Saturday, December 31, 2011

உதவி செய்யும் பழக்கத்தை வளர்த்தெடுப்பது எப்படி?

உதவி செய்வது என்றால் பண உதவி என்பது மட்டும் அர்த்தம் அல்ல. வங்கி அல்லது தபால் அலுவலகத்துக்கு சென்றால் நான் உங்களுக்கு உதவலாமா? என்று அழகாக எழுதப்பட்ட ஒரு பெயர் பலகை மட்டும் வைக்கப்பட்டிருக்கும். அந்த பெயர் பலகைக்கு அருகில் யாருமே இருக்கமாட்டார்கள்.
இன்றைய காலத்தில் உதவி என்ற வார்த்தையும் இப்படித்தான் அனாதையாக யாரும் கேட்பாரற்று கிடக்கிறது. அதே நேரத்தில் சத்தம் இல்லாமல் சிலர் உதவிகளை செய்து வருகின்றனர் என்பதும் நிதர்சனமான உண்மை.

உதவி என்றால் பண உதவி மட்டும்தானா? இல்லை. பணம் மட்டும் பரிமாறிக்கொள்வது அதனைத் திருப்பி கொடுப்பது உதவி அல்ல.

எந்தெந்த வகைகளில் உதவலாம்?

1. நீங்கள் பள்ளியில் அல்லது கல்லூரியில் படிக்கும் மாணவராக இருக்கும் பட்சத்தில் ஆசிரியர் நடத்தும் பாடம் உங்களுக்கு புரியும்படி இருக்கும். அதே நேரம் உங்களின் சக நண்பருக்கு அந்த பாடம் புரியாமல் இருக்கலாம். அதை உங்கள் சக நண்பருக்கு புரியும்படி சொல்லி கொடுத்து உதவலாம். எப்படி பாடத்தை புரிந்து படிக்க வேண்டும் என்று கூறலாம்.

2. கல்லூரி முடிந்து வேலை தேடும் இளைஞராக இருந்தால் வேலை வாய்ப்பு தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம். ஒரு இடத்துக்கு நேர்முகதேர்வுக்கு செல்லும் போது உங்களிடம் அந்த நிறுவனம் எதிர்பார்க்கும் தகுதி இல்லாவிட்டால் உங்கள் நண்பருக்கு அந்த தகவலை சொல்லலாம். இப்போது சில பெரிய நிறுவனங்கள் மொத்தமாக ஆட்களை தேர்வு செய்கின்றன. அப்போது நீங்கள் அங்கு பெரிய பொறுப்பு வகிக்க நேரிடும் போது உங்களின் சரியான தகுதியான நண்பர்களுக்கு உதவுங்கள்.

3. உங்கள் பக்கத்துவீட்டுக்கார ர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால், அவர் ஊருக்கு புதிதாக இருந்தால் மருத்துவமனை எங்கிருக்கிறது. குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவமனை எது என்று தகவல் கொடுக்கலாம். ஆரோக்கியமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உதாரணமாக தண்ணீரை சுட வைத்து குடியுங்கள் என்பது போல சுருக்கமாக கூறலாம். வந்துட்டான்யா அறுவை பார்ட்டி என்பது போல இருக்கக் கூடாது.

4. சிலருக்கு ரேஷன் கார்டு எங்கு வாங்குவது? மொபைல் போனில் குறுந்தகவல் எப்படி அனுப்புவது என்ற விஷயங்கள் கூட தெரியாமல் இருக்கும். அத்தகையவர்களுக்கு அவர்களே அதனை செய்து கொள்வதற்கு உதவ வேண்டும். எப்படி குறுந்தகவல் டைப் செய்வது என்பது போன்ற வழிமுறைகளை சொல்லிக்கொடுக்கலாம்.

5. ஒருவர் உங்களிடம் முன்பின் அறியாதவர் யாரும் பண உதவி கேட்கமாட்டார்கள். உறவினர்கள் அல்லது நண்பர்கள் மட்டுமே பண உதவி கேட்பார்கள். அத்தகையவர்களுக்கு, உங்களிடம் இருக்கும் பட்சத்தில் கொடுத்து உதவுங்கள். கொடுக்க கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்லாமல் தவிக்க விட வேண்டாம். இல்லை என்பதை புரியும்படி சொல்லுங்கள்.

