Saturday, December 31, 2011

உதவி செய்யும் பழக்கத்தை வளர்த்தெடுப்பது எப்படி?

உதவி செய்வது என்றால் பண உதவி என்பது மட்டும் அர்த்தம் அல்ல. வங்கி அல்லது தபால் அலுவலகத்துக்கு சென்றால் நான் உங்களுக்கு உதவலாமா? என்று அழகாக எழுதப்பட்ட ஒரு பெயர் பலகை மட்டும் வைக்கப்பட்டிருக்கும். அந்த பெயர் பலகைக்கு அருகில் யாருமே இருக்கமாட்டார்கள்.
இன்றைய காலத்தில் உதவி என்ற வார்த்தையும் இப்படித்தான் அனாதையாக யாரும் கேட்பாரற்று கிடக்கிறது. அதே நேரத்தில் சத்தம் இல்லாமல் சிலர் உதவிகளை செய்து வருகின்றனர் என்பதும் நிதர்சனமான உண்மை.

உதவி என்றால் பண உதவி மட்டும்தானா? இல்லை. பணம் மட்டும் பரிமாறிக்கொள்வது அதனைத் திருப்பி கொடுப்பது உதவி அல்ல.

எந்தெந்த வகைகளில் உதவலாம்?

1. நீங்கள் பள்ளியில் அல்லது கல்லூரியில் படிக்கும் மாணவராக இருக்கும் பட்சத்தில் ஆசிரியர் நடத்தும் பாடம் உங்களுக்கு புரியும்படி இருக்கும். அதே நேரம் உங்களின் சக நண்பருக்கு அந்த பாடம் புரியாமல் இருக்கலாம். அதை உங்கள் சக நண்பருக்கு புரியும்படி சொல்லி கொடுத்து உதவலாம். எப்படி பாடத்தை புரிந்து படிக்க வேண்டும் என்று கூறலாம்.

2. கல்லூரி முடிந்து வேலை தேடும் இளைஞராக இருந்தால் வேலை வாய்ப்பு தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம். ஒரு இடத்துக்கு நேர்முகதேர்வுக்கு செல்லும் போது உங்களிடம் அந்த நிறுவனம் எதிர்பார்க்கும் தகுதி இல்லாவிட்டால் உங்கள் நண்பருக்கு அந்த தகவலை சொல்லலாம். இப்போது சில பெரிய நிறுவனங்கள் மொத்தமாக ஆட்களை தேர்வு செய்கின்றன. அப்போது நீங்கள் அங்கு பெரிய பொறுப்பு வகிக்க நேரிடும் போது உங்களின் சரியான தகுதியான நண்பர்களுக்கு உதவுங்கள்.

3. உங்கள் பக்கத்துவீட்டுக்கார ர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால், அவர் ஊருக்கு புதிதாக இருந்தால் மருத்துவமனை எங்கிருக்கிறது. குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவமனை எது என்று தகவல் கொடுக்கலாம். ஆரோக்கியமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உதாரணமாக தண்ணீரை சுட வைத்து குடியுங்கள் என்பது போல சுருக்கமாக கூறலாம். வந்துட்டான்யா அறுவை பார்ட்டி என்பது போல இருக்கக் கூடாது.

4. சிலருக்கு ரேஷன் கார்டு எங்கு வாங்குவது? மொபைல் போனில் குறுந்தகவல் எப்படி அனுப்புவது என்ற விஷயங்கள் கூட தெரியாமல் இருக்கும். அத்தகையவர்களுக்கு அவர்களே அதனை செய்து கொள்வதற்கு உதவ வேண்டும். எப்படி குறுந்தகவல் டைப் செய்வது என்பது போன்ற வழிமுறைகளை சொல்லிக்கொடுக்கலாம்.

5. ஒருவர் உங்களிடம் முன்பின் அறியாதவர் யாரும் பண உதவி கேட்கமாட்டார்கள். உறவினர்கள் அல்லது நண்பர்கள் மட்டுமே பண உதவி கேட்பார்கள். அத்தகையவர்களுக்கு, உங்களிடம் இருக்கும் பட்சத்தில் கொடுத்து உதவுங்கள். கொடுக்க கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்லாமல் தவிக்க விட வேண்டாம். இல்லை என்பதை புரியும்படி சொல்லுங்கள்.

6. மாதம் தோறும் சம்பளம் வாங்கிய உடன் குறைந்த து 4 ஏழை எளியர்வர்களுக்காவது உணவு பொட்டலங்கள் வாங்கிக் கொடுங்கள். பிறந்த நாளின் போதும் இதே போல செய்யலாம். தாய், தந்தையின் நினைவு நாளில் இது போல செய்வது சிறந்த தாகக் கருதப்படுகிறது. குறிப்பாக இந்த உதவியை செய்யும் போது உங்கள் மனம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. இந்த உதவியை ஒரு முறை செய்து பாருங்கள். உங்களுக்கு அன்றைக்கு நன்றாக பசி எடுக்கும்.இது என் அனுபவத்தில் உணர்ந்த ஒன்று.

7. உதவி செய்வதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது. உதவி செய்தோம் என்று அடிக்கடி சொல்லிக்காட்டக்கூடாது. பதில் உதவியை எதிர்பார்க்க க் கூடாது. எதிர்பார்ப்புடன் கூடிய உதவியானது அதை செய்பவருக்கும், ஏற்பவருக்கும் என இருதரப்புக்குமே கஷ்டத்தையே கொடுக்கும்.

நாளை இன்னொரு விஷயம் குறித்து சொல்கிறேன்.

No comments:

Post a Comment