Thursday, April 30, 2009

பஸ் கட்டண குறைப்பு மற்றும் ஒரு நாடகம்




பிரசார களத்தில் தி.மு.க.,வுக்கு பேசுவதற்கு பொருள் இல்லை. அல்லல்படும் இலங்கை தமிழர் பற்றி பேசினால் சோனியா கோபித்துக்கொள்வார் எனவே அது பற்றி பேசமுடியாது. மக்கள் பிரச்னைகளுக்கு இந்த 3 ஆண்டுகால தி.மு.க., அரசின் வேதனை கலந்த சாதனைதான் காரணம். அதை பற்றியும் சொல்லமுடியாது. அதை செய்தோம் இதை செய்தோம் என்று பட்ஜெட் புள்ளிவிவரங்களை மட்டுமே அடுக்க முடியும்.
தமிழக உளவு துறை அதிகாரிகள் எடுத்த ரகசிய சர்வேயில் தமிழகத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மண்ணை கவ்வுவது நிச்சயம் என்று ரிப்போர்ட் கொடுக்கப்படுகிறது. அதில் முக்கிய பிரச்னையாக பஸ் கட்டண உயர்வும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. பஸ் கட்டண உயர்வு குறித்து எதிர் கட்சிகள் கேள்வி எழுப்பிய போதெல்லாம் அது அதிமுக ஆட்சியில் செய்தது. நாங்கள் புதிதாக எதுவும் செய்ய வில்லை என்று போக்குவரத்துறை அமைச்சர் நேரு அரசு உத்தரவுகளை எடுத்துக்காட்டி பதில் சொன்னார். எனவே போராடி போராடி அல்லது அடுத்தடுத்து வேறு பிரச்னைகள் வந்ததால் பஸ் கட்டண உயர்வையே பலரும் மறந்து விட்டனர். இந்த நிலையில்தான் பஸ் கட்டண குறைப்பை அறிவித்திருக்கின்றனர்.
உளவு துறை தந்த அதர்ச்சி அறிக்கைகள். இன்றைய தினம் முதல்வர் கருணாநிதி தேர்தல் பிரசாரம் செய்யும் முன்பாவது மக்களை குளிர்விக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த திடீர் கட்டண குறைப்பை அரசு செய்திருக்கிறது. விதி முறை மீறல் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விரல் சுட்டியிருக்கிறார்.
பஸ் கட்டண குறைப்பை நாம் நம்ப போகிறோமோ நம்பி ஓட்டுப்போடப்போகிறோமா? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி. மிச்சமிருக்கிற 13 நாள் நாடகத்தில் இதுவும் ஒரு கபட நாடகம். இலங்கை தமிழர்களை ஏமாற்ற பந்த், உண்ணாவிரத நாடகங்களை செய்த கருணாநிதி, பஸ்கட்டண குறைப்பு நாடகத்தையும் செய்திருக்கிறார். இன்னும் சில நாட்கள் இது போன்ற நாடகங்கள் தொடரலாம். நாடகத்தை நாடகமாக மட்டுமே பார்த்து ரசியுங்கள். மற்றபடி ஓட்டுப்போடுவதற்கு முன்பு சிந்தியுங்கள்.

Wednesday, April 29, 2009

லேட்டஸ்ட் நியூஸ்:பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ராஜ்


இருவர் படத்தில் நடித்து கருணாநிதியால் சர்ச்சையில் சிக்கிய நடிகர் பிரகாஷ் ராஜ் இப்போது புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள கன்னட திரைப்பட பத்திரிகையாளர்கள் அசோசியேஷனில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் நிருபர்களிடம் ஹாயாக பேசிக்கொண்டிருந்த போது நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த தகவலை கூறியிருக்கிறார்.
நடிப்பது என்பது எனக்கு ஒரு பயணம் செய்வது போல.நடிப்பதால் நிறைய கற்றுக்கொள்கிறேன்.
நீங்கள் ஒன்றை கற்றுக்கொள்வதன் மூலம் அதுபற்றி நிறையபேரிடம் பேசலாம். அனுபவங்கள் மூலம்தான் எந்த ஒரு நடிகரும் நம்பிக்கைகையும், நடிப்பில் முதிர்ச்சியும் பெற முடியும் என்று நான் கருதுகிறேன்.
புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் ஒரு தமிழ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. அந்தப் படத்தின் திரைக்கதை மற்றும் டைரக்டரின் கட்டளைக்கு ஏற்ப பிரபாகரன் கதாப்பாத்திரத்தில் நடிக்க விரும்பம் தெரிவித்துள்ளேன்.
மற்றபடி இந்த படத்தில் நடிப்பதற்காக பிரபாகரன் தோற்றத்தை காப்பியடிக்க விரும்பவில்லை. அவர் நிஜத்தில் எப்படி இருப்பார், எப்படி பேசுவார் என்று தகவல்களை சேகரிக்கவில்லை. இயற்கையாக அவரைப் போன்று நடிப்பது மற்ற எல்லாவற்றையும் விட சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் இந்தப் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பெயரை இப்போது சொல்ல விரும்பவில்லை என்று ரகசியம் காத்தார்.
அவர் ரகசியம் காப்பது நல்லதுதான். ஏற்கனவே செல்வமணி எடுத்த குற்றபத்திரிகைக்கு நேர்ந்த கதி எல்லோரும் அறிந்தஒன்றுதான்.

எக்ஸ்குளூசிவ்:சென்னை ரயில் விபத்து: புலிகளை தொடர்பு படுத்த முயற்சி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புதன் அதிகாலை ஒரு மின் ரயிலை எடுத்துக்கொண்டு கிளம்பிய மர்ம மனிதர் வியாசர்பாடி ரயில் நிலையத்தில் நின்றிருந்த சரக்கு ரயிலில் பலமாக மோதினார். அவரும் பயணிகள் 3 பேரும் உடல் சிதறி பலியாகிவிட்டனர். இதற்கு காரணமான நபர் யார்? என்பதை ஆராயாமல் இந்த வழக்குக்கு மே 13ம் தேதி வரை ஒரு புதிய கதை எழுத ஆளும் வர்க்கம் தயாராகி வருவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. சிபிசிஐடி விசாரணைக்கும் இந்த வழக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் இருந்தே இந்த வழக்கு திசைமாறி செல்ல வாய்ப்புள்ளது என்று கமிஷன் ஆபீஸ் நிருபர் ஒருவர் கூறுகிறார்.
அரசுக்கு பிடிக்காதவர்களை வழக்கில் கொண்டு வருவதற்காகத்தான் சிபிசிஐடி இயங்குகிறது. அந்த வகையில் இந்த வழக்கில் உண்மையை மூடி மறைத்து புலிகளை சம்பந்தப்படுத்தி ஜெயலிதாவின் பிரசாரத்துக்கு செக் வைக்கும் முயற்சியில் தமிழக காவல் துறை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் இந்த விபத்து குறித்து நுணுக்கமாக கண்டறிய வேண்டும் என்று வாய்ஸ் கொடுத்திருக்கிறார். எனவே அடுத்த சில நாட்களில் புலிகளை தொடர்பு படுத்தி காட்சிகள் அரங்கேறலாம்.

Sunday, April 26, 2009

சற்று முன் கிடைத்த தகவல்: முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம்: தமிழர்களின் இன்னல் தீருமா?


தேர்தல் சூடு அதிகரித்துள்ள நிலையில்இலங்கை தமிழர்கள் இன்னல் போக்காமல்பிரசாரத்துக்கு கிளம்ப முடியாது என்றுகருணாநிதிக்கு நன்றாக தெரிந்து விட்டது. தன்அரசியல் எதிரி ஜெயலலிதா திடீரெனதன்நிலையில் இருந்து கீழிறங்கி தனிஈழத்துக்கு ஆதரவு என்று அறிவித்தது சர்வதேசஅளவில் வரவேற்பை பெற்றிருப்பதுகருணாநிதியின் வயிற்றில் புளியைகரைத்திருக்கிறது. லோக்சபா தேர்தலில் முதல்இரண்டு கட்டங்கள் காங்கிரஸ் கூட்டணிக்குசாதகமாக இல்லை என்று வந்த உளவுசெய்திகள் ஒருபுறம் இருக்க இனி மிச்சம்இருக்கும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலாவது எதையாவது செய்துவெற்றியை தக்க வைக்க வேண்டும் என்று அரசியல்வாதிகள் சித்திரைவெயிலில் மண்டையை குழப்பிக்கொண்டிருக்கின்றர். தமிழகத்திலும் அவ்வளவுசாதகமாக இல்லை என்று சோனியாஜிக்கு தெரிந்தாலும், புலிகளை ஒழித்தே தீரவேண்டும் அதற்கு எத்தனை தமிழர்கள் இறந்தாலும் பரவாயில்லை. தன்னுடையஅசைண்ட்மென்டை ராஜபக்சே முடிக்க வேண்டும் என்று அவரது மனதுக்குள்ஒரு எண்ணம் ஓடுகிறது. மூத்த தலைவர் கருணாநிதிக்கும் இந்த எண்ணம்தெரியாமல் இல்லை. இலங்கை விவகாரம் அவ்வளவு பெரிதாகாது. நாங்கள்பார்த்துக்கொள்கிறோம் எங்களிடம் மீடியா பவர் இருக்கிறது என்று பேரன்கள்கொடுத்த வாக்குறுதியை பெருசு நம்பினார். ஆனால் இவ்வளவு தூரத்துக்கு போய்தன்னுடைய பரம வைரியே தனி ஈழத்துக்கு குரல் கொடுக்கும் அளவுக்குமுன்வந்ததும் அதற்கு எல்லைகளை தாண்டி ஆதரவு பெருகியதும் கடந்த 2 நாட்களாக அவரை தூக்கம் இழக்க செய்து விட்டது. அதன் விளைவே இந்த திடீர்உண்ணாவிரதம். எவ்வளவு அரசியல் மாச்சர்யங்கள் இருந்தாலும் தமிழர்களின்இன்னல் தீர்க்க கடைசி பட்ச ஆயுதமாக முதல்வர் கருணாநித உண்ணாவிரதஅஸ்திரத்தை கையில் எடுத்திருப்பதை பாரட்ட வேண்டும். அதே நேரத்தில் ஒருமூத்த அரசியல் வாதியை அவரது வயது கருதி அவரின் கோரிக்கையைநிறைவேற்றும் வகையில் சோனியாஜி தனது வன்ம நிலையில் இருந்து இறங்கிவந்து ராஜபக்சேயின் அலை பேசியில் கூப்பிட்டு, நிறுத்தடா போரை என்றுஉத்தரவிடுவாரா? என்பதுதான் உலகமெங்கும் இருக்கும் அப்பாவி தமிழர்களின்ஒரே கேள்வி. அப்படி நடந்தால் முதல்வரின் உண்ணாவிரதத்தை பாராட்டுவோம். சீக்கிரம் அவர் உண்ணாவிரதம் முடியவும் தமிழர்கள் பிரார்த்திக்க வேண்டும். அவரது உண்ணாவிரதம் நாடகமா? என்பது சர்ச்சைக்கு அப்பாற்பட்ட விஷயம்.

இலங்கை நிலவரம்:மூடி மறைக்கும் பத்திரிகைகள்

இலங்கையில் நித்தம் நித்தம் செத்தும் மடியும் தமிழர்களை கண்டு எல்லையின்றி சர்வதேச சமுதாயமே கண்ணீர் வடிக்கிறது. தமிழகத்தில் இருந்து வரும் பத்திரிகைகள் தங்களின் அரசியல் தலைவர்கள் என்ன சொல்வார்களோ என்ற அச்சத்தில் பேனாவில் நஞ்சை கலந்து எழுதுகின்றனர்.
இலங்கை போர் பற்றி செய்திகளை பல தமிழ் பத்திரிகைகள் வேதனை கலந்த வார்ததைகளால் பிரபல தமிழ் பத்திரிகைள் வெளியிட்டு வரும் நிலையில் கலைஞரின் பேரன் கொள்முதல் செய்த தினகரன் பத்திரிகை மட்டும் பாராமுகமாக செய்தி வெளியிட்டு வருகிறது. சன் தொலை காட்சியும் பாராமுகமாக இருந்து வருகிறது.தமிழகத்தின் அருகில் கேட்கும் அழு குரல் கூட அவர்களுக்கு கேட்கவில்லையே என்று எண்ணும் போது அவர்கள் பத்திரிகையை வாங்கி படிக்கலாமா என்று எண்ணத்தோன்றுகிறது.

Thursday, April 23, 2009

இதுவா இலங்கை தமிழர் நலன்?

தமிழர்கள் ரத்தம் சிந்தப்படுவது நிறுத்தக்கோரி தி.மு.க. தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்த பொது வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. சரி இந்த வேலை நிறுத்தத்தால் எத்தனை பேருக்கு தமிழுணர்வு கிளர்ந்தது. அல்லது அந்த தமிழர் உணர்வை தட்டி எழுப்பினார்களா? என்றால் இல்லை. கலைஞர் புகழ் பாடும் கலைஞர் டிவியும், அவரின் பேரன்கள் நடத்தும் சன்டிவியும் பந்த் நாளை விடுமுறை நாளாக கருதி திரைப்படங்களை ஒளிபரப்பின.
சமீபகாலமாக அப்பாவி மக்கள் பலியாவதைக்கூட பதிவு செய்ய மறுத்த இந்த தொலைக்காட்சிகளின் தமிழ் உணர்வு ஏன் இவ்வளவு கீழ்தரமாக மாறியது. பந்த் எதற்காக நடத்தப்படுகிறது. இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்கள் என்ன? என்பதை செய்தி கட்டுரையாக்கூட இந்த சேனல்கள் வழங்க முன்வராதது ஏன்? இலங்கை தமிழர்கள் இன்னல்களை ஒளிபரப்பினால் சோனியாஜி கோபித்து கொள்வார் என்பதாக இருக்குமோ?
இந்த வேலை நிறுத்தத்தை வழக்கம் போல் அ.தி.மு.க.,கூட்டணி கட்சிகள் எதிர்த்தன. பிரசாரத்தை தடுக்கவே கருணாநிதி வேலை நிறுத்தம் அறிவித்தார் என்று மதுரையில் ஜெயலலிதா முழங்கினார். முன்பு இலங்கை தமிழர்களுக்கு கருணாநிதி நைட்டி அனுப்பியபோது அதை கிண்டல் செய்தவர்தான் ஜெயலலிதா என்பதை தமிழர்கள் மறந்து விடக்கூடாது. எல்லாம் தேர்தல் செய்கின்ற மாயம். ஒரே ஒரு ஆறுதல் தேர்தல் வரும் பொழுதாவது இலங்கை தமிழர்களின் ஞாபகம் வருகிறதே அந்த வகையில் அவர்களின் ஞாபக சக்தியை பாராட்டலாம். மற்றபடி அவர்களின் இன்னல்களை போக்கும் அளவுக்கு எந்த தமிழக தலைவருக்கும் திராணிஇல்லை. சக்தியில்லை. வெட்கம் இல்லை.

Sunday, April 12, 2009

கிங்மேக்கர் காமராஜர்


ஒரு காலத்தில் மத்திய ஆட்சியை நிர்ணயிக்கும் கிங் மேக்கராக விளங்கிய காமராஜர் விருதுநகரில் குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மாள் தம்பதியின் மகனாக 1903ம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் அவருக்கு சூட்டினார்கள். ஆணாகப் பிறந்த காமராஜரை காமாட்சி என்று அழைத்தனர். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், தன் செல்லக் குழைந்தையை ராஜா என்று அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது. சத்ரிய வித்யா சாலா பள்ளியில் ஆரம்ப கல்வி பயின்றார். படிக்கும் போது மிகவும் பொறுமையுடனும் விட்டு கொடுக்கும் மனதுடனும் விளங்கினார். தந்தை குமாரசாமி நாடார் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். காமராஜருக்கு ஆறுவயதாக இருந்த போது தந்தை இறந்து விட்டார். 6ம் வகுப்புக்கு பின்னர் பள்ளிக்கும் செல்லவில்லை. தன் மாமா கருப்பையாவின் துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். மாலை நேரங்களில் விருது நகரில் நடக்கும் அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் ஆர்வமுடன் கலந்து கொள்வார். 16வது வயதில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆனார்.
ஆங்கிலேயே அரசின் உப்பு வரி விதிப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. அப்போது தமிழகத்தில் ராஜாஜி தலைமையில் போராட்டம் நடந்தது. வேதாரண்யத்தில் நடந்த போராட்டத்தில் காமராஜர் கலந்து கொண்டார். இதனால் கைது செய்யப்பட்டு கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒரு வழக்குக்காக வேலூர் சிறையில் இருந்த போது விருதுநகர் முன்சீப் கவுன்சில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்ததும் தலைவர் பதவி வகிக்க விருப்பம் இல்லை என்று கூறி ராஜினாமா செய்து விட்டார். ஒரு கட்டத்தில் காங்., பொது செயலளாராக தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை மாகாண சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். 1954ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்றார். 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். பெருந்தலைவர் என்ற பெயரையும் பெற்றார். காமராஜர் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும். பிரதமர் ஆகும் வாய்ப்பு வந்த போதும் அதை மறுத்து விட்டார். இதனால் தமிழர் ஒருவர் பிரதமர் ஆகும் கனவு இன்று வரை நிறைவேறாமலேயே போனது. இந்தியாவின் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தியை பதவியில் அமர்த்தியதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. இவரது ஆட்சிக்கு பின்னர் தமிழகத்தில் காங்., ஆட்சியே தலையெடுக்கவில்லை. காமராஜர் ஆட்சியை ஏற்படுத்துவோம் என்று இன்றைக்கு காங்., தலைகள் முழங்கி கொண்டே இருக்கின்றன. முழக்கத்தோடு சரி. திராவிடகட்சிகளுக்கு வால் பிடிக்க மட்டும்தான் காங்கிரஸ் என்பதுதான் நிதர்சன உண்மை.

டைட்டானிக் சாவி ஏலம் (1912 ஏப்ரல் 14 டைட்டானிக் மூழ்கிய தினம்)


