Friday, May 8, 2009

தினகரன் ஊழியர்கள் எரிக்கப்பட்டு 2 ஆண்டு முடிந்து விட்டது. வெளிவராத சில தகவல்கள்




தினகரன் ஊழியர்கள் எரிக்கப்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த சம்பவம் பற்றி பேசுவதே தமிழகத்தில் குற்றம் என்றாகிவிட்டது. பத்திரிகை சுதந்திரம் பற்றி வாயகிழிய பேசும் பத்திரிகையாளர்கள் யாரும் அதுபற்றி பேசவில்லை.

வெளிவராத சில உண்மைகள் பற்றி வலைப்பூ வாசகர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டிய தருணத்தில் தி.மு.க.வுக்கு எந்த பத்திரிகையுமே ஆதரவு தரவில்லை. எல்லா பத்திரிகைகளும் அந்த தருணத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்தன. ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு அலையும் இல்லாத நிலையில் தி.மு.க., ஆதரவை பெருக்க பிரசார பீரங்கியாக பயன்படுத்தவே தினகரன் வாங்கப்பட்டது. திட்டமிட்டது போல தேர்தல் பிரசார பீரங்கியாக செயல்பட்டது. ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் அழகிரியின் ஆதரவாளர்கள். அப்போதே தயாநிதிக்கும் அழகிரிக்குமான பனிப்போர் தொடங்கிவிட்டது. 2006ம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்தே இரு தரப்புக்கும் புகைச்சல் ஆரம்பித்தது. இது தினகரனில் பணியாற்றிய எல்லோருக்கும் தெரிந்த விஷயமாகிவிட்டது. குறிப்பாக கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தினகரன் நிருபர்களுக்கு கல்வி துறை பற்றிய செய்தி கொடுக்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டார். அந்த அமைச்சரிடம் ஒரு நிருபர் கேட்டதற்கு ஆமாம் நாங்கள் அப்படித்தான் சொல்லியிருக்கிறோம் என்றும் ஒத்துக்கொண்டார். இதிலிருந்தே அழகிரி, மாறன் சகோதரர்கள் பனிப்போர் இருந்து வந்தது என்பது தினகரன் ஊழியர்களுக்கு அப்பட்டமாக தெரிந்தது

தினகரனில் தயாரான சர்வே கேள்வி பட்டியல்

திடீரென ஒரு நாள் தினகரனின் மூத்த நிருபர் என்று அழைக்கப்பட்ட ஒருவர் தினகரன் நிருபர்களிடம் ஒரு தாள் ஒன்றை நீட்டினார். தினகரன் நிர்வாகம் ஒரு சர்வே வெளியிடப்போவதாகவும் கேள்வி என்னமாதிரி கேட்கலாம் என்றும் எழுதி தரக்கூறினர். ஆளாளுக்கு ஒன்று எழுதி தந்தனர். அப்படி எழுதப்பட்டதுதான் வாரி அரசியல் பற்றிய கேள்வியும். இத்தகைய சர்வே இந்த நோக்கத்துடன் வரப்போகிறது என்று யாருக்குமே தெரியாது.

மே மாதம் தொடக்கத்தில் இருந்தே இந்த சர்வேக்கள் வந்த போது பா.ம.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போதெல்லாம் இதுபற்றி அவர் கண்டு கொள்ளவில்லை. தி.மு.க.வில் அடுத்த வாரிசு சர்வேயில் ஸ்டாலினுக்கு 70 சதவீதமும், கனிமொழி, அழகிரிக்கு 2 சதவீதமும் என வந்த 2007ம் ஆண்டு மே 10ம் தேதி வந்த அதிகாலையிலேயே அழகிரி மதுரையில் இருந்து தன் தந்தைக்கு போன் போட்டு என்னப்பா? என்றார். நான் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன் கேட்கல என்றார். ஆனால் அடுத்தது தீவிரம் அதிகரித்தது. மதுரை தினகரன் அலுவலகம் நோக்கி அழகிரி படை சென்று அடித்து நொறுக்கி பெட்ரோல் குண்டுகள் வீசியது. எம்.வினோத் குமார்(23), ஜி.கோபிநாத்(25), முத்துராமலிங்கம்(42) ஆகியோர் உள்ளே மாட்டிக்கொண்டு பலியாயினர்.
உடனே அங்கே பறந்து வந்த கலாநிதி நீதி கிடைக்கும் வரை விடமாட்டேன் என்று நாடகமாடினார். அதை நம்பி தினகரன் ஊழியர்கள் ஏமாந்தனர். மே 10ம் தேதி சன்டிவியில் அழகிரி ரவுடி, அழகிரி ரவுடி என்று திரும்ப திரும்ப ஒளிபரப்பினார்கள். தமிழ் முரசிலும் தலைப்பு செய்தியாக்கினார்கள். மறுநாள் தினகரனிலும் தலைப்பு செய்தியாக்கினார்கள். சன்டிவியில் எடுக்கப்பட்ட வீடியோ ஜெயாடிவிக்கும் தரப்பட்டது என்பதும் ஊரறிந்த விஷயம்
மே 10ம் தேதி தினகரன் ஊழியர்கள் எல்லோருக்கும் உத்தரவு பறந்தது. காலையில் எல்லோரும் ஆபீசில் இருக்க வேண்டும். கலாநிதிமாறன் வந்து ஊழியர்களிடம் பேசப்போகிறார் என்றனர். ஆனால் ஊழியர்கள் காத்திருந்ததுதான் மிச்சம். அவர் வரவேயில்லை. அப்போதே சில ஊழியர்களுக்கு இந்த பிரச்னை எப்படி போகும் என்று தெரிந்து விட்டது.
மறு நாள் சட்டசபையில் பேசிய முதல்வர் கருணாநிதி, நான் எவ்வளவோ சொல்லி பார்த்தேன். தினகரன் நிர்வாகம் நான் சொல்லியதை கேட்கவில்லை என்று ஒரே போடாக போட்டார். இதற்கு தினகரன் தரப்பில் எந்த விளக்கமும் தரவில்லை. இதன் பின்னர் மாறன் சகோதரர்களுக்கும், கருணாநிதி குடும்பத்துக்கும் ஏற்படட் பிளவு ஊரறிந்த விஷயம். எல்லாம் சில நாட்களுக்குத்தான்.

