Monday, June 8, 2009
மெல்லிய உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்
தென்மேற்கு பருவக்காற்று வீசும் தேனி பக்கம் சமீபத்தில் சென்றிருந்தேன். சென்னையில் இருந்து திருச்சி போய், திருச்சியில் இருந்து திண்டுக்கல் சென்று, திண்டுக்கல்லில் இருந்து தேனி செல்ல காலை 9.30 ஆகிவிட்டது. பஸ் ஸ்டாண்ட் எதிரே பிளாட்பாரத்தில் பழக்கடையுடன் இணைந்த ஜூஸ் கடையில் ஆரஞ்சு ஜூஸ் குடித்துக்கொண்டிருந்தேன். என் அருகில் கிராமத்து தம்பதியர் நின்றிருந்தனர். அவர்களின் தோற்றத்தை பார்க்கும் போது 45 வயது இருக்கும் என்று நினைக்கிறேன். அவர்களும் ஜூஸ் சாப்பிட்டனர். சில நிமிடங்களில் அவர்கள் அருகில் இன்னொரு ஆண் வந்து நின்றார். அவரை சில நிமிடங்கள் வரை அவர்கள் இருவரும் கவனிக்கவில்லை. திடீரென கவனித்த அந்த தம்பதியினர் என்னய்யா இந்த பக்கம் என்று விசாரித்தனர். சும்மா ஒரு ஜோலியா வந்தேன் என்றார். இவர்கள் ஜூஸ் குடிப்பதை பார்த்து அவருக்குள் ஒரு ஏக்கம் இருந்திருக்க வேண்டும். தம்பதியரில் ஆண், தன் மனைவியை கண்ணால் ஜாடை காட்டி என்ன இவருக்கு ஜூஸ் வாங்கி கொடுக்கலாமா என்று அனுமதி கேட்டார். அதற்குள் அந்த மனிதர் இதை புரிந்து கொண்டார். ஜூஸ் கடைக்காரரிடம் சத்தமாக எனக்கு ஒரு ஜூஸ் போடுப்பா என்றார். அந்த சத்தத்தில் நீங்க வாங்கிக் கொடுக்காட்டி என்ன நான் குடிக்கமாட்டேனா என்ற அர்த்தங்கள் பொதிந்திருந்தது. இது போன்ற மெல்லிய உணர்வுகள் தென் மாவட்டங்கள் பக்கம் அதிகமாக இருக்கிறது. மெல்லிய உணர்வுகள், ஏக்கங்கள் புறக்கணிக்கும் போது ஈகோவாக, கோபமாக வெளிப்படுகிறது என்று கருதுகிறேன். எனவே மெல்லிய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன்.
Subscribe to:
Post Comments (Atom)
அப்பாடி..
ReplyDelete