லண்டன்,ஏப்ரல் 12:
டைட்டானிக் கப்பலில் இருந்த அறை ஒன்றின் துருப்பிடித்த சாவி லண்டனில் 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள சவுத்ஆம்டன் துறைமுக நகரில் இருந்து அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு 1912ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல் கப்பல் ஊழியர்கள் உட்பட 2ஆயிரத்து 233 பேருடன் புறப்பட்டது.
நியூபவ்ண்ட் லேண்ட் தீவுக்கு அருகில் கடலில் சென்று கொண்டிருந்த போது வானிலை மாற்றத்தால் அந்த பகுதியில் உறைபனி ஏற்பட்டது. இதனால் பனிப்பாறையில் மோதி 1912ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி நள்ளிரவில் டைட்டானிக் மோதியதில் கவிந்தது. நள்ளிரவு நேரம் தூங்கிக்கொண்டிருந்த பலர் என்ன நடக்கின்றது என்று தெரியாமலேயே ஆயிரத்து 517 பேர் பரிதாபமாக இறந்தனர். உயிர்பிழைத்தவர்கள் 706 பேர் மட்டுமே.
இந்த சோகம் நடந்து 97 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்நிலையில் டைட்டானிக் கப்பல் அறை ஒன்றின் சாவி லண்டனில் ஏலத்துக்கு வருகிறது.
டைட்டானிக் முதல் வகுப்பு அறையின் ஊழியர் எட்மண்ட் ஸ்டோன் என்பவர் கப்பல் மூழ்கிய போது பயணிகளை காப்பாற்ற முயற்சித்தார். இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப் பட்ட தபால் பைகள் மாடியில் இருந்த ஒரு அறையில் போடப்பட்டிருந்தது. அந்த மாடிக்கு செல்லும் கதவு மூடப்பட்டிருந்தது. அந்த கதவை திறந்து விட்டால் நிறையப்பேரை காப்பாற்றலாம் என்று அவருக்கு தெரிந்திருக்கிறது. தன்னிடம் இருந்த சாவியால் அந்த கதவை திறந்து விட்டார். பின்னர் அந்த வழியே தப்பித்து செல்லும் படி பயணிகளிடம் கூறினார். அதன் படி பல பயணிகள் தப்பித்தனர். ஆனால் என்ன பரிதாபம் எட்மண்ட் ஸ்டோனால் தப்பிக்க முடியவில்லை. கடலில் மூழ்கி இறந்து விட்டார். மீட்கப்பட்ட அவரின் சடலத்தில் இருந்த உடைகளில் இருந்து தபால் பை அறையின் சாவி, மீட்கப்பட்டது.
அமெரிக்க செனட் குழு டைட்டானிக் விபத்து குறித்து விசாரித்த போது உயிர் பிழைத்த டைட்டானிக் ஊழியர் ஹென்ரி எச்சஸ் இந்த தகவல்களை அவர்களிடம் கூறினார். பல உயிர்களை காப்பாற்ற காரணமாக இருந்த டைட்டானிக் சாவி லண்டனில் ஏலம் விடப்படுகிறது. 40 லட்சத்துக்கு மேல் ஏலம் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Saturday, April 11, 2009

சோவியத் விண்வெளி கதாநாயகன் சாதித்த தினம் இன்று (ஏப்ரல் 12 1961)