தாத்தாதான் சொன்னார்

பிரச்னை குறித்து வார இதழ்கள் கட்டுரை வெளியிட்ட போது. தயாநிதி ஆப் த ரிக்கார்டாக நக்கீரன் நிருபர் ஒருவரிடம் கூறுகையில் சர்வே பற்றிய எல்லா தகவல்களும் தன் தாத்தாவுக்கு முன்கூட்டியே தெரியும் என்று கூறினார். பின்னர் பிரச்னை முற்றிய பிறகு தினகரனில் கலாநிதி வெளியிட்ட ஒரு பக்க கடித்திலும் இது குறிப்பிடப்பட்டது. அரசியல் சண்டைகளை தூண்டிவிட்டு குளிர்காயும் முதல்வர் கருணாநிதி தன் குடும்ப சண்டையையும் பின் இருந்து தூண்டிவிட்டாரா? என்று நமக்கு கேள்வி எழுகிறது.
கலைஞர் டிவி தொடங்கியபிறகு, அரசு கேபிள் டிவி வெளியான பிறகு, அரசுக்கு எதிரான செய்திகளை தினகரனில் வெளியிட்டும், சன்டிவியில் ஒளிபரப்பியும் தாத்தா கருணாநிதிக்கு பீதியை பயத்தை ஏற்படுத்தி திரும்பவும் மாறன் சகோதரர்கள் இணைந்து விட்டனர். ரவுடி அழகிரி என்று தினகரனில் செய்தி போடடவர்கள், அழகிரியோடு இணைந்து நிற்கும் படம் வெளியானது.

மவுனம் காப்பது ஏன்?

தினகரன் எரிப்பு வழக்கின் சிபிஐ விசாரணை என்ன ஆனது? அது குறித்து எந்த பத்திரிகையும் வாய்திறக்காதது ஏன் என்பதுதான் நம் கேள்வி?மதுரையில் பலியான ஒருவரின் நெருங்கிய உறவினர் தினகரனில் இப்போது செய்தி ஆசிரியராக இருக்கிறார். அவரது மனசாட்சியாவது இதை பொறுக்குமா? தினமலரில் இருந்து கூட்டத்தை தினகரனுக்கு கூட்டிப்போய் தலைக்கு இவ்வளவு என மாறனிடம் பெற்றது மட்டுமின்றி மாதம் லட்சகணக்கில் சம்பளமும், இலங்கை தமிழர்கள் பற்றி செய்தி வரக்கூடாது என்பதற்காக இலங்கை தூதர் அம்சாவின் கொள்கை பரப்புகளை வெளியிடும் தினகரன் பொறுப்பாசிரியருக்கு மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா?
கலாநதி மாறன் தரப்பில் பலியானர்களுக்கு பல லட்சம் கொடுக்கப்பட்டது. பல லட்சம் கொடுத்தால் போதுமா? குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை? கிடைத்தது. யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் அடித்து கொன்று விட்டு இந்தா பணத்தை வச்சுக்கோ என்று சொலலிவிடலாமா?
இன்றுடன் தினகரன் ஊழியர்கள் எரிக்கப்பட்டு 2 ஆண்டுகள் கடந்து விட்டது. என் மனதில் நீண்டநாட்களாக தொக்கி நின்ற நினைவுகள் கேள்விகளை கொட்டி தீர்த்து விட்டேன். வலைப்பூ வாசகர்கள் என்ன நினைக்கிறீர்கள்?

No comments:

Post a Comment