6. மாதம் தோறும் சம்பளம் வாங்கிய உடன் குறைந்த து 4 ஏழை எளியர்வர்களுக்காவது உணவு பொட்டலங்கள் வாங்கிக் கொடுங்கள். பிறந்த நாளின் போதும் இதே போல செய்யலாம். தாய், தந்தையின் நினைவு நாளில் இது போல செய்வது சிறந்த தாகக் கருதப்படுகிறது. குறிப்பாக இந்த உதவியை செய்யும் போது உங்கள் மனம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. இந்த உதவியை ஒரு முறை செய்து பாருங்கள். உங்களுக்கு அன்றைக்கு நன்றாக பசி எடுக்கும்.இது என் அனுபவத்தில் உணர்ந்த ஒன்று.

7. உதவி செய்வதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது. உதவி செய்தோம் என்று அடிக்கடி சொல்லிக்காட்டக்கூடாது. பதில் உதவியை எதிர்பார்க்க க் கூடாது. எதிர்பார்ப்புடன் கூடிய உதவியானது அதை செய்பவருக்கும், ஏற்பவருக்கும் என இருதரப்புக்குமே கஷ்டத்தையே கொடுக்கும்.

நாளை இன்னொரு விஷயம் குறித்து சொல்கிறேன்.

Friday, December 30, 2011

பாசிடிவ் ஆக இருப்பது எப்படி?


தமிழ் சினிமா வரலாற்றை எடுத்துக் கொண்டால் எம்.ஜி.ஆருக்கு எவ்வளவு வரவேற்பு இருந்ததோ அதைப்போல வில்லன் நம்பியாருக்கும் வரவேற்பு இருந்தது. சத்யராஜ் கதாநாயகனாக வரவேற்பு பெற்றதை விட வில்லனாக இருந்த போது அவருக்கு கிடைத்த வரவேற்பு அளவு கடந்த தாகும்.
எதற்கு இந்த உதாரணம்? நமது வாழ்க்கையில் எப்போதுமே சாதகமான, நல்ல எண்ணங்களுக்கு இடம் கொடுக்கிறோமோ இல்லையோ, பாதகமான , கெடுதலான, நேர்மறையான எண்ணங்களுக்குத்தான் நம் மனதில் இடம் கொடுத்து வருகிறோம். நல்லது மனதில் பதிவதை விட கெடுதல் மனதுக்குள் எளிதாக பதிந்துவிடுகிறது என்பதும் உண்மையே. என்னேரமும் கெட்டதையே நினைத்து கொண்டிருக்கவும் சிலர் பழகி விடுகின்றனர். உலகமே கெட்டதாகி வரும்போது நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதும் பலரின் தத்துவக் கருத்தாக உள்ளது.
உண்மையில் நல்ல எண்ணங்களுடன் பாசிட்டிவ் ஆக இருக்கவே முடியாதா?
நிச்சயம் முடியும்? எதையும் சாதகமாக பார்க்க தொடங்கிவிட்டால் எதிர்மறையான எண்ணங்களை நாளடைவில் மனதில் இருந்து நீக்கிவிடலாம்.
சாதகமான எண்ணங்களை நோக்கி மனதை திருப்புவது எப்படி?

1. முடியாது என்று சொல்வதை நிறுத்துங்கள்
2. எந்த செயலுக்கும் முடிவான ஒன்று என்பது இல்லை.
3. யாரையும் வெறுக்காதீர்கள், அவமதிக்காதீர்கள்
4. எதையும் வெளிப்படையாக பேசுங்கள்
5. உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாதீர்கள்
6. உங்கள் மதம் போதிக்கும் தத்துவங்களை மனதில் அடிக்கடி சொல்லுங்கள்
7. உங்களுக்கு பிடித்தமான கடவுளை பிரார்த்தியுங்கள்
8. நெகட்டிவ் ஆன எண்ணங்களை ஏற்படுத்துபவர்களை தவிருங்கள்
9. நெகட்டிவ் எண்ணங்களை அதிகரிக்கும் திரைப்படங்களை பார்க்காதீர்கள்
10. அப்துல் கலாம், விவேகானந்தர் போன்றோர் எழுதிய புத்தகங்களை படியுங்கள்.

இதனை தவறாமல் கடைபிடித்தால் உங்கள் மனது கொஞ்சம், கொஞ்சமாக சாதகமான எண்ணங்களை நோக்கி திரும்பும். பாசிட்டிவ் ஆக இருந்தால் படபடப்பு ஏற்படாது. கோபம் வராது. மனது எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும்.முயற்சித்துப் பாருங்கள்.

Thursday, December 29, 2011

நிகழ்காலத்தில் இருப்பதால் என்ன நன்மை?

கற்பனையில் உழன்று கொண்டிருக்கமால் நிகழ்காலத்தில் இருக்க பழகிக் கொண்டால், அதைவிட வரம் என்பது வேறு இல்லை. அதனால் கிடைக்கும் நன்மைகள்;

1. அடுத்தவர்கள் பேசும்போது என்ன சொன்னீங்க என்று கேட்க தேவையில்லை
2. நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியும்.
3. இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்துக்களை தவிர்க்க முடியும்
4. மாணவர்களாக இருந்தால் ஆசிரியரின் பாடங்கள் புரியும்
5. வேலை செய்பவர்களாக இருந்தால் அலுவலகத்தில் கவனமாக செயல்பட முடியும்.
6. தொழிலில் புதிய யுத்திகளை செயல்படுத்த முடியும்.
7. பேசுவதில் தெளிவு ஏற்படும்(கற்பனையில் இருந்தால் வார்த்தைகள் தடுமாறும் )
8. முக்கியமாக எவ்வளவு நேரத்தை நாம் வீணாக்குகிறோம் என்பது புரியும்
9. அனாவசிய குழப்பங்கள் தீரும்
10. சாதிப்பதில் கவனம் ஏற்படும்

Tuesday, December 27, 2011

நிகழ்காலத்தில் இருப்போம்


கடந்த காலம், எதிர்காலத்தை பற்றி ஏன் நினைக்க வேண்டும்?

மனிதர்களின் இயல்பானது கடந்த காலத்தை நினைத்து துன்ப ப்படுவது அல்லது எதிர்காலத்தை எண்ணி கவலைப்படுவது. கடந்தகாலம், எதிர்காலம் இரண்டையும் நினைத்துக்கொண்டே உழன்று கொண்டே இருப்பதுதான்.நாள் ஒன்றுக்கு 24 மணிநேரம் உள்ளது. தூங்குவதற்கு 8 மணி நேரம் செலவிடுவது போல 16 மணி நேரத்துக்கும் மேலாக நாம் கடந்த காலத்தை பற்றியும், எதிர்காலத்தை பற்றியும் நினைத்துக்கொண்டே இருந்தால். நிகழ்காலத்தை பற்றி நாம் நினைக்கிறோமா என்ற கேள்வி எழுகிறதல்லவா?
இதனால் நேரம் விரையம் ஆகியது என்பது புரிகிறதல்லவா?

கடந்த காலத்தை பற்றி நினைப்பதால் எழும் விளைவுகள்
1. மனசோர்வு
2. மனதில், மூளையில் ஏற்படும் வேண்டாத பதிவுகள்
3. செயலில் வேகமின்மை.
4. முடிவு எடுக்க முடியாமல் திணறுதல்
5. அல்சர் போன்ற வியாதிகள்
6. மனபீதி, குழப்பம் உள்ளிட்டவை

எதிர்காலத்தை பற்றி நினைப்பதால் ஏற்படும் விளைவுகள்

1. எந்நேரமும் கற்பனையில் இருப்பது
2. நிறைவேறுமா என்று தெரியாமல் ஆசைப்படுவது
3. நமக்கு உண்மையில் தகுதி இருக்கிறதா என்று தெரியாமல் குழப்பம்
4. நாளை என்ன நடக்குமோ என்ற பயம், பீதி

நிகழ்காலத்தில் எப்படி இருப்பது?
வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு தினமும் செல்கிறோம். நம் வீட்டில் இருந்து கோவிலுக்கு போது எத்தனை அடிகள் எடுத்து வைக்கிறோம் என ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக்கொண்டே செல்லுங்கள். தினமும் இப்படி செய்தால் நீங்களாகவே கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும்போது எண்ணிக்கொண்டே செல்லும் பழக்கத்துக்கு வந்து விடுவீர்கள். பாதையில் சாணி, குப்பைகள் இருந்தாலும் அதையெல்லாம் கவனித்து, ஒதுங்கி செல்வீர்கள். நடப்பதில் கவனம் இருக்கும்.
உங்கள் வீடு இரண்டாம் மாடியில் இருக்கிறது என்றால் உங்கள் வீட்டுக்கு செல்வதற்கு எத்தனை படிகள் இருக்கிறது என்று எண்ணிப்பார்த்திருக்கிறீர்களா? பலருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இனி படிகளை எண்ணிக்கொண்டே செல்லுங்கள். இப்போது உங்களுக்கு படியில் என்ன நிறத்தில் பெயிண்ட் அடித்திருக்கிறார்கள். ஒரு சில படிகள் லேசாக பெயர்ந்திருக்கின்றன. சுண்ணாம்பு ஒட்டியிருக்கிறது என்ற சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் கவனத்துக்கு வரும்.
இப்படித்தான் ஒவ்வொரு செயலையும் நிகழ்காலத்தில் செய்ய வேண்டும். நிகழ்காலத்தில் இருப்பதால் என்ன நன்மைகள் என்பது பற்றி நாளை சொல்கிறேன்.

நச்சுன்னு நாலு வார்த்தை

வாழ்க்கை என்பது பல்வேறு விதிகளைக் கொண்ட நடுவர் அற்ற ஒரு விளையாட்டு. புனிதமான நூல்கள் உட்பட எந்த ஒரு புத்தகத்தின் ஆலோசனையையும் பெறுவதையும் விட அந்த விளையாட்டின் பார்வையாளராக நீங்கள் இருக்கலாம். அந்த வாழ்க்கையில் நீங்களே விளையாடவும் செய்யலாம்.
ஜோசப் பிராட்ஸ்கி,
ரஷ்ய கவிஞர்.

Monday, December 26, 2011

நைட் ஷிப்ட்டில் அவதிப்படுகிறீர்களா? அதில் இருந்து தப்பிக்கும் வழி


இரவு எட்டு மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை ஒரு மனிதன் தூங்க வேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதி. ஆனால் தற்போதைய அவசர உலகத்தில் பணம் சம்பாதிக்கும் உலகத்தில் இதையெல்லாம் யாரும் பொருட்படுத்துவதில்லை.
இரவு பணியால் விளையும் உடல் நலக்கேடுகள் என்னென்ன?
உடல் குண்டாகுதல்
கோபம் அதிகரித்தல்
வயிற்றுக்கோளாறுகள்
செரிமான உறுப்புகள் கெட்டுப்போதல்
மனைவியுடன் சண்டை வரும்
நீங்கள் பகலில் தூங்கும் போது குழந்தைகள் சிரித்து விளையாடினால் உங்களுக்கு பிடிக்காது.
அடிக்கடி நீங்கள் குழந்தைகளை அடிப்பீர்கள்
நெகட்டிவ் எண்ணங்கள் அதிகரிக்கும்

தவிர்க்க என்ன வழி?
கூடுமான வரை அலுவலகத்தில் நைட் ஷிப்ட் பார்க்காமல் தவிர்க்க வேண்டும்.
முடியாத பட்சத்தில், இரவு பணியின் போது உடல் நலத்தைக் கெடுக்கும் கார உணவுகளை சாப்பிடவே கூடாது. பழங்களை சாப்பிடலாம். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.
உடல் வெப்பத்தை சீராக வைத்திருக்க யோகா அல்லது உடற்பயிற்சி, தியானம் உள்ளிட்டவற்றை அவசியம் செய்ய வேண்டும்
பகலில் உணவு சாப்பிட்ட உடன் தூங்க கூடாது. ஒரு மணிநேரம் கழித்து தூங்குங்கள்.
சில நேரங்களில் பகலில் தூக்கம் வரமால் இருக்கலாம். அப்போது புத்தகங்கள் படித்தால் உடனடியாக தூக்கம் வரும்.
அடிக்கடி மருத்துவரிடம் சென்று உடல் நலத்தை சீராக வைத்திருங்கள்.