ஒரு காலத்தில் உலகின் வல்லரசாக திகழ்ந்த சோவியத் ரஷ்யாவும், பொருளாதார சரிவுக்கு பின்பும் பெரியண்ணன் பாணியை தொடரும் அமெரிக்காவும் 1960களில் விண்வெளி ஆராய்ச்சியில் போட்டி போட்டுக்கொண்டு ஈடுபட்டனர். இந்த போட்டியில் எப்போதுமே முந்திக்கொண்டது. ரஷ்யா தான். முதன் முதலில் வஸ்தோக் 1 என்ற விண்கலத்தில் யூரி ககாரின் என்பவரை அனுப்பி சாதனை செய்தது. அந்த சாதனைநாள்தான் இன்று.
மாஸ்கோ நகருக்கு மேற்கே க்ஸாட்ஸ்க் பகுதியில் உள்ள குளூஷினோ என்னும் இடத்தில் 1934ம் ஆண்ஐ மார்ச் 9ம் தேதி யூரி ககாரின் பிறந்தார். இப்பகுதி பின்னர் ககாரின் எனப் பெயரிடப்பட்டது. இவரது பெற்றோர் கூட்டு விவசாயப் பண்ணை ஒன்றில் பணியாற்றினர். பள்ளி படிப்பு முடிந்த பின்னர் சரடோவ் உயர் தொழிநுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சி பெற்றார். விமானியாக பகுதிநேரங்களில் பயிற்சி பெற்றார். 1955 இல் ஒரென்பூர்க் விமான பயிற்சி பள்ளியில் சேர்ந்தார். இந்த பயிற்சி மையத்தில் மிக்-15 ரக போர் விமானங்களை ஓட்ட பயிற்சி பெற்றார். இந்த பயிற்சியின் போது வலென்டினா கொர்யசோவா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் முதன் முதலாக நார்வே எல்லையிலுள்ள மூர்மன்ஸ்க் பகுதியில் இருக்கும் விமானப்படை தளத்தில் பணியாற்றினார்.
1960ம் ஆண்டில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை சோவிய அரசு தொடங்கியது. இந்த விண்வெளித் திட்டத்தின் கீழ் 20 விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரானார் யூரியும் ஒருவர். யூரி ககாரினுக்கு உடல் ரீதியிலும் மன ரீதியிலும் மிகவும் கடுமையான பயிற்சிகள் தரப்பட்டன. கடும் பயிற்சிக்குப் பின்னர் ககாரின், கெர்மன் டீட்டோவ் ஆகிய இருவரும் விண்வெளிப் பயணத்திற்குத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் ககாரின் மட்டும் விண்வெளியில் பயணிக்கும் முதல் மனிதராக அனுப்புவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதிஇதே நாளில் வஸ்தோக்1 விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றார். விண்கலத்தில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்த முதல் மனிதரும் இவரே. விண்கலம் 1மணி நேரம்48 நிமிடங்கள்பறந்தது. அதன்பின்னர் அவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு செய்யப்பட்டது.
இந்த விண்வெளி கதாநாயகனை இழந்து விடக்ககூடாது என்பதற்காக அதன்பின்னர் எந்த விண்பறப்புக்கும் அவரை அனுப்ப வில்லை. இருந்த போதிலும் 1968ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி விமானப்படை விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது பரிதாபமாக பலியானார் யூரி ககாரின்.

Friday, April 10, 2009

மக்கள் பிரச்சனைகளை மறக்க மத உணர்வுகளை தூண்டி


தேர்தலுக்கு தேர்தல் மக்கள்தான் ஓட்டுப்போடுகின்றார்கள். சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள், சிந்தனையாளர்கள் வலியுறுத்துகின்றனர். சுயசிந்தனைக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றுதான் ஓட்டுப்போடுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பே பிரசாரத்தை முடிக்க சொல்கிறார்கள். ஆனால் வாக்குப்பதிவுக்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே மக்களை குழப்பும், மக்கள் உணர்வுகளை தூண்டும் வேலைகளில் அரசியல்வாதிகள் இறங்கி விடுகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த நாட்டை பீடித்த பிரச்னைகளாக பொருளாதார சரிவு, வேலையின்மை, விலைவாசி உயர்வு ஆகியவைதான் சாதாரண பொது ஜனத்தின் கண்களுக்கு தெரிந்தது. ஆனால் இன்றோ வருண்காந்தி சொன்னதும், அதற்கு லல்லு பதில் சொன்னதும்தான் வாக்களார்கள் மனதில் எதிரொலிப்பதாக இருக்கிறது. இப்போது லேட்டஸ்டாக சீக்கியர்கள் படுகொலை வழக்கில் ஜெகதீஷ் டைட்லர் விடுவிக்கப்பட்டதும், சிதம்பரத்தின் மீது ஷூ வீசப்பட்டதும் சேர்ந்திருக்கிறது. இன்னும் இருக்கும் நாட்களுக்கும் இதுதான் எதிரொலிக்கப்போகிறது என்றே தெரிகிறது. யதார்த்த மனிதனின் பிரச்னைகளை யோசிக்கக்கூட விடாமல் பிரச்னைகளை உருவாக்கி, வாக்காளர்களை ஏமாற்றி உணர்வுகளை தூண்டும் நடவடிக்கைகள்தான் இப்போது நடக்கின்றன.
மனித மனதை நல்வழிப்படுத்த, தூய்மை படுத்த வந்த மதங்களை உணர்வு ரீதியாக தூண்டி, வேறுபடுத்தி, நீ வேறு, நான் வேறு என்று சண்டையிட வைத்து, நீ இந்த மதமா உனக்கு ஆதரவு நான். நீ அந்த மதமா உனக்கு ஆதரவு இதோ நான் இருக்கிறேன் என்று அரசியல் மேடைகள் முழங்குகின்றன. பக்கத்து வீட்டுக்காரனிடம் கேக், கொழுக்கட்டைகளை பகிர்ந்து கொண்டது போய் இப்போது மதவிரோதம் வளர்க்கிறது அல்லது இந்த அரசியல்வாதிகளால் வளர்த்தெடுக்கப்படுகிறது. இந்த தேர்தலும் அதற்கு விதிவிலக்கல்ல? எந்த தேர்தலில் மக்கள் பிரச்னை எதிரொலிக்கும் என்பதே அப்பாவி வாக்காளரின் கேள்வி? அதற்கு விடை சொல்வது யார்?

Thursday, April 9, 2009

இந்த நாளைய வரலாறு (ஏப்ரல் 11, 1961 )


நாய்களை போல யூதர்களை கொல்வதற்குஹிட்லருக்கு உதவிய அடால்ப் எச்சிமேன் என்பர்மீதான வழக்கு விசாரணை தொடங்கிய தினம்இன்று.
இவர் ஹிட்லர் ஆட்சியின் போது ஜெர்மன்எல்லைக்கு உட்பட நாடுகளில் வசித்த யூதர்களைபடுகொலை செய்ய காரணமாக இருந்தவர். இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த உடன்அமெரிக்க கூட்டுப்படைகளால் கைதுசெய்யப்பட்டார். ஆனால் சிறையில் இருந்துதப்பித்து விட்டார். போர் குற்றங்களுக்கானதீர்பாயத்தின் தீர்ப்புக்கு பயந்து தப்பித்து விட்டார். 1950ம் ஆண்டில் அர்ஜென்டினாவுக்குள் அடைக்கலம்புகுந்தார். அவரைப் போல பல போர் குற்றவாளிகள் இங்கு அடைக்கலம்புகுந்தனர். இருந்த போதிலும் 1960ம் ஆண்டு இஸ்ரேலின் உளவு படையினர்அடால்ப் எச்சிமேனை வளைத்து பிடித்து விட்டனர்.
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் நகரில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அடால்ப் எச்சிமேன் மீது 15 குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றில் மனிதஉரிமை மீறலுக்கு எதிரான குற்றங்களும் அடக்கம். 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்முன்பு குண்டு துளைக்காத கூண்டில் நிறுத்தி விசாரிக்கப்பட்டார். அடால்ப்எச்சிமேன் மீதான குற்றசாட்டுகளை முழுவதையும் 15 நிமிடங்களில் தலைமைநீதிபதி மோஸ்கி லாண்டாவ் வாசித்து முடித்தார்.
அதன் பின்னர் விசாரணை தொடங்கியது. அடால்ப் எச்சிமேனின் வழக்கறிஞர்வாதிடும் போது, தன் கட்சிக்காரர் குற்றமற்றவர் என்றும், நாஜி ஆட்சியாளர்ஹிட்லர் உத்தரவுப்படி நடந்து கொண்டதாகவும் கூறினார். விசாரணை பலமாதங்களாக தொடர்ந்து நடந்தது. இறுதியில் 1961ம் ஆண்டு டிசம்பரில் அவர்மீதான குற்றசாட்டுகள் உறுதி செய்யப்பட்டன. இதையடுத்து அவருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. 1962ம் ஆண்டு மேமாதம் டெல் அவிவ் நகரில்தூக்கிலிடப்பட்டார். யூதர்களை படுகொலை செய்த விவகாரத்தில் இவருடையவழக்குதான் மிகப்பெரிய வழக்கு. இதே போல மேலும் 12 நாஜி அதிகாரிகள்தூக்கிலிடப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.