ஸ்டுடியோவுக்கு போன் போட்டு திட்டுவார்(உதாரணம்: விஜய் டிவியில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் விவாதத்தை வழி நடத்திய கோபியை போனில் விரட்டியதை யாரும் மறந்து விட முடியாது) இதுதான் ஊடகச் சுதந்திரம்.
தினகரனில் கருணாநிதி ஆசியுடன் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்புக்கு தினகரன் ஊழியர்களே எரிக்கப்படுவார்கள். இதுவும் கருணாநிதி ஆட்சியில் நிகழ்ந்த ஊடகச் சுதந்திரத்துக்கு எடுத்துக்காட்டு.
கருணாநிதி திட்டிவிடுவாரோ என்று பயந்து கொண்டு எதிர்கட்சிகளின் பேட்டியைக்கூட அடக்கி வெளியிடும் பத்திரிகைகள் இருக்கின்றன. வாழ்க ஊடகச் சுதந்திரம். இலங்கை தமிழர்களின் உணர்வுகளை பலிகளை செய்தியாக்காமல் ராஜபக்சேவின் ஊதுகுழலாக மாறி விட்ட, ஒரு காலத்தில் உண்மை செய்திகள் என்றால் நாங்கள்தான் என்று மார்தட்டிக்கொண்ட இந்து பத்திரிகையின் சுதந்திரம். வாழ்க ஊடகச் சுதந்திரம்.
ஜெயலலிதாவிடம் மட்டும் வீரம் காட்டும் நக்கீரன் கோபாலின் பத்திரிகை சுதந்திரம் வாழ்க
இவையெல்லாம் சமீபத்திய உதாரணங்கள்.
பழைய உதாரணங்களில் ஊடகச் சுதந்திரம் எப்படி காக்கப்பட்டது என்பதற்கு நிறையவே உதாரணங்கள் உள்ளன. பிரபல தமிழ் வார இதழான தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பணியாற்றிய ஒரு புகைப்படக்கரார் ஜெயலலிதாவை படம் எடுத்தார் என்ற குற்றத்துக்காக ஒரே நாள் இரவில் அவர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இது போன்று ஜெயலிதா ஆட்சியில் எண்ணற்ற ஊடகச் சுதந்திர மீறல்கள். இந்து பத்திரிகை வட்டாரத்தையே கதிகலங்க அடித்தவர். அதன் நிருபர் ராதா வெங்கடேசனை ஓட ஓட விரட்டி துரத்தினார் ஜெயலலிதா. அப்போது ஊடகச் சுதந்திரம் மீறப்பட்டதாக பத்திரிகையாளர்கள் குரல் கொடுத்தனர்.
அந்தந்த ஆட்சியாளர்களுக்கு ஒத்துப்போவதுதான் ஊடகச் சுதந்திரம். வாழ்க மேலும் வளர்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment