
கொழும்பு,ஜூன்18புலிகள் தலைவர் பிரபாகரன், ராணுவத்துடன் போரிட்ட போது வீரமரணம் அடைந்து விட்டதாக புலிகள் புலனாய்வுப்பிரிவு பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் கூறியுள்ளார். இலங்கை இறுதிப்போரில் பிரபாகன் கொல்லப்பட்டுவிட்டார் என்று இலங்கை ராணுவம் அறிவித்தது. உடலை கைபற்றி எரித்து விட்டதாகவும் கூறினர். ஆனால் புலிகள் தரப்பில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறினர். இதற்கிடையே புலிகள் தரப்பில் கடந்த மாதம் 22ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் பிரபாகரன் நலமாக இருப்பதாக கூறினர். அதே நேரத்தில் வெளியுறவுப்பிரிவு தலைவர் செல்வராசா பத்மநாதன் மே 25ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்று தெரிவித்தார். புலிகள் அமைப்பிலிருந்து இரு வேறுபட்ட தகவல்கள் வெளியானதால் குழப்பம் ஏற்பட்டது. புலிகள் அமைப்பில் ஒற்றுமை இல்லை என்றும் செய்திகள் வெளியாயின.இந்நிலையில், புலிகளின் புலனாய்வு பிரிவு மற்றும் வெளியகப்பணிப்பிரிவு பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எமது இயக்கத்தின் தலைவர் மற்றும் ராணுவ தளபதி தமிழீழத் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீரமரணம் அடைந்து விட்டார். இதை புலிகளின் புலனாய்வுத் துறை இப்போது உறுதிப்படுத்தியுள்ளது. இறுதிப்போரின் போது பிரபாகரனை பாதுகாப்பான இடம் நோக்கிக் கொண்டு செல்லும் முயற்சியில் அவருடன் எமது புலனாய்வு போராளிகள் ஈடுபட்டிருந்தனர். இப்போது இந்த புலனாய்வு போராளிகள் பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளனர். இவர்கள் இப்போது அளித்த தகவல்கள் மற்றும் இலங்கை ராணுவத்துடன் தொடர்புடைய எங்களுக்கு தகவல் அளிப்பவர்கள் கூறும் தகவல்கள் ஆகியவை தலைவர் பிரபாகரன் வீரமரணம் அடைந்ததை உறுதிப்படுத்துகின்றன.கடந்த மே மாதத்தில் 15ம் தேதியில் இருந்து 19ம் தேதி வரையிலான காலப்பகுதியில் வன்னி, முள்ளிவாய்க்கால் போர் பகுதியில் இருந்து முரண்பட்ட தகவல்கள் வந்த படி இருந்தன. சீரான தகவல்கள் கிடைக்கவில்லை. போர் முனையில் இருந்து வெளியேறிய புலனாய்வு போராளிகள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று சேரமுடியாமல் இருந்தனர். மேலும் அவர்கள் அனுப்பிய தகவல்கள் எங்களுக்கு சரியாக கிடைக்கவில்லை. ஆனால் அப்போது கிடைத்த தகவல்களை சீர்படுத்தியதன் அடிப்படையில் எங்கள் அன்புக்குரிய தலைவர் நலமாக இருப்பதாக கருதி மே 22ம் தேதி அப்படி ஒரு செய்தி வெளியிட தீர்மானித்தோம். இந்த நிலையில், பிரபாகரனின் பாதுகாப்பான இருப்பு மற்றும் நகர்வுகள் தொடர்பாக இறுதி வரை அவருடன் இருந்த தளபதிகளால் பல தகவல்கள் வழங்கப்பட்டு வந்தன. இதன் அடிப்படையில் சர்வதேச உறவுத் துறை இயக்குனர் செல்வராசா பத்மநாதன் ஆரம்பத்தில் இரு வேறு முரண்பட்ட செய்திகளை தரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார் என்பதை எங்களால் உணர முடிகிறது. தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் மாபெரும் தியாகம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத செய்தியை மே 22ம் தேதி வெளியிட்டதற்காக வருத்தப்படுகின்றோம். அந்த செய்தியை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியதற்காக அன்புக்குரிய மக்களிடம் தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை மன்னிப்புக் கோருகின்றது. பிரபாகரனின் வீரமரணம் தொடர்பாக பல தரப்பினர் பல தகவல்களை வெளியிட்டு வந்தனர். அவர் கைது செய்யப்பட்டதாகவும், சரண் அடைந்ததாகவும், விசாரணைக்கு பின்னர் கொல்லப்பட்டதாகவும், தற்கொலை செய்து கொண்டதாகவும் பல மாறுபட்ட செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் எந்த செய்தியையும் தகவலையும் முழுமையாக உறுதிப்படுத்தி வெளியிட வேண்டிய கடமை புலனாய்வு துறையினர் ஆகிய எங்களுக்கு உள்ளது. அதன் அடிப்படையில் தலைவர் பிரபாகரன் சரண் அடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை. இலங்கை ராணுவத்திடம் போரிட்டே வீரகாவியம் ஆனார் என்பதை நாங்கள் மிக திடமாக உறுதிப்படுத்துகின்றோம். இப்போது தோன்றியுள்ள மிக நெருக்கடியான காலகட்டத்தில் தலைவர் பிரபாகரன் உருவாக்கி வளர்த்தெடுத்து, நமது கைகளில் தந்து விட்டு சென்றுள்ள எமது விடுதலைப்போராட்டத்தை அதே உறுதிப்பாட்டுடன் அதே கட்டுக்கோப்புடன் அதே ஒற்றுமையுடன் நாங்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும். எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வெல்லும் எமது இறுதி லட்சியத்தை நோக்கிய எமது போராட்டத்தின் அடுத்த படிநிலையாக இப்போது உருவாக்கப்பட உள்ள நாடு கடந்த தமிழீழ அரசு அமைவதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்றுவதே எங்கள் முன்பு உள்ள கடமையாகும். தமிழீழ தேசிய தலைவர் அவர்களுக்கும், அவருடன் வீரமரணம் அடைந்த எமது இயக்கத்தின் போராளிகள் , தளபதிகளுக்கும் வீரவணக்கத்தை செலுத்துவதுடன் இந்த போரில் படுகொலை செய்யப்பட்ட எமது பாசத்துக்குரிய மக்களுக்கு புலிகளின் புலனாய்வுத் துறை அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறது.