Thursday, March 26, 2009

தைலாபுரத்தில் இருந்து போயஸ் தோட்டத்துக்கு...

தமிழ்குடிதாங்கி மருத்துவர் ஐயா ராமதாஸ் மீண்டும் போயஸ் தோட்டத்து பக்கம் கால்பதித்திருக்கிறார். எப்போதுமே வெற்றிக்கூட்டணி தேடி செல்லும் அவரின் கணக்கு சரியா தவறா? என்பது மே 16ம் தேதி 11 மணிக்கு மேல் தெரியும். தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்திருக்கும் ராமதாஸ் 1980களுக்கு முன்பு திண்டிவனத்தில் கிளினிக் வைத்திருந்த சாதாரண மருத்துவர்தான். வன்னியர் சங்கத்தின் மூலம்தான் அவரின் அரசியலுக்கான விதை தோன்றியது.
வன்னியருக்கு இட ஒதுக்கீடு கோரி திண்டிவனம்&சென்னை தேசிய சாலையில் மரங்களை வெட்டிப்போட்டு அவர் தொடங்கிய போராட்டம்தான் நாடு முழுவதும் அவரை திரும்பி பார்க்க வைத்தது. இந்த போராட்டத்தால் ஒரு வாரத்துக்கும் மேலாக தமிழகமே ஸ்தம்பித்தது. இந்த ரத்தகளறிதான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை பெற்றுத்தந்தது. அதன் விளைவாக பாட்டாளி மக்கள் கட்சி உதயமானது. வடமாவட்டங்களில் அசைக்கமுடியாத கட்சியாக இன்றளவும் நிலைத்திருக்கிறது. மக்களின் உடலுக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர் ஐயா. தேர்தலுக்கு தேர்தல் வெற்றியின் ரகசியத்தையும் அறிந்து வைத்திருப்பதில் வல்லவராய் திகழ்கிறார்.
முதல் முதலில் அவரின் கட்சி சார்பில் மத்திய அமைச்சராக இருந்த தலில் எழில்மலை ராதாசை மரபு திமிராளி என்று விமர்சனம் செய்திருக்கிறார். இதன் பின்னர்தான் அடுத்தவர்களை நம்பாமல், குடும்பத்தை அரசியலில் ஈடுபடுத்த மாட்டேன் என்ற கொள்கையை தளர்த்தி அன்புமணியை அரசியலில் இறக்கினார்.
அவரின் அதிரடி போராட்டங்கள் பல விமர்சனங்களை சந்தித்திருக்கிறது. விமர்சனங்களோடு சரி எந்தவித விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் சோகம்.
நடிகர்களை தேடி இளைஞர்கள் போக்கூடாது, மது ஒழிப்பு போன்ற பிரசாரங்கள் எந்தவிதபலனையும் ஏற்படுத்தவில்லை. இலங்கை தமிழர்கள் போராட்டத்தில் அடுத்தவர்களை குறை சொல்லும் முன் தன் கட்சி எம்.பி.க்களையோ அல்லது அமைச்சர்களையோ ராஜினாமா செய்யும்படி எதுவும் சொல்லமால் இருந்தது ஏன் என்பது அப்பாவி தமிழனின் கேள்வி.

ராமதாசிடம் சில கேள்விகள்:1. ரிலையன்ஸ் சில்லறை வணிகத்துக்கு எதிரான போராட்டம் என்ன ஆச்சு?
2. அடுத்து அதிமுக ஆட்சி வந்தால் டாஸ்மாக் கடைகளை மூட சொல்வீர்களா?
3. உங்கள் பிள்ளையை மட்டும் ஏன் தேர்தலில் போட்டியிட வைப்பதில்லை?
ராமதாசின் ஒரே சாதனை: மக்கள் தொலைகாட்சி, தமிழ் ஓசை பத்திரிகை ஆகியவற்றில் தமிழ் ஆட்சி செய்வது.

Wednesday, March 18, 2009

தேர்தல் திருவிழா: கிராமத்தில் தொடங்கும் கூறு


ஜூன் 2ம் தேதி இந்த நாட்டின் பிரதமராக யார் பதவியேற்பார் என்ற ஊடகங்களின் பிரசாரத்தில் பாதிக்கப்படாத குக்கிராமத்து ராமசாமிக்கும், குப்புசாமிக்கம் அதில் அக்கறை இல்லை. அந்த குக்கிராமத்து பொதுஜனம் நம்ம ஜாதி, அதை கிராமத்தில் அடங்கியிருக்கும் தொகுதியை அந்த கட்சிக்கு விட்டுக்கொடுக்கக்கூடாது. கூட்டணியின் தலைமையான நாம்தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூட்டணிக்குள் குஸ்தி சண்டைகள்நடக்கின்றன.
ஜாதியில்லை. வேற்றுமையில் ஒற்றுமை என்று முன்பருவ கல்வியில் இருந்து தொடரும் கற்பிதங்கள் நிஜத்துக்கு மாறாகவே இருக்கின்றன. கூட்டணி பேச்சுவார்த்தைகளில்தான் வடை, காப்பியோடு அரசியல்வாதிகளின் வாயில் மென்று துப்பப்படுகிறது ஜாதி. அந்த தொகுதியில் நம்ம ஆள். இந்த தொகுதியில் நம்ம ஆள் என்று உடைபடுகின்றன நிஜங்கள். நீ என் ஜாதியை சேர்ந்தவன். நீ எனக்குத்தான் ஓட்டுப்போடனும். அவனுக்கு போட்டாயோ தொலைந்தாய் என்று கிராமத்து கிளைசெயலாளர்களின் மிரட்டல்கள். மாவட்டத்திடம் போய் கும்பிடு போடும் கிளைசெயலாளர் வேறு என்ன செய்வான்? மாவட்டம் மாநிலத்திடம் கும்பிடுபோடவேண்டும். மாநிலம் மத்தியில் கும்பிடு போடவேண்டும். குக்கிராமத்தில் தொடங்கும் கூறு போடல்தான் நாடுவரை நீள்கிறது. கூறுபோடுதில் பிணக்குகள் உ.பி., முதல் கேரளா வரை தொடர்கிறது.
ஒரிசாவில் பாரதிய ஜனதாவை இன்னும் துணை வைத்திருந்தால் கிறிஸ்தவர்கள் ஓட்டுப்போடமாட்டார்கள் என்பதால்தான், நவீன் பட்நாயக் தகுந்த நேரத்தில் பாரதிய ஜனதாவை கழற்றிவிட்டு விட்டார். எல்லாம் ஓட்டு செய்கின்ற மாயம். தெலுங்கானாவை பிரிக்கக்கூடாது என்று 5 ஆண்டுக்கு முன்பு மல்லுக்கட்டிய சந்திரபாபு நாயுடு இப்போது சந்திரசேகர ராவுடன் கைகோர்க்கிறார். எல்லாம் ஓட்டு செய்யும் மாயம். மாநிலத்தை, நாட்டை கூறு போட்டு குளிர் காய வருகிறது கூட்டம். எல்லாம் மே 16ம் தேதி வரைதான். அப்புறம் குப்புசாமியும், ராமசாமியும் வழக்கம் போல நாதியற்றவர்கள்தான். அவர்களுக்கு வழக்கம்போல ஆட்டுக்குட்டியும், நாய் குட்டியும்தான் துணை.

வருண் காந்தி: புறக்கணிக்கப்பட்ட குழந்தை

செய்திக்கு கீழே வீடியோவை பார்க்கவும்

நேரு குடும்பத்து வாரிசு வருண்காந்தி, அந்த குடும்பம் கட்டி காப்பாற்றி வந்த மதஒற்றுமைக்கு வேட்டு வைத்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ஆனால் உண்மையில் இதில் உளபூர்வமான விஷயமும் ஒளிந்துகிடப்பதுதான் நிஜம். இந்திராவின் பிள்ளைகளில்் ராஜிவ் விமான ஓட்டி என்று அரசியல் ஆர்வமற்று போனதால், சஞ்சய் காந்தியை, இந்திரா முன்னிலைப்படுத்தினார் என்றும், பின்னர் அதுவே அவருக்கு குடைச்சலாக மாறி விட்டது. அதன் பின்னர் நிகழ்ந்த அவரின் மரணத்தில் இன்று வரை தீர்க்கப்படாத ரகசியம் ஒளிந்து கிடக்கிறது. இந்திராவின் மரணத்துக்கு பின்னர் வேறு வழியின்றி அரசியலுக்கு நுழைந்த ராஜிவ், அவரது மரணத்துக்கு பின்னர் அரசியலுக்கு வந்த இந்தியாவின் இத்தாலி மருமகள் சோனியா, தன் மகன் ராகுலை காங்கிரசில் எல்லாமாய் மாற்றிவிட்டார். வட இந்திய பத்திரிகைகள் மட்டுமின்றி, தென்னிந்திய பத்திரிகைகளும் ராகுல் பற்றி தினமும் ஒரு பத்தியாவது செய்தியை வெளியிட்டு விடுகின்றன. மரத்தடியில் கல்லூரி மாணவிகளுடன் குழுமியிருக்கும் படங்கள் வாராம் ஒன்றாவது கலர் புல்லாக வெளிவருகின்றன. இவையெல்லாம் மேனகாவின் மகன், வருணின் மனதில் நம்மை பற்றிய செய்திகள் வருவதில்லையே என்ற ஒரு ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். அதன் விளைவாகவே அவர் அதிரடியாக பேசி ஒரே நாளில் வட இந்திய பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாகவும், தென்னிந்திய பத்திரிகைகளில் முதல் பக்கத்து செய்தியாகவும், சற்றுமுன் வந்த தகவலாக இன்னும் வருண் பற்றிய செய்திகளுக்கு தொலைகாட்சி செய்தி ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
வருண் அதிரடியாக பேசியது, தவறு, தவறல்ல என்ற வாதத்துக்கு போகும் முன், அவரை போல முன்பு பேசிய நரேந்திரமோடிக்கு நம்நாட்டின் உச்சநீதிமன்றம் கொடுத்த கண்டன கனைகள் என்ன? கோத்ரா அறிக்கைகளில் வைக்கப்பட்ட குட்டுகளுக்கு குறைவில்லை. அவர் பேசிய மேடை முழக்கங்கள் என்ன என்பதும் ஊரறிந்தவிஷயம். மீடியாக்களும், நீதி அமைப்புகளும் அவருக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு இருக்க தேர்தலில் அவர் நிச்சயம் தோற்றுப்போவார் என்று அவரை தவிர தேசமே எதிர்பார்த்தது. நடந்தது என்ன? அவரின் ஆவேசமான பேச்சை ரகசியமாக பலர் மனதுக்குள் ரசித்ததன் விளைவுதான் அவருக்கு வெற்றியை கொடுத்திருக்கிறது. இந்த அதிரடிகளை பார்த்து வந்த வருண் இப்போது புதிதாய் கிளம்பியிருக்கிறார். இத்தனை நாள் ஒதுக்கப்பட்டிருந்தேன். இதோ நானும் இருக்கிறேன். என்னையும் கவனியுங்கள் என்ற புறக்கணிக்கப்பட்ட ஒரு குழந்தையை போல அவர் எட்டிப்பார்த்திருக்கிறார். அவ்வளவுதான். அதற்கு அவருக்கு, எப்போதுமே சர்ச்சையை கிளப்பும் இந்து,முஸ்லீம் பேச்சு கைகொடுத்திருக்கிறது. அவ்வளவுதான்.