Saturday, June 6, 2009

பயணம் 2 கரிசல் காட்டு சூரியகாந்தி






என் பயணத்தில் என் அம்மத்தாளுடன் என் ஊரில் இருந்து கோனூர் என்ற சிற்றூருக்கு பயணம் சென்றதை மறக்கவே முடியாது. வக்கம்பட்டியில் இருந்து காலையில் 10 மணிக்கு கிளம்புவோம். போகும் போது, அரிசி எல்லாம் எடுத்துக்கொள்வோம். என் அம்மத்தாவின் சகோதரி வீட்டில் கொடுப்பதற்காக எடுத்து செல்வோம். வக்கம்பட்டியில் ஓடும் குடகனாற்றை கடந்து செல்வோம். எப்போதும் முழங்கால் அளவு தண்ணீர் ஓடும். தண்ணீர் ஜில்லிட இறங்கி தாண்டி கும்மம்பட்டி வழியே நடந்து ஒற்றையடிப்பாதையில் செல்வோம். வெயில் அதிகம் இருந்தால் கொஞ்ச நேரம் மரநிழலில் அமர்ந்து விட்டு செல்வோம். அனுமந்தராயன் கோட்டை வழியே சென்று கோனூர் பிரிவுக்கு போகும் போது கரிசல் காட்டு மண்ணை பார்க்க முடியும். ஏன் மண் இவ்வளவு கருப்பாக இருக்கிறது என்று எனக்கு ஒரே ஆச்சர்யமாக இருக்கும். வக்கம்பட்டியில் எல்லாம் செம்மண் ஆகத்தான் இருக்கும். இங்கே மட்டும் ஏன் இப்படி இருக்கிறது என்று புரியவில்லை. அந்த கரிசல் நிலத்தில் அழகாக சூரியகாந்தி பூக்கள் சிரிக்கும். பெரிய பெரிய இலைகளுடன் செடிகள் இருக்கும். ரொம்ப நாளாக அது என்ன செடி என்று தெரியவில்லை. பின்னர்தான் அது புகையிலை இலை என்று தெரிந்தது. கோனூருக்குள் நுழைவதற்கு முன் ஒரு கால்வாய் ஓடும். ரோட்டில் இருந்து மிக சரிவாக இருக்கும். பயந்து பயந்து நடந்து செல்வேன். அம்மத்தா கொண்டு வரும் துணி பைகளை நான்தான் சுமந்து செல்வேன். கோனூரில் அம்மத்தாவின் சகோதரி வீட்டுக்கு போனதும், அந்த சகோதரியின் மருமகன் எனக்கு மாமா முறை வேண்டும். அவரது மளிகைக்கடையில் தேன் மிட்டாய் எடுத்து சாப்பிடுவேன். மாமா பையன்கள். மாமா பெண்ணுடன் விளையாடுவேன். இரவு திருவிழாவில் கொட்ட கொட்ட விழித்திருந்து நாடகம் பார்ப்போம். சில நாட்களில் திரைப்படமும் காட்டுவார்கள். ஆண்டு தோறும் திருவிழாவின் போது இந்த பயணம் தொடர்ந்தது. விவரம் தெரிந்து பெரிய ஆளான பிறகும் இந்த ஊருக்கு பயணம் செய்தேன். பெண் கேட்டு பயணப்பட்டேன். அந்த பயணம் தோல்வியில் முடிந்தது.இன்னும் இந்த கரிசல் மனதில் சூரியகாந்தியாய் அமர்ந்திருக்கிறது கோனூர் பயணம். அடுத்ததாக என் பயணத்தில் பள்ளிப் பயணம்....

No comments:

Post a Comment