Tuesday, July 21, 2009

பிளாஷ் நியூஸ் புலிகளின் புதிய தலைவர்:


ஜூலை 21: புலிகள் தலைவர் பிரபாகரனால்,அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட செல்வராஜா பத்மநாதன்- இனிவரும் காலத்தில் எமது தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு ஏற்ப போராட்ட நகர்வுளை வழிநடத்திச் செல்வார் என புலிகள் அறிவித்துள்ளனர்.
புலிகளை ஒழித்துக்கட்டிவிட்டோம் என்று கொக்கரித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அதர்ச்சியளிக்கும் வகையில் புலிகள் மீண்டும் போராட்ட களத்தில் இறங்குவதாக அறிவித்துள்ளனர். போராட்டம் தோற்றுவிட்டது என இலங்கையும், அதன் ஜால்ரா நாடுகளும் நினைத்திருக்கும் மாயையையும் தகர்த்தெறிவோம் என்று கூறியுள்ளனர்.
புலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து உலகத் தமிழ் மக்களுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் புலிகளின் நிறைவேற்றுச் செயற்குழு சார்பில் சுரேஸ் (அமுதன்), ராம் ஆகியோர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் நெருக்கடி மிகுந்த, துயர்மிகுந்த காலகட்டம் ஒன்றினுள் ஈழத் தமிழினம் இப்போது நிலைகுலைந்து நிற்கின்றது. ஈடுசெய்ய முடியாத - கனவில் கூட நாம் ஏற்றுக்கொள்ள விரும்பாத - மிகப்பெரிய இழப்புக்களை, எம் இனம் சந்தித்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.
புலிகள் இயக்கத்தை அழித்துவிட்டதாகவும், முற்றாக ஒடுக்கிவிட்டதாகவும், இலங்கை அரசு பரப்புரை செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் - தமிழீழ விடுதலைக்காக நாம் வீறுகொண்டு எழுந்து போராடவேண்டியது எமது வரலாற்றுக்கடமை. எங்கள் தேசியத் தலைவர் அவர்களினாலும், எங்கள் மண்ணுக்காக விதையாகிப் போன மாவீரர்களினாலும், தமது உயிர்களைத் தந்துவிட்ட மக்களினாலும் இந்த கடமை எங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் - வரலாற்றின் தேவை கருதி - பிறந்திருக்கும் புதிய சூழலுக்கு ஏற்ப - புதிய வழிமுறைகளுக்கு ஊடாகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் -விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பை ஒழுங்கமைப்புச் செய்துள்ளோம்.
போராட்ட வடிவங்களும் அதற்கான உத்திகளும் பாதைகளும், காலத்திற்கு ஏற்பவும் தேவைக்கு ஏற்பவும் மாற்றமடையலாம். இறுதி இலட்சியமான தமிழீழம் என்பது என்றும் மாறாதது.
எம்முடைய மக்களுடன் ஒன்றிணைந்து விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வை மேற்கொள்ளவேண்டிய தருணத்தில் இருக்கின்றோம். அன்றும் இன்றும் இனி என்றும் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே தமிழ்த் தேசியத்தின் தலைவர்.
எமக்கு முன்னால் உள்ள தடைகளை உடைத்து எறிந்து எமது செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள எமது ஒருங்கிணைப்பாளர்கள், தாயகத்தின் களத்தில் இருந்து எதிரியின் முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளிவந்த போராளிகள், பொறுப்பாளர்கள் என எமது உறுப்பினர்கள் பலரையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட - நீண்ட - விரிவான - ஆழமான கருத்துப் பரிமாற்றங்களின் விளைவாக இறுதியான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டு முடிவுக்கு ஏற்ப தேசியத் தலைவர் பிரபாகரன், புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளராக நியமித்த செல்வராஜா பத்மநாதன்- இனிவரும் காலத்தில் எமது தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு ஏற்ப எமது போராட்ட நகர்வுளை வழிநடத்திச் செல்வார். புலிகள் இயக்கத்தின் நிறைவேற்றுச் செயற்குழுவினராகிய நாங்கள் எமது அன்புக்குரிய மக்களுக்கும், இந்த உலக சமூகத்திற்கும் அதிகாரபூர்வமாக இதை அறிவிக்கின்றோம்.
போராட்டத்தை முனைப்புடன் முன்நகர்த்தும் நோக்கில், இயக்கத்திற்கான ஒரு தலைமைச் செயலகமும், பல்வேறு துறைசார் வேலைத் திட்டப் பிரிவுகளும், நிறைவேற்றுச் செயற்குழுவும் உருவாக்கப்பட்டுள்ளன. இவை பற்றிய விபரங்களை விரைவில் அறிவிப்போம். எமது எதிர்கால செயல்பாடுகளை வலுப்படுத்தும் முகமாக தமிழ் மக்களாகிய உங்களின் மலைபோன்ற ஆதரவையும் அறிவார்ந்த கருத்துகளும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.
இலங்கையில் தமிழ் மக்களின் நிலங்களை கையகப்படுத்தியதாலும் பல்லாயிரம் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததாலும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தோற்றுவிட்டது என்று சிங்கள தேசமும் அதனுடன் கூட்டுச்சேர்ந்த நாடுகளும் நினைத்தால் அந்த மாயையை நாம் உடைத்தெறிவோம்.
எமது தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வளர்த்துவிட்ட விடுதலைத் தாகம் என்ற பெருநெருப்பு, உணர்வுள்ள ஒவ்வொரு தமிழர்களின் நெஞ்சிலும் கனன்று கொண்டிருப்பதையும் தேச விடுதலை ஒன்று மட்டுமே அந்தப் பெருநெருப்பை அணைக்கும் சக்தி உள்ளது என்ற உண்மையையும் நாம் எமது அடுத்தகட்ட போராட்ட நகர்வுகளின் ஊடாக உலகிற்கு உணர வைப்போம்.
இவ்வாறு புலிகள் கூறியுள்ளனர்.

Sunday, July 19, 2009

இளகிய மனதுள்ளவர்கள் இதை படிக்க வேண்டாம், படங்களை பார்க்க வேண்டாம்









மனிதனின் உடல் உறுப்புகளான கிட்னி, கண்களை விற்கும் தொழிற்சாலை ஒன்று ரஷ்யாவில் இருக்கிறது. இதை சிலர் நம்பாமல் போகலாம். அதற்கு சாட்சிதான் இந்த படங்கள். கார்விபத்துகளில் பலியாகும் நபர்கள், யாருமற்ற அனாதைகளாக மரணம் அடையும் நபர்கள், தூக்கிலிடப்படும் நபர்கள், விவரிக்கமுடியாத மரணங்கள், யாரும் கோராமல் பிணவறையில் இருக்கும் பிணங்கள் இந்த தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படுகின்றன. பின்னர் இவை மருத்துவமாணவர்களுக்காக மருத்துவப்பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இர்லேந்து மற்றும் ஜெர்மனியில் உள்ள மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மனிதனின் எலும்புகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவிலும் இதே போல மனித உடல் பாகங்களை ஏற்றுதி செய்யும் தொழிற்சாலை இருக்கிறதாம். யாருக்காவது தெரிந்தால் அந்த செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Saturday, July 18, 2009

கலைஞர் டிவியில் வரும் கேடுகெட்ட தொடர்




கலைஞர் டிவியில் தங்கமான புருஷன் என்ற தொடர் ஒன்று இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை ஒளிரப்பாகிறது. நம் வலை நண்பர்கள் தற்செயலாக அதை பார்த்திருக்கலாம். தொடர் முழுவதுமே நெகட்டிவ் தாட்களைக் கொண்டிருக்கிறது என்பது ஒருபுறம் இருக்க, அந்த தொடரின் ஒளிப்பதிவு, படமாக்கப்பட்ட விதம் எல்லாமே மோசம் என்பதும் குறிப்பிடத்தான் வேண்டும். தவிர இந்த தொடரில் வரும் காட்சிகளின் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்த தொடரில் வந்த ஒரு காட்சியில் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கிறது. அதை விரும்பாத ஒருவன் திருமணத்திற்கு பந்தல் போடுதற்கு முகூர்த்தக்கால் ஊன்றுவார்கள் இல்லையா? அந்த முகூர்த்தகாலுக்கு தீவைக்கிறான். இதுவரை இது போன்று நடைமுறையில் நடந்திருக்கிறதா? என்று யாராவது சொல்லமுடியுமா? இந்த தொடரப்பார்த்த பிறகு வேண்டுமானால் அது போல் பலர் முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன். இது போன்ற கேடுகெட்ட காட்சியை தமிழகத்தின் முதல்வர் குடும்பம் நடத்தும் டிவியில் இடம் பெறலாமா?
இது போன்று நெகட்டிவ் தாட் உடன் கூடிய காட்சிகள் இந்த தொடரில் அதிகம் இடம் பெறுகின்றன.

Tuesday, July 14, 2009

நான் எழுதிய முதல் மொழிபெயர்ப்பு புத்தகம்

வாழ்க்கையில் ஒரு விபத்து போலத்தான் புத்தகம் எழுதுவதும் நேர்ந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு கணையாழி, சுதேசமித்திரன்&இளையமித்திரன் உள்ளிட்ட சில இதழ்களில் என் கவிதைகள் வெளிவந்தன. அப்போதே திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு நண்பர் என் கவிதைகளை புத்தகமாக வெளியிடலாமே என்று விரும்பினார். அதற்காக அட்டைப்படம் எல்லாம் கூட ஒரு நண்பர் போட்டுக்கொடுத்தார். பட்டுக்கோட்டை பிரபாகர் கூட முன்னுரையெல்லாம் எழுதிக்கொடுத்தார். அதன் பின்னர் அந்த நண்பர் என் கவிதைகளை புத்தகமாக போட முன்வரவில்லை. எனவே என் முதல் முயற்சி முயற்சியிலேயே முடிந்து போனது.
அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து ஒரு பிரபல நாளிதழில் பணியாற்றினேன். பின்னர் அங்கிருந்து விலகி விட்டேன். அந்த நாளிதழில் பணியாற்றிய சிலர் இணைந்து ஒரு பதிப்பகம் தொடங்கினர். என் மேல் அக்கறை கொண்ட மூத்த நிருபர் மொழிபெயர்ப்பு புத்தகம் எழுதும் வாய்ப்புக்கொடுத்தார். டோரிஸ் லெஸ்சிங் என்ற இங்கிலாந்து எழுத்தாளர் 2007ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வாங்கினர். அவரைபற்றி எழுதுங்கள் என்றார். அதன் விளைவாக எழுதியதுதான் டோரிஸ் லெஸ்சிங் என்ற புத்தகம்.
மீண்டும் புத்தகம் வருவதில் திடீரென சிக்கல் ஏற்பட்டது. என்னை புத்தகம் எழுதச்சொன்னவர் அந்த பதிப்பகத்தில் இருந்து சில காரணங்களுக்காக விலகிவிட்டார். எனவே வேறு ஒரு பதிப்பக நண்பர் மூலம் அணுகி சந்தியா பதிப்பகத்தில் இருந்து என் புத்தகம் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்தது. இது என்னுடைய முதல் புத்தகம்

புத்தகத்தின் தலைப்பு: டோரிஸ் லெஸ்சிங்

நூலாசிரியர்: கே. உமாபதி

வெளியீடு: சந்தியா பதிப்பகம், சென்னை&83

முடிந்தால் வாங்கி படியுங்கள் நண்பர்களே!

இந்த புத்தகத்தின் விமர்சனம் கடந்த 12 07 09 தினமலர் நாளிதழில் வெளியாகி உள்ளது.