Wednesday, May 6, 2009

இலங்கையில் என்ன நடக்குது: முழு தகவல்:ஈழம் பிறக்காலம்: இனம் பிழைக்குமா?


நன்றி: தினமலர் (திருச்சி,வேலூர் பதிப்புகளில் மே 6 ம் தேதி வெளியான முழுப்பக்க கட்டுரை)25 ஆண்டுகளாக தமிழர்கள் சிந்திய ரத்தத்தால் இலங்கையே சிவந்து கிடக்கிறது. அஹிம்சையை போதித்த புத்தனின் மதத்தை பின்பற்றும் ஒரு தேசத்தில் 1 லட்சம் அப்பாவி மக்கள் மண்ணுக்குள் புதையுண்ட பிறகும் யுத்த வெறி அடங்கவில்லை.
மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என்று பாராமல் குழந்தைகள், பெண்கள், முதியோர் என தமிழர்களின் ரத்தம் குடிக்கிறது இலங்கை ராணுவம்.
புலிகளை வேட்டையாடுகிறோம் என்று கூறி கிளிநொச்சியை கைபற்றிய கையோடு முல்லைத்தீவு வரை முன்னேறியது இலங்கை ராணுவம். ஆனால் ராணுவம் தாண்டி சென்ற வழியெங்கும் வீதிகளில் கிடந்தது என்னவோ அப்பாவி தமிழர்களின் பிணங்கள்தான்.
இடிந்து நொறுங்கிக்கிடக்கும் கட்டடங்கள், ஆள் அரவமற்று வெறிச்சோடிக்கிடக்கும் வீதிகள், பள்ளிக்கூடங்கள். பள்ளிக்கூடங்களோ, மருத்துவமனைகளோ, வியபார தலங்களோ எதுவும் மிச்சமில்லை. குளித்து பலமாதங்களாகிவிட்டது. எண்ணை காணாத தலையும், உணவு பார்க்காத வயிறுமாக கையில் கிடைத்த சொற்ப உடமைகளுடன் அழுக்கு உடையுடன் நடைபிணமாக நகர்ந்து கொண்டிருக்கின்றன தமிழர் குடும்பங்கள்.
புலிகள், உலகநாடுகள், இலங்கை அரசு, அண்டை நாடு இந்தியா, தாய் தமிழகம் என திசைக்கு ஒன்றாக வாக்குறுதிகள்.
அந்த அப்பாவிகள் மனதில் யாரைத்தான் நம்புவதோ என்ற விடை தெரியாத அரசியல் புரியாத ஏக்கம். இலங்கை தமிழர்கள் என்ன பாவம் செய்தனர். அவர்கள் கடந்து வந்த வழி என்ன?யார் இலங்கை தமிழர்?

இலங்கைத் தமிழர்களுடைய தோற்றம் பற்றித் தெளிவான சான்றுகள் இல்லை. மகாவம்சம் என்ற இலங்கை வரலாறு நுவலில் இலங்கை வம்சாவழித் தமிழர்கள் பற்றி சிறிதளவுதான் கூறப்பட்டுள்ளது.

மகாவம்சத்தில் பௌத்த மதம், சிங்களவர் பற்றி நிறைய தகவல்கள் உள்ளன. இலங்கையை ஆண்ட விஜயன் காலத்தில் திருமணத் தொடர்புகள் காரணமாகப் பாண்டிய நாட்டிலிருந்து பெருமளவில் தமிழர்கள் இலங்கைக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. இதன் மூலம் இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையிலான தொடர்புகள் இருந்தது என்பது தெளிவாகிறது.

இது தவிர கி.மு. நுவற்றாண்டில் அனுராதபுரத்தை பல தமிழர்கள் ஆண்டிருப்பதும் மகாவம்சத்தின் குறிப்புகளில் காணப்படுகிறது. முன்பு புகழ்பெற்ற துறைமுகமாக இருந்த மாந்தோட்டத்தில் தமிழக வணிகர்கள் செல்வாக்கு பெற்றிருந்தனர் என்பது பல ஆராய்ச்சியாளர் கருத்து. கி.மு 5ம் நுவற்றாண்டிலிருந்து கி.பி 10ம் நுவற்றாண்டு வரை இலங்கை தலைநகரமாக இருந்த அநுராதபுரத்தில் தமிழ் வணிகர்களும், சிற்பிகளும் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
இப்போதைய யாழ் குடாநாட்டுப் பகுதிகளில் தமிழர் ஆட்சி நிலவியிருக்கக் கூடும் என யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதிய செ.ராசநாயக முதலியாரின் கருத்து.
அனுராதபுரம், பொலநறுவை சிங்களர் அதிகாரம் வீழ்ந்து தெற்குநோக்கி நகர்ந்தபோது நாட்டில் புவியியல் ரீதியான தமிழ் சிங்கள குடியேற்ற மாறுபாடு தீவிரப்பட்டிருக்கும்.
தமிழர் குடியேற்றம் பற்றிய செய்திகள் வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்களில் உள்ளது. ஆரம்பத்தில் வன்னியர் குடியேற்றமும், தொடர்ந்து வேளாளர் குடியேற்றங்களும் ஏற்பட்டதாக இதில் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் கிழக்குக் கரையோரப் பகுதிகளிலும் பெருமளவு தமிழர் குடியேற்றங்கள் இருந்தன. திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற இடங்களில் இடம்பெற்ற குடியேற்றங்கள் பற்றி வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன.
இலங்கை தமிழர்கள் பொதுவாக 2 பிரிவினராகக் கருதப்படுகினறனர். வடக்குக் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள், அப்பகுதிகளைத் தாயகமாகக் கொண்டு நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இலங்கைத் தமிழர் அல்லது இலங்கை வம்சாவழி தமிழர் எனப்படுவர்.
இன்னொரு பிரிவினர் இங்கிலாந்து ஆட்சி காலத்தில் இலங்கையின் மத்திய மலையகப் பகுதிகளில் தேயிலை, ரப்பர், காப்பி தோட்டங்களில் பணியாற்ற வந்தனர். இவர்கள் தமிழகத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர். இவர்கள் இன்றும் தோட்டங்களில் வாழ்ந்து வருகிறார்கள். இலங்கை அரசின் புள்ளிவிரவங்களில் இவர்கள் இந்தியத் தமிழர் என்றே குறிப்பிடப் படுகிறார்கள்.


இலங்கைக் குடியுரிமைச் சட்டம், 1948


இங்கிலாந்திடம் இருந்து இலங்கை விடுதலை பெற்றதும், அதன் குடிமக்கள் யாரென வரையறுப்பதற்காகக் இலங்கைக் குடியுரிமைச் சட்டம் 1948 கொண்டுவரப்பட்டது. அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசினால் இலங்கை பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இது புதிதாக விடுதலை பெற்ற நாட்டுக்கு தேவை என்று தோன்றும். ஆனால் சிங்களத் தேசிய வாதிகள் இந்தச் சட்டத்தின் மூலம் இன்னொரு நோக்கத்தையும் நிறைவேற்றினார்கள். அதாவது இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில், இந்தியாவின் தமிழர்கள் என்றழைக்கப்பட்டவர்களை தோட்டத் தொழிலாளான லட்சக் கணக்கான தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்தது. இதன் மூலம் அவர்களை நாடற்றவர்கள் ஆக்குவதில் சிங்கள அரசு வெற்றிபெற்றது.
இலங்கை விடுதலை பெற்றதிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்றுவந்த இன முரண்பாடுகளின் தொடக்க வெளிப்பாடுகளில் ஒன்றாக இந்தச் சட்டம் அமைந்தது. இச் சட்டம் பார்லி.,யில் கொண்டு வரப்பட்டபோது இலங்கைத் தமிழ் எம்.பி.,க்களுடன் சேர்ந்து இடதுசாரிக் கட்சியினரும் எதிர்த்தனர்.தனிச் சிங்களச் சட்டம்


தமிழ் மொழி, சிங்கள மொழி இரண்டும் இலங்கை ஆட்சி மொழிகள் மொழிகள், ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது.எனினும் நடைமுறையில் பல இடங்களில் தமிழர்கள் காவல், நீதித் துறை உட்பட அரச சேவைகளை தமிழ் மொழியில் இல்லை. தமிழ் கல்வி புத்தகங்கள் பல பிழைகளுடன் அச்சாகின்றன. தமிழ் மொழி
சிதைத்துப் பயன்படுத்தப்படுகின்றது.
எஸ். டபில்யு. ஆர். டி பண்டாரநாயக்கா தலைமையிலான இலங்கை அரசில் 1956ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி இலங்கை பார்லி.,யில் ‘சிங்களம் மட்டுமே அரச மொழி‘ என்ற தனிச்சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் அரசுப்பணியில் உள்ள தமிழர்கள் சிங்களம் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். தமிழ் சிறுபான்மை சமுகத்தினர் இதை எதிர்த்தனர். இதனால் 1958 இல் தமிழர் வாழும் பகுதிகளில் தமிழும் பயன்படுத்தப்படலாம் எனும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் இனங்களுக்கிடேயே பகையை உருவாக்கிய முதலாவது சட்டமாக இது கருதப்படுகிறது.ஆரம்பித்தது போர்

இலங்கை அரசின் ஒரு தலைப்பட்சமான பல நடவடிக்கைகளால் உள்ளுக்குள் இருந்த பகை 1980களில் பெரும் போராட்டமாக வெடித்தது.பல கால கட்டங்களில் ராணுவத்துக்கு எதிராக தமிழ் அமைப்புகள் இணைந்து போராட்டம் நடத்தின. ராணுவத்தின் வெறி தாக்குதலுக்கு ஈடு கொடுக்க ஆயுதம் ஏந்திய போராட்டத்தையும் புலிகள் தொடங்கினர். பல தன்மைகளுடனும் தாக்கங்களுடனும் இனமோதல் வெளிப்பட்டு இருக்கின்றது. மோதலின் முக்கிய திருப்புமுனைகளைக் கொண்டு இலங்கை மோதலை 4 கட்டங்களாக கூறுகின்றனர்.

* ஈழப் போர் 1: (1983-1985; 1987) ஈழ இயக்கங்கள், புலிகள் ஒரு அணியாகவும், இலங்கை ராணுவம், இந்திய அமைதி காக்கும் படை எதிர் அணியிலும் இருந்தன.
* ஈழப் போர் 2: (1990-1995) - புலிகள் ஒரு அணியிலும் இலங்கை ராணுவம், பிற சில ஈழ இயக்கங்கள் எதிர் அணியிலும் இருந்தன.
* ஈழப் போர் 3: (1995 - 1999) - புலிகள் ஒரு அணியிலும் எதிரணியில் இலங்கை ராணுவமும் இருந்தது.
* ஈழப் போர் 4: (2006 - ) - புலிகள் ஒரு அணியிலும் எதிர் அணியில் இலங்கை ராணுவம், பிற புலி எதிர்ப்பு குழுக்கள் உள்ளன. இந்த போர் இன்னும் முடியவில்லை. தொடர்கிறது.இறுதி போர்


இலங்கை போரில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.உலகில் சமீபகாலமாக நடந்த இனமோதல்களில் இந்த அளவுக்கு ஒரு இனம் அழிக்கப்பட்டதில்லை என்பது உலக பார்வையாளர்களின் ஒட்டு மொத்த கருத்தாக இருக்கிறது. தமிழினத்தை அழிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ராஜபக்சே திட்டமிட்டு செயல்படுகிறார்.
நார்வேயின் முயற்சியால் கொண்டு வரப்பட்ட போர்நிறுத்தத்தை இலங்கை அரசு முறித்துக்கொள்வதாக அறிவித்தது. இதையடுத்து 2008ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே மோதல் தீவிரம் அடைந்தது. 2008ம் ஆண்டு இறுதிக்குள் புலிகளை ஒழித்தே தீருவோம் என்று ராஜபக்சே முழக்கமிட்டார். புலிகளை கொல்வதாக கூறி இலங்கை ராணுவம் தினந்தோறும் தமிழர்களை கொன்று குவித்து முன்னேறியது.

அழிந்த நகரம்

புலிகளின் தலைநகராக விளங்கிய கிளிநொச்சி நகரை ராணுவம் கைபற்றியதாக ராசபக்சே இந்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி அறிவித்தார். கிளிநொச்சி நகருக்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் உள்ள மற்றுமொரு முக்கிய சந்தியாகிய கரடிப்போக்கு சந்தியையும், கிளிநொச்சி நகரின் ரயில் நிலையப்பகுதியையும் கைப்பற்றிவிட்டதாக அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக புலிகளின் வசம் இருந்த யானையிறவு கைபற்றப்பட்டது.
இரண்டு முக்கிய பகுதிகளை இழந்த புலிகள் முல்லை தீவில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் புகுந்தனர். இருந்தும் விடாமல் ராணுவம் துரத்தியது. ராணுவத்தின் முப்படைகளும் முல்லை தீவை சுற்றி வளைத்து தாக்கின. அடுத்த 20 நாட்களில் அதாவது ஜனவரி 25ம் தேதி புலிகளிடம் இருந்து முல்லை தீவை கைபற்றி விட்டதாக இலங்கை ராணுவம் கூறியது. புலிகளுக்கு எதிரான போரில் 95 சதவீதம் முடிந்து விட்டதாகவும் புலிகளைத் தேடி அழிக்கும் படலம் தொடர்வதாகவும் குறிப்பிடப்பட்டனர்.பட்டினி எனும் ராஜ தந்திரம்

கடந்த 3 மாதமாக தொடரும் மோதலில் குழந்தைகள், பெண்கள், முதியோர் என 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐநாவின் ரகசிய அறிக்கை அதர்ச்சி தகவல் கூறுகிறது. ஆனால் இதையெல்லாம் கண்டு இலங்கை அரசு போரை நிறுத்துவதாக இல்லை. மேலும் போரை தீவிரப்படுத்துவதில்தான் அவர்கள் எண்ணமாக இருக்கிறது. தமிழர்களை புலிகள் மனித கேடயமாக பிடித்து வைத்துள்ளனர் எனவே தான் ராணுவம் முன்னேற முடியவில்லை என்று அப்பாவி தமிழர்களின் நலனில் அக்கறை உள்ளவர் போல ராஜபக்சேவும் அவரது ராணுவமும் தெரிவித்தது. ஆனால் உண்மையில் தமிழர்களை வரவழைக்க மோசமான தந்திரத்தை ராணுவம் கடைபிடித்தது.
ஏப்ரல் 1ம் தேதி முதல் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு உணவுப்பொருள் அனுப்புவதை இலங்கை அரசு அறவே நிறுத்தி விட்டது. முல்லை தீவில் காட்டுக்குள் வாழ்ந்த தமிழர்கள் உணவு கிடைக்காமல் திண்டாடினர். தண்ணீரை குடித்து வாழலாம் என்றால் கடல் பகுதியில் எல்லாம் உப்பு தண்ணீர். மழை பெய்ததால் தேங்கி கிடந்த தண்ணீரை தெளியவைத்து குடித்தனர். இதனால் தொற்று நோய் பாதிப்புகள் அதிகரித்தது. ரெட் கிராஸ், ஐநா உள்ளிட்ட அமைப்புகள் இந்த கொடூரத்தை வன்மையாக கண்டித்தன. ஆனால் ராணுவம் அசைந்து கொடுக்கவில்லை.
திடீரென தமிழ் புத்தாண்டுக்காக போர்நிறுத்தத்தை அறிவித்தார். உண்மையில் சிங்கள படையினர் இறுதி தாக்குதலை மேற்கொள்ளும் முன்பு கொஞ்சம் இளைப்பாறுவதற்காக கொடுக்கப்பட்ட தற்காலிக நிறுத்தமே அது.
ராணுவத்தினரை உற்சாகப்படுத்த இந்த லீவு நாளில்தான் அவர்களுக்கு விருந்தளித்தார் ராஜபக்சே. அவர் விருந்து சாப்பிடும் நேரத்தில் தமிழர்கள் சாப்பிட்டு 13 நாட்கள் ஆகியிருந்தது. பல குழந்தைகள் பசியால் உயிரை விட்டன. சரியான சரிவிகித உணவு உண்ணாமல் தமிழ் தாய்களின் மடியில் பால் வற்றிப்போனது. பால் குடிக்காத குழந்தைகள் உயிர் விட்டன.
2 நாள் நிறுத்தத்துக்கு பிறகு புதுக்குடியிருப்பு பகுதியை முற்றுகையிட்டு ராணுவம் தாக்கத்தொடங்கியது. இந்த தாக்குதலை வீடியோவில் பார்த்து ரசித்தார் ராஜபக்சே. பசியால் குழந்தைகளை இழந்த நுவற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்கள் எங்கு சென்றால் பசி போக்கலாம் என்று நினைத்திருந்த வேளையில் அதை தந்திரமாக பயன்படுத்தியது ராணுவம். பசியால் துடித்த ஆயிரக்கணக்கான மக்கள் வேறு வழியின்றி அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தனர். வீடியோவை பார்த்து தன் தந்திர கணக்கை தானே பாராட்டிக்கொண்டார் ராஜபக்சே. இது வரை ஒன்றை லட்சம் தமிழர்கள் அரசின் கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக அரசு கணக்கு கூறுகிறது.


தமிழர்கள் எதிர்காலம்?


வன்னியில் 4 லட்சத்து 70 ஆயிரம் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். ராஜபக்சே அரசின் கொடூர ராணுவ தாக்குதல்களில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதுதவிர ஒரு லட்சத்து 40 ஆயிரம் தமிழர்களை ராணுவத்தினர் பிடித்துள்ளனர். அவர்களில் 63 ஆயிரம் பேர் மட்டும் அரசின் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீதி 77 ஆயிரம் பேர் எங்கே என்று கேள்வி எழுப்பப் பட்டுள்ளது. பொதுமக்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்? புலிகளின் கட்டுப்பாட்டில் 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் இருந்தனர். இப்போதைய வெளியேற்றத்தில் ஒன்றரை லட்சம் பேர் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளனர். ராணுவத்தினர் கைபற்றிய பகுதிகளில் பல இடங்களில் ஏராளமான மனிதப் புதைகுழிகள் இருப்பதாக ராணுவத்திடம் இருந்து தப்பி வந்தவர்கள் கூறுகின்றனர். இவை தமிழர்களை மொத்தமாக கொன்று புதைக்கப்பட்ட குழிகளா? என்பதும் வேதனைக்குரிய விஷயம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி., சதாசிவம் கனகரத்தினம் இது குறித்து பார்லி.,யில் கேள்விகள் கேட்டபோது இலங்கை அரசால் பதில் சொல்லமுடியவில்லை.திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்

ஆரம்பத்தில் இருந்தே தமிழர்கள் பகுதிகளில் சிங்களர்கள் குடியேற்றம் நடந்து வருகிறது. அதாவது நிலமற்ற சிங்களவர்களுக்கு நிலம் தரும் திட்டங்களை செயல்படுத்துகிறோம். தமிழர்களின் உரிமைகளை பறிக்க வில்லை என்று முந்தைய அரசுகள் கூறி வந்தன. ஆனால் அங்கு வாழ்ந்த தமிழர்களின் உரிமைகளை கருத்துக்களை கேட்காமல் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்பதுதான் உண்மை.
இப்போது இலங்கை அரசு கைபற்றிய கிளிநொச்சி, யானையிறவு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் இதே பாணியில்தான் சிங்களவர்கள் குடியேற்றம் செய்யப்பட உள்ளனர். ஆனால் மீண்டும் தமிழர்களை குடியேற அனுமதிக்க வேண்டும் என்பது உலக தமிழர்களின் கோரிக்கை. இலங்கை அரசோ இப்போதைக்கு தமிழர்களை முகாம்களில் தங்க வைப்பதாக சொல்கிறது. ஆனால் நிரந்தரமாக தமிழர்களை முகாம்களிலேயே முடக்கி விட்டு புலிகளிடம் இருந்து கைப்பற்றிய பகுதிகளில் எல்லாம் சிங்களவர்களை குடியேற்றுவதுதான் ராஜபக்சேவின் திட்டம் என்பது உலகறிந்த விஷயம். இதன் மூலம் தமிழர்களின் மரபுவழி நிலப்பரப்புகளில் தமிழர்களின் மரபுவழி உரிமைகளைச் சிதைக்கும் திட்டம் நடந்து வருகிறது.

கருவில் இன அழிப்பு

தமிழர்களை முற்றிலும் அழுத்தொழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசு போர் மட்டுமின்றில பல தந்திரங்களை கையாண்டு வருகிறது. வன்னிப் பகுதிகளில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வரும் தமிழர்களில் கருவுற்றிருக்கும் தாய்மார்களின் கருக்களைக் கலைக்குமாறு வவுனியா மருத்துவமனை அதிகாரிகளுக்கு ராணுவ உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழ் கர்ப்பிணிப் பெண்கள் கருக்கலைப்பு செய்து கொண்டால் நல்ல பராமரிப்பு கிடைக்கும் என ஏமாற்றியும், சிங்கள மொழி தெரியாதத் தமிழர்களிடம் சிங்கள மொழியில் அச்சிடப்பட்ட அனுமதிப் படிவங்களில் வற்புறுத்தி கையொப்பமிட வைத்தும் கருக்கலைப்புக்கு செய்யப்படுகின்றது.
இது தமிழர்களின் வருங்காலச் சந்ததியினர்களும் இலங்கை இலங்கை தீவில் இருக்கக் கூடாது என்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கையாகும். ஒரு இனத்தைக் கருவிலேயே அழித்தொழிக்கும் செயலாகும்.


குறையும் தமிழினம்

இலங்கை மக்கள் தொகையில் சிங்களர்களுக்கு அடுத்து இரண்டாவது பெரிய இனமாக தமிழர்கள் இருந்தனர். அதாவது மக்கள் தொகையில் 12 சதவீதத்தினர் தமிழர்கள் இருந்தனர். ஈழப்போர் தொடங்குவதற்கு முன்பு 12 லட்சம் தமிழர்கள் இருந்தனர். ஆனால் 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இது குறைந்து 3.9 சதவீதமாக ஆகிவிட்டது. 1983ம் ஆண்டில் இருந்து தொடங்கிய தமிழின அழிப்பில் தமிழர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது.

2 comments:

  1. சில தகவல்களை தினமலர் சேர்த்திருக்க வேண்டும். ஏற்கனவே அவர்களிடம் பல செய்திகள் இருக்கின்றன! தொகுத்துத் தந்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. சென்னையில் பதிவர் சந்திப்பு நடந்தால், எனக்கும் தூது விடுங்களேன். இடையிலே உங்கள் (நேர்)அறிமுகம் கிடைத்தாலும் மகிழ்ச்சி தான்.

    E-Mail: dhava,ambi@gmail.com

    ReplyDelete