Friday, May 1, 2009
தமிழக வேட்பாளர்களின் கிரிமினல் பட்டியல் எங்கே?
உ.பி.,யில்தான் கிரிமினல் வேட்பாளர்கள் அதிகம், பீகாரில் அதிகம் என்று தேர்தல்களம் 2009 பக்கத்தில் தமிழ் பத்திரிகைகள் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டன. ஆனால் தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீதுள்ள கிரிமினல் வழக்குகள் பற்றி இந்த பத்திரிகைகள் கண்டு கொள்ளாதது ஏன். வேட்பு மனுத்தாக்கல் முடிந்ததும் அன்றைய தினமே தொகுதி தேர்தல் அதிகாரியின் நோட்டீஸ் போர்ட்டில் ஒட்டப்பட்டிருக்கும் தகவல்களை சேகரித்து பகிரங்கப்படுத்தும் வேலையில் இருந்து தமிழ் பத்திரிகைகள் நழுவியது ஏன்? அல்லது செய்தியாளர்கள் திரட்டிக் கொண்டு வந்து கொடுத்த தகவல்களை வெளியிட ஆசிரியர், முதலாளிகளுக்கு என்ன தயக்கம்?
தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் கிரிமினல் பிண்ணனி என்ன என்பது தெரியாமலேயே வாக்காளன் ஓட்டுப்போட வேண்டுமா? வேட்பாளர்களின் குற்ற நிலவரம் பற்றி தெரிந்து கொள்ளத்தானே இந்த மாதிரி ஒரு முறையை தேர்தல் ஆணையம் கொண்டு வந்தது. தேர்தல் ஆணையம் தெரிவிப்பதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஏன் அச்சம் என்று யாருக்குமே புரியவில்லை.
இந்த பட்டியலில் தென் மாவட்டத்தை ஆளும் தி.மு.க. புள்ளியின் பெயரும் இடம் பெற வேண்டியிருக்கும் அதனால் நமக்கேன் வம்பு என்று பத்திரிகைகள் கருதுகின்றனவோ. அதுவாகத்தான் இருக்கும். வேறு என்ன இருக்கப்போகிறது. ஒருவரின் பட்டியலை வெளியிட வேண்டியிருக்குமே என்பதற்காக யாருடைய தகவல்களையும் வெளியிடாமல் இருப்பது என்னநியாயம்? தகவல் அறியும் உரிமை சட்டம் என்று இருக்கிறது. பத்திரிகைகள் வெளியிட மறுக்கும் உண்மைகளை வெளிக்கொணருவதற்கு என்ன செய்வது? ஏன் இந்த மூடி மறைப்பு?
இது ஒரு புறம் இருக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் இணையத்தளத்தை பார்த்தபோது அதிலும் வேட்பாளர்களின் குற்றப்பட்டியல் இல்லை. வேறு சில மாநிலங்களில் எல்லாம் இந்த தகவல் உடனுக்குடன் அப் லோட் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலை? நரேஷ்குப்தா சொல்லத்தான் முடியும். தேர்தல் பணியாற்றுகின்றவர்கள் மாநில அரசு அதிகாரிகள் தானே? ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 20க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கொடுத்த அபிடவிட்டை ஸ்கேன் செய்து அப் லோட் செய்ய எவ்வளவு நேரமாகும். ஏன் இந்த தாமதம்? சரி 13ம் தேதி காலை 8 மணிக்குள்ளாவது இந்த தகவல்களை தேர்தல் இணையத்தளத்தில் பார்க்கலாமா? அல்லது அதற்குள்ளாவது பத்திரிகைகள் பட்டியல் வெளியிடுமா? இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வது யார்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment