Sunday, May 17, 2009

எக்ஸ்குளூசிவ்: ஆயுதங்களை கீழே போட தயார்: புலிகள் அறிவிப்பு

புலிகளை தோற்கடித்து விட்டோம் என்று ராஜபக்சே கொக்கரித்தார். பிரபாகரன் போரில் கொல்லப்பட்டுவிட்டார் என்று ராணுவம் கதை விட்டது. இந்நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் சேனல் 4 தொலைக்காட்சி நிருபர் அலெக்ஸ் தாம்சனுக்கு புலிகளின் வெளியுறவு பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

அலெக்ஸ் தாம்சன்: இலங்கை போரில் புலிகளின் தற்போதைய நிலைப்பாடு என்ன?

செல்வராஜ்யா பத்மநாதன்: எங்கள் இயக்கம் ஆயுதங்களை கீழே போட தயாராக இருக்கிறது. மேலும் அமைதி முயற்சியில் பங்கேற்கவும் தயாராக இருக்கிறது.

அலெக்ஸ் தாம்சன்: போரில் ஈடுபட்டுள்ள புலிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

செல்வராஜ்யா பத்மநாதன்: 2 ஆயிரம் பேருக்கு குறைவுதான். அவர்கள் போர் முனையை சுற்றி நின்றுள்ளனர். எங்கள் மக்கள் ஒவ்வொரு மணி நேரமும் நுõற்றுக்கணக்கில் இறந்து கொண்டிருக்கின்றனர். நேற்று மட்டும் 3 ஆயிரம் பேர் இறந்திருக்கின்றனர். 25 ஆயிரம் பேர் காயம் அடைந்திருக்கின்றனர். எனவே நாங்கள் போர் நிறுத்தத்துக்கு தயாராக உள்ளோம்.

அலெக்ஸ் தாம்சன்: அவர்கள் எல்லோரும் மக்கள் தானா?

செல்வராஜ்யா பத்மநாதன்: ஆமாம்

அலெக்ஸ் தாம்சன்: இலங்கை அரசு என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

செல்வராஜ்யா பத்மநாதன்: நேற்றிலிருந்து நாங்கள் போரை நிறுத்த வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கூறுகிறோம். நாங்கள் ஆயுதங்களை கீழே போட்டு அமைதி முயற்சியில் பங்கு பெற தயாராக இருக்கிறோம்.

அலெக்ஸ் தாம்சன்: இந்த போர் முடிவுக்கு வந்து விட்டதா?

செல்வராஜ்யா பத்மநாதன்: ஆமாம் இந்தப் போர் முடிவுக்கு வர விரும்புகிறோம்.

அலெக்ஸ் தாம்சன்: புலிகள் கொரில்லா தாக்குதல் நடத்துவார்கள் என்று கூறப்படுகிறதே?

செல்வராஜ்யா பத்மநாதன்: நாங்கள் கடந்த 38 ஆண்டுகளாக போரை நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால் போரில் தினமும் மனித உயிர்கள் பலியாகிக்கொண்டிருக்கின்றன. மேலும் 30 ஆண்டுகள் தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டிருந்தால் என்ன நடக்கும் என்று சொல்ல முடியவில்லை. அமைதியான வழியில் தமிழர்களுக்கு தீர்வு ஏற்பட வேண்டும் என்று நம்புகிறோம்.

அலெக்ஸ் தாம்சன்: புலிகள் தலைவர் பிரபாகரன் என்ன உத்தரவிட்டிருக்கிறார்?

செல்வராஜ்யா பத்மநாதன்: பிரபாகரனிடம் 4 மணி நேரம் பேசினேன். அவர்தான் இந்த உத்தரவை கூறினார். இது குறித்து இலங்கை அரசிடமும், சர்வதேச சமூகத்திடமும் சொல்லிவிட்டோம். அவர்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம். ஆனால் இதுவரை யாரும் பதில் அளிக்கவில்லை. போரை நிறுத்தவும் இல்லை.

அலெக்ஸ் தாம்சன்: பிரபாகரன் இன்னும் போர் முனையில்தான் இருக்கிறாரா?

செல்வராஜ்யா பத்மநாதன்: ஆமாம்.

அலெக்ஸ் தாம்சன்: நீங்கள் போர் முனை பகுதியில் இருக்கும் பிரபாகரனிடம் பேசினீர்களா? அவர் சரண் அடைய தயாராக இருக்கிறாரா?

செல்வராஜ்யா பத்மநாதன்: சரண்அடைய மாட்டார். ஆனால் நாங்கள் ஆயுதங்களை ஒப்படைக்க தயாராக இருக்கிறோம். சரண் அடைய மாட்டோம்.

அலெக்ஸ் தாம்சன்: மக்களை ஏன் கேடயமாக பயன்டுத்தி அவர்களை வெளியேற விடாமல் தடுக்கிறீர்கள்?

செல்வராஜ்யா பத்மநாதன்: நாங்கள் எப்போதும் மக்களை மனித கேடயங்களாக பிடித்து வைக்கவில்லை. மக்கள் எங்கள் சொந்தங்கள். அவர்கள் ராணுவத்தை நம்பாமல் எங்களுடன் இருக்கின்றனர். முகாம்களில் சித்தரவதைப்படுத்தப்படுகின்றனர். எனவே அவர்கள் முகாம்களில் தங்கியிருக்க விரும்பவில்லை. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அரசு அனுப்பாமல் தடுத்து விட்டது. நாங்களாக முன்வந்து 35 ஆயிரம் பேரை அனுப்பியுள்ளோம். நாங்கள் மனித கேடயங்களாக மக்களை பிடித்து வைத்திருக்கவில்லை. இது தவறான தகவல். தவறான பிரசாரம்.

அலெக்ஸ் தாம்சன்: ஆனால் இது உண்மையல்ல புலிகள்தான் மக்கள் மீது சுடுகின்றனர். அவர்களை வெளியேற விடாமல் தடுக்கின்றனர் என்று கூறப்படுகிறதே?


செல்வராஜ்யா பத்மநாதன்: உண்மையில் நாங்கள் அவர்களை சுடுவதில்லை. சில நேரங்களில் ராணுவத்தின் மீது சுடும்போது தவறுதலாக பட்டிருக்கலாம். எங்கள் சொந்த மக்களை நாங்கள் ஏன் கொல்ல வேண்டும்?

அலெக்ஸ் தாம்சன்: புலிகளின் தளபதி ஒருவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு புலிகள் ஆயுதங்களை கீழே போட முன் வந்துள்ளதாகவும், சரண் அடைய விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறதே?

செல்வராஜ்யா பத்மநாதன்: நாங்கள் சரண் அடைய விரும்பவில்லை. ஆயுதங்களை கீழே போட விரும்புகிறோம்.

அலெக்ஸ் தாம்சன்: இந்த போர் முடிந்து விட்டதா அல்லது போர் முறை மாறுமா?

செல்வராஜ்யா பத்மநாதன்: போர் ஏறக்குறைய முடிந்து விட்டது அல்லது அரசியல் பாதையை தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால் அடுத்த சில மணி நேரம் என்ன நடக்கிறது என்பதை பொறுத்து அமையும். ஆனால் நாங்கள் ஆயுதங்களை கீழே போட தயாராக இருக்கிறோம். எங்கள் நாட்டுக்காக அரசியல் ரீதியாக தீர்வு காண தயாராக இருக்கிறோம்.

Monday, May 11, 2009

தமிழ் எழுத்துருக்களை யூனிக்கோடு தமிழ் எழுத்துருவுக்கு மாற்றுவது எப்படி?

வலைப்பூவின் சில வாசகர்கள் அறியாத ஒரு தகவல்

வலைப்பூவை வாசிக்கும் பலரும் எழுத்தார்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு தடையாக இருப்பது அவர்கள் எழுதும் தமிழ் எழுத்துரு இணையத்தளத்தில் வரமாட்டேன் என்கிறதே? என்ற ஆதங்கம்தான்.
வலைப்பூவை தமிழில் வெளியிடுகிறார்களே? எப்படி ? தமிழில் எழுத முடியுமா? என்று என்னை கேட்கிறார்கள். இணையத்தளத்தில் காணக்கிடைக்கும் எழுத்துருவான யூனிக்கோடுவுக்கு மாற்ற முடியவில்லை என்றும் சிலர் ஆதங்கப்படுகின்றனர். அவர்களுக்காக இதோ டிப்ஸ்

1 நீங்கள் எந்த எழுத்துருவில் வேண்டுமானாலும் தமிழ் எழுதுங்கள். அதை எழுத்து மாற்றியை பயன்படுத்தி அதாவது எழுத்துரு மாற்றி(பாண்ட் கன்வர்ட்டரை) பயன்படுத்தி யுனிக்கோடுக்கு மாற்றுங்கள்.

2. எழுத்துரு மாற்றியை நியூ ஹாரிசன் மீடியா இணையத்தளத்தில் இருந்து இறக்கம் செய்து கொள்ளலாம் அதற்கான இணையத்தள முகவரி
இதுதான்: http://software.nhm.in/Products/NHMConverter/tabid/60/Default.aspx
ஆன் லைனிலும் இதே தளத்தில் சென்று மொழிமாற்றம் செய்து கொள்ளலாம் அதற்கான
முகவரி: http://software.nhm.in/Services/NHMConverter/tabid/56/Default.aspx

3. பொங்கு தமிழ் என்ற இணையத்தளத்திலும் ஆன் லைன் எழுத்து மாற்றி இருக்கிறது. அதற்கான முகவரி: http://www.suratha.com/reader.htm

4. தமிழில் வெளியிடுங்கள். எழுத்துக்களை பரப்புங்கள் உலகம் எங்கும். எண்ணங்கள் பரவட்டும். வாழ்த்துக்கள்.

Friday, May 8, 2009

தினகரன் ஊழியர்கள் எரிக்கப்பட்டு 2 ஆண்டு முடிந்து விட்டது. வெளிவராத சில தகவல்கள்




தினகரன் ஊழியர்கள் எரிக்கப்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த சம்பவம் பற்றி பேசுவதே தமிழகத்தில் குற்றம் என்றாகிவிட்டது. பத்திரிகை சுதந்திரம் பற்றி வாயகிழிய பேசும் பத்திரிகையாளர்கள் யாரும் அதுபற்றி பேசவில்லை.

வெளிவராத சில உண்மைகள் பற்றி வலைப்பூ வாசகர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டிய தருணத்தில் தி.மு.க.வுக்கு எந்த பத்திரிகையுமே ஆதரவு தரவில்லை. எல்லா பத்திரிகைகளும் அந்த தருணத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்தன. ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு அலையும் இல்லாத நிலையில் தி.மு.க., ஆதரவை பெருக்க பிரசார பீரங்கியாக பயன்படுத்தவே தினகரன் வாங்கப்பட்டது. திட்டமிட்டது போல தேர்தல் பிரசார பீரங்கியாக செயல்பட்டது. ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் அழகிரியின் ஆதரவாளர்கள். அப்போதே தயாநிதிக்கும் அழகிரிக்குமான பனிப்போர் தொடங்கிவிட்டது. 2006ம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்தே இரு தரப்புக்கும் புகைச்சல் ஆரம்பித்தது. இது தினகரனில் பணியாற்றிய எல்லோருக்கும் தெரிந்த விஷயமாகிவிட்டது. குறிப்பாக கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தினகரன் நிருபர்களுக்கு கல்வி துறை பற்றிய செய்தி கொடுக்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டார். அந்த அமைச்சரிடம் ஒரு நிருபர் கேட்டதற்கு ஆமாம் நாங்கள் அப்படித்தான் சொல்லியிருக்கிறோம் என்றும் ஒத்துக்கொண்டார். இதிலிருந்தே அழகிரி, மாறன் சகோதரர்கள் பனிப்போர் இருந்து வந்தது என்பது தினகரன் ஊழியர்களுக்கு அப்பட்டமாக தெரிந்தது

தினகரனில் தயாரான சர்வே கேள்வி பட்டியல்

திடீரென ஒரு நாள் தினகரனின் மூத்த நிருபர் என்று அழைக்கப்பட்ட ஒருவர் தினகரன் நிருபர்களிடம் ஒரு தாள் ஒன்றை நீட்டினார். தினகரன் நிர்வாகம் ஒரு சர்வே வெளியிடப்போவதாகவும் கேள்வி என்னமாதிரி கேட்கலாம் என்றும் எழுதி தரக்கூறினர். ஆளாளுக்கு ஒன்று எழுதி தந்தனர். அப்படி எழுதப்பட்டதுதான் வாரி அரசியல் பற்றிய கேள்வியும். இத்தகைய சர்வே இந்த நோக்கத்துடன் வரப்போகிறது என்று யாருக்குமே தெரியாது.

மே மாதம் தொடக்கத்தில் இருந்தே இந்த சர்வேக்கள் வந்த போது பா.ம.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போதெல்லாம் இதுபற்றி அவர் கண்டு கொள்ளவில்லை. தி.மு.க.வில் அடுத்த வாரிசு சர்வேயில் ஸ்டாலினுக்கு 70 சதவீதமும், கனிமொழி, அழகிரிக்கு 2 சதவீதமும் என வந்த 2007ம் ஆண்டு மே 10ம் தேதி வந்த அதிகாலையிலேயே அழகிரி மதுரையில் இருந்து தன் தந்தைக்கு போன் போட்டு என்னப்பா? என்றார். நான் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன் கேட்கல என்றார். ஆனால் அடுத்தது தீவிரம் அதிகரித்தது. மதுரை தினகரன் அலுவலகம் நோக்கி அழகிரி படை சென்று அடித்து நொறுக்கி பெட்ரோல் குண்டுகள் வீசியது. எம்.வினோத் குமார்(23), ஜி.கோபிநாத்(25), முத்துராமலிங்கம்(42) ஆகியோர் உள்ளே மாட்டிக்கொண்டு பலியாயினர்.
உடனே அங்கே பறந்து வந்த கலாநிதி நீதி கிடைக்கும் வரை விடமாட்டேன் என்று நாடகமாடினார். அதை நம்பி தினகரன் ஊழியர்கள் ஏமாந்தனர். மே 10ம் தேதி சன்டிவியில் அழகிரி ரவுடி, அழகிரி ரவுடி என்று திரும்ப திரும்ப ஒளிபரப்பினார்கள். தமிழ் முரசிலும் தலைப்பு செய்தியாக்கினார்கள். மறுநாள் தினகரனிலும் தலைப்பு செய்தியாக்கினார்கள். சன்டிவியில் எடுக்கப்பட்ட வீடியோ ஜெயாடிவிக்கும் தரப்பட்டது என்பதும் ஊரறிந்த விஷயம்
மே 10ம் தேதி தினகரன் ஊழியர்கள் எல்லோருக்கும் உத்தரவு பறந்தது. காலையில் எல்லோரும் ஆபீசில் இருக்க வேண்டும். கலாநிதிமாறன் வந்து ஊழியர்களிடம் பேசப்போகிறார் என்றனர். ஆனால் ஊழியர்கள் காத்திருந்ததுதான் மிச்சம். அவர் வரவேயில்லை. அப்போதே சில ஊழியர்களுக்கு இந்த பிரச்னை எப்படி போகும் என்று தெரிந்து விட்டது.
மறு நாள் சட்டசபையில் பேசிய முதல்வர் கருணாநிதி, நான் எவ்வளவோ சொல்லி பார்த்தேன். தினகரன் நிர்வாகம் நான் சொல்லியதை கேட்கவில்லை என்று ஒரே போடாக போட்டார். இதற்கு தினகரன் தரப்பில் எந்த விளக்கமும் தரவில்லை. இதன் பின்னர் மாறன் சகோதரர்களுக்கும், கருணாநிதி குடும்பத்துக்கும் ஏற்படட் பிளவு ஊரறிந்த விஷயம். எல்லாம் சில நாட்களுக்குத்தான்.

தாத்தாதான் சொன்னார்

பிரச்னை குறித்து வார இதழ்கள் கட்டுரை வெளியிட்ட போது. தயாநிதி ஆப் த ரிக்கார்டாக நக்கீரன் நிருபர் ஒருவரிடம் கூறுகையில் சர்வே பற்றிய எல்லா தகவல்களும் தன் தாத்தாவுக்கு முன்கூட்டியே தெரியும் என்று கூறினார். பின்னர் பிரச்னை முற்றிய பிறகு தினகரனில் கலாநிதி வெளியிட்ட ஒரு பக்க கடித்திலும் இது குறிப்பிடப்பட்டது. அரசியல் சண்டைகளை தூண்டிவிட்டு குளிர்காயும் முதல்வர் கருணாநிதி தன் குடும்ப சண்டையையும் பின் இருந்து தூண்டிவிட்டாரா? என்று நமக்கு கேள்வி எழுகிறது.
கலைஞர் டிவி தொடங்கியபிறகு, அரசு கேபிள் டிவி வெளியான பிறகு, அரசுக்கு எதிரான செய்திகளை தினகரனில் வெளியிட்டும், சன்டிவியில் ஒளிபரப்பியும் தாத்தா கருணாநிதிக்கு பீதியை பயத்தை ஏற்படுத்தி திரும்பவும் மாறன் சகோதரர்கள் இணைந்து விட்டனர். ரவுடி அழகிரி என்று தினகரனில் செய்தி போடடவர்கள், அழகிரியோடு இணைந்து நிற்கும் படம் வெளியானது.

மவுனம் காப்பது ஏன்?

தினகரன் எரிப்பு வழக்கின் சிபிஐ விசாரணை என்ன ஆனது? அது குறித்து எந்த பத்திரிகையும் வாய்திறக்காதது ஏன் என்பதுதான் நம் கேள்வி?மதுரையில் பலியான ஒருவரின் நெருங்கிய உறவினர் தினகரனில் இப்போது செய்தி ஆசிரியராக இருக்கிறார். அவரது மனசாட்சியாவது இதை பொறுக்குமா? தினமலரில் இருந்து கூட்டத்தை தினகரனுக்கு கூட்டிப்போய் தலைக்கு இவ்வளவு என மாறனிடம் பெற்றது மட்டுமின்றி மாதம் லட்சகணக்கில் சம்பளமும், இலங்கை தமிழர்கள் பற்றி செய்தி வரக்கூடாது என்பதற்காக இலங்கை தூதர் அம்சாவின் கொள்கை பரப்புகளை வெளியிடும் தினகரன் பொறுப்பாசிரியருக்கு மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா?
கலாநதி மாறன் தரப்பில் பலியானர்களுக்கு பல லட்சம் கொடுக்கப்பட்டது. பல லட்சம் கொடுத்தால் போதுமா? குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை? கிடைத்தது. யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் அடித்து கொன்று விட்டு இந்தா பணத்தை வச்சுக்கோ என்று சொலலிவிடலாமா?
இன்றுடன் தினகரன் ஊழியர்கள் எரிக்கப்பட்டு 2 ஆண்டுகள் கடந்து விட்டது. என் மனதில் நீண்டநாட்களாக தொக்கி நின்ற நினைவுகள் கேள்விகளை கொட்டி தீர்த்து விட்டேன். வலைப்பூ வாசகர்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Wednesday, May 6, 2009

இலங்கையில் என்ன நடக்குது: முழு தகவல்:ஈழம் பிறக்காலம்: இனம் பிழைக்குமா?










நன்றி: தினமலர் (திருச்சி,வேலூர் பதிப்புகளில் மே 6 ம் தேதி வெளியான முழுப்பக்க கட்டுரை)



25 ஆண்டுகளாக தமிழர்கள் சிந்திய ரத்தத்தால் இலங்கையே சிவந்து கிடக்கிறது. அஹிம்சையை போதித்த புத்தனின் மதத்தை பின்பற்றும் ஒரு தேசத்தில் 1 லட்சம் அப்பாவி மக்கள் மண்ணுக்குள் புதையுண்ட பிறகும் யுத்த வெறி அடங்கவில்லை.
மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என்று பாராமல் குழந்தைகள், பெண்கள், முதியோர் என தமிழர்களின் ரத்தம் குடிக்கிறது இலங்கை ராணுவம்.
புலிகளை வேட்டையாடுகிறோம் என்று கூறி கிளிநொச்சியை கைபற்றிய கையோடு முல்லைத்தீவு வரை முன்னேறியது இலங்கை ராணுவம். ஆனால் ராணுவம் தாண்டி சென்ற வழியெங்கும் வீதிகளில் கிடந்தது என்னவோ அப்பாவி தமிழர்களின் பிணங்கள்தான்.
இடிந்து நொறுங்கிக்கிடக்கும் கட்டடங்கள், ஆள் அரவமற்று வெறிச்சோடிக்கிடக்கும் வீதிகள், பள்ளிக்கூடங்கள். பள்ளிக்கூடங்களோ, மருத்துவமனைகளோ, வியபார தலங்களோ எதுவும் மிச்சமில்லை. குளித்து பலமாதங்களாகிவிட்டது. எண்ணை காணாத தலையும், உணவு பார்க்காத வயிறுமாக கையில் கிடைத்த சொற்ப உடமைகளுடன் அழுக்கு உடையுடன் நடைபிணமாக நகர்ந்து கொண்டிருக்கின்றன தமிழர் குடும்பங்கள்.
புலிகள், உலகநாடுகள், இலங்கை அரசு, அண்டை நாடு இந்தியா, தாய் தமிழகம் என திசைக்கு ஒன்றாக வாக்குறுதிகள்.
அந்த அப்பாவிகள் மனதில் யாரைத்தான் நம்புவதோ என்ற விடை தெரியாத அரசியல் புரியாத ஏக்கம். இலங்கை தமிழர்கள் என்ன பாவம் செய்தனர். அவர்கள் கடந்து வந்த வழி என்ன?



யார் இலங்கை தமிழர்?

இலங்கைத் தமிழர்களுடைய தோற்றம் பற்றித் தெளிவான சான்றுகள் இல்லை. மகாவம்சம் என்ற இலங்கை வரலாறு நுவலில் இலங்கை வம்சாவழித் தமிழர்கள் பற்றி சிறிதளவுதான் கூறப்பட்டுள்ளது.

மகாவம்சத்தில் பௌத்த மதம், சிங்களவர் பற்றி நிறைய தகவல்கள் உள்ளன. இலங்கையை ஆண்ட விஜயன் காலத்தில் திருமணத் தொடர்புகள் காரணமாகப் பாண்டிய நாட்டிலிருந்து பெருமளவில் தமிழர்கள் இலங்கைக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. இதன் மூலம் இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையிலான தொடர்புகள் இருந்தது என்பது தெளிவாகிறது.

இது தவிர கி.மு. நுவற்றாண்டில் அனுராதபுரத்தை பல தமிழர்கள் ஆண்டிருப்பதும் மகாவம்சத்தின் குறிப்புகளில் காணப்படுகிறது. முன்பு புகழ்பெற்ற துறைமுகமாக இருந்த மாந்தோட்டத்தில் தமிழக வணிகர்கள் செல்வாக்கு பெற்றிருந்தனர் என்பது பல ஆராய்ச்சியாளர் கருத்து. கி.மு 5ம் நுவற்றாண்டிலிருந்து கி.பி 10ம் நுவற்றாண்டு வரை இலங்கை தலைநகரமாக இருந்த அநுராதபுரத்தில் தமிழ் வணிகர்களும், சிற்பிகளும் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
இப்போதைய யாழ் குடாநாட்டுப் பகுதிகளில் தமிழர் ஆட்சி நிலவியிருக்கக் கூடும் என யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதிய செ.ராசநாயக முதலியாரின் கருத்து.
அனுராதபுரம், பொலநறுவை சிங்களர் அதிகாரம் வீழ்ந்து தெற்குநோக்கி நகர்ந்தபோது நாட்டில் புவியியல் ரீதியான தமிழ் சிங்கள குடியேற்ற மாறுபாடு தீவிரப்பட்டிருக்கும்.
தமிழர் குடியேற்றம் பற்றிய செய்திகள் வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்களில் உள்ளது. ஆரம்பத்தில் வன்னியர் குடியேற்றமும், தொடர்ந்து வேளாளர் குடியேற்றங்களும் ஏற்பட்டதாக இதில் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் கிழக்குக் கரையோரப் பகுதிகளிலும் பெருமளவு தமிழர் குடியேற்றங்கள் இருந்தன. திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற இடங்களில் இடம்பெற்ற குடியேற்றங்கள் பற்றி வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன.
இலங்கை தமிழர்கள் பொதுவாக 2 பிரிவினராகக் கருதப்படுகினறனர். வடக்குக் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள், அப்பகுதிகளைத் தாயகமாகக் கொண்டு நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இலங்கைத் தமிழர் அல்லது இலங்கை வம்சாவழி தமிழர் எனப்படுவர்.
இன்னொரு பிரிவினர் இங்கிலாந்து ஆட்சி காலத்தில் இலங்கையின் மத்திய மலையகப் பகுதிகளில் தேயிலை, ரப்பர், காப்பி தோட்டங்களில் பணியாற்ற வந்தனர். இவர்கள் தமிழகத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர். இவர்கள் இன்றும் தோட்டங்களில் வாழ்ந்து வருகிறார்கள். இலங்கை அரசின் புள்ளிவிரவங்களில் இவர்கள் இந்தியத் தமிழர் என்றே குறிப்பிடப் படுகிறார்கள்.


இலங்கைக் குடியுரிமைச் சட்டம், 1948


இங்கிலாந்திடம் இருந்து இலங்கை விடுதலை பெற்றதும், அதன் குடிமக்கள் யாரென வரையறுப்பதற்காகக் இலங்கைக் குடியுரிமைச் சட்டம் 1948 கொண்டுவரப்பட்டது. அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசினால் இலங்கை பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இது புதிதாக விடுதலை பெற்ற நாட்டுக்கு தேவை என்று தோன்றும். ஆனால் சிங்களத் தேசிய வாதிகள் இந்தச் சட்டத்தின் மூலம் இன்னொரு நோக்கத்தையும் நிறைவேற்றினார்கள். அதாவது இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில், இந்தியாவின் தமிழர்கள் என்றழைக்கப்பட்டவர்களை தோட்டத் தொழிலாளான லட்சக் கணக்கான தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்தது. இதன் மூலம் அவர்களை நாடற்றவர்கள் ஆக்குவதில் சிங்கள அரசு வெற்றிபெற்றது.
இலங்கை விடுதலை பெற்றதிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்றுவந்த இன முரண்பாடுகளின் தொடக்க வெளிப்பாடுகளில் ஒன்றாக இந்தச் சட்டம் அமைந்தது. இச் சட்டம் பார்லி.,யில் கொண்டு வரப்பட்டபோது இலங்கைத் தமிழ் எம்.பி.,க்களுடன் சேர்ந்து இடதுசாரிக் கட்சியினரும் எதிர்த்தனர்.



தனிச் சிங்களச் சட்டம்


தமிழ் மொழி, சிங்கள மொழி இரண்டும் இலங்கை ஆட்சி மொழிகள் மொழிகள், ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது.எனினும் நடைமுறையில் பல இடங்களில் தமிழர்கள் காவல், நீதித் துறை உட்பட அரச சேவைகளை தமிழ் மொழியில் இல்லை. தமிழ் கல்வி புத்தகங்கள் பல பிழைகளுடன் அச்சாகின்றன. தமிழ் மொழி
சிதைத்துப் பயன்படுத்தப்படுகின்றது.
எஸ். டபில்யு. ஆர். டி பண்டாரநாயக்கா தலைமையிலான இலங்கை அரசில் 1956ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி இலங்கை பார்லி.,யில் ‘சிங்களம் மட்டுமே அரச மொழி‘ என்ற தனிச்சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் அரசுப்பணியில் உள்ள தமிழர்கள் சிங்களம் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். தமிழ் சிறுபான்மை சமுகத்தினர் இதை எதிர்த்தனர். இதனால் 1958 இல் தமிழர் வாழும் பகுதிகளில் தமிழும் பயன்படுத்தப்படலாம் எனும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் இனங்களுக்கிடேயே பகையை உருவாக்கிய முதலாவது சட்டமாக இது கருதப்படுகிறது.



ஆரம்பித்தது போர்

இலங்கை அரசின் ஒரு தலைப்பட்சமான பல நடவடிக்கைகளால் உள்ளுக்குள் இருந்த பகை 1980களில் பெரும் போராட்டமாக வெடித்தது.பல கால கட்டங்களில் ராணுவத்துக்கு எதிராக தமிழ் அமைப்புகள் இணைந்து போராட்டம் நடத்தின. ராணுவத்தின் வெறி தாக்குதலுக்கு ஈடு கொடுக்க ஆயுதம் ஏந்திய போராட்டத்தையும் புலிகள் தொடங்கினர். பல தன்மைகளுடனும் தாக்கங்களுடனும் இனமோதல் வெளிப்பட்டு இருக்கின்றது. மோதலின் முக்கிய திருப்புமுனைகளைக் கொண்டு இலங்கை மோதலை 4 கட்டங்களாக கூறுகின்றனர்.

* ஈழப் போர் 1: (1983-1985; 1987) ஈழ இயக்கங்கள், புலிகள் ஒரு அணியாகவும், இலங்கை ராணுவம், இந்திய அமைதி காக்கும் படை எதிர் அணியிலும் இருந்தன.
* ஈழப் போர் 2: (1990-1995) - புலிகள் ஒரு அணியிலும் இலங்கை ராணுவம், பிற சில ஈழ இயக்கங்கள் எதிர் அணியிலும் இருந்தன.
* ஈழப் போர் 3: (1995 - 1999) - புலிகள் ஒரு அணியிலும் எதிரணியில் இலங்கை ராணுவமும் இருந்தது.
* ஈழப் போர் 4: (2006 - ) - புலிகள் ஒரு அணியிலும் எதிர் அணியில் இலங்கை ராணுவம், பிற புலி எதிர்ப்பு குழுக்கள் உள்ளன. இந்த போர் இன்னும் முடியவில்லை. தொடர்கிறது.



இறுதி போர்


இலங்கை போரில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.உலகில் சமீபகாலமாக நடந்த இனமோதல்களில் இந்த அளவுக்கு ஒரு இனம் அழிக்கப்பட்டதில்லை என்பது உலக பார்வையாளர்களின் ஒட்டு மொத்த கருத்தாக இருக்கிறது. தமிழினத்தை அழிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ராஜபக்சே திட்டமிட்டு செயல்படுகிறார்.
நார்வேயின் முயற்சியால் கொண்டு வரப்பட்ட போர்நிறுத்தத்தை இலங்கை அரசு முறித்துக்கொள்வதாக அறிவித்தது. இதையடுத்து 2008ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே மோதல் தீவிரம் அடைந்தது. 2008ம் ஆண்டு இறுதிக்குள் புலிகளை ஒழித்தே தீருவோம் என்று ராஜபக்சே முழக்கமிட்டார். புலிகளை கொல்வதாக கூறி இலங்கை ராணுவம் தினந்தோறும் தமிழர்களை கொன்று குவித்து முன்னேறியது.

அழிந்த நகரம்

புலிகளின் தலைநகராக விளங்கிய கிளிநொச்சி நகரை ராணுவம் கைபற்றியதாக ராசபக்சே இந்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி அறிவித்தார். கிளிநொச்சி நகருக்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் உள்ள மற்றுமொரு முக்கிய சந்தியாகிய கரடிப்போக்கு சந்தியையும், கிளிநொச்சி நகரின் ரயில் நிலையப்பகுதியையும் கைப்பற்றிவிட்டதாக அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக புலிகளின் வசம் இருந்த யானையிறவு கைபற்றப்பட்டது.
இரண்டு முக்கிய பகுதிகளை இழந்த புலிகள் முல்லை தீவில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் புகுந்தனர். இருந்தும் விடாமல் ராணுவம் துரத்தியது. ராணுவத்தின் முப்படைகளும் முல்லை தீவை சுற்றி வளைத்து தாக்கின. அடுத்த 20 நாட்களில் அதாவது ஜனவரி 25ம் தேதி புலிகளிடம் இருந்து முல்லை தீவை கைபற்றி விட்டதாக இலங்கை ராணுவம் கூறியது. புலிகளுக்கு எதிரான போரில் 95 சதவீதம் முடிந்து விட்டதாகவும் புலிகளைத் தேடி அழிக்கும் படலம் தொடர்வதாகவும் குறிப்பிடப்பட்டனர்.



பட்டினி எனும் ராஜ தந்திரம்

கடந்த 3 மாதமாக தொடரும் மோதலில் குழந்தைகள், பெண்கள், முதியோர் என 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐநாவின் ரகசிய அறிக்கை அதர்ச்சி தகவல் கூறுகிறது. ஆனால் இதையெல்லாம் கண்டு இலங்கை அரசு போரை நிறுத்துவதாக இல்லை. மேலும் போரை தீவிரப்படுத்துவதில்தான் அவர்கள் எண்ணமாக இருக்கிறது. தமிழர்களை புலிகள் மனித கேடயமாக பிடித்து வைத்துள்ளனர் எனவே தான் ராணுவம் முன்னேற முடியவில்லை என்று அப்பாவி தமிழர்களின் நலனில் அக்கறை உள்ளவர் போல ராஜபக்சேவும் அவரது ராணுவமும் தெரிவித்தது. ஆனால் உண்மையில் தமிழர்களை வரவழைக்க மோசமான தந்திரத்தை ராணுவம் கடைபிடித்தது.
ஏப்ரல் 1ம் தேதி முதல் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு உணவுப்பொருள் அனுப்புவதை இலங்கை அரசு அறவே நிறுத்தி விட்டது. முல்லை தீவில் காட்டுக்குள் வாழ்ந்த தமிழர்கள் உணவு கிடைக்காமல் திண்டாடினர். தண்ணீரை குடித்து வாழலாம் என்றால் கடல் பகுதியில் எல்லாம் உப்பு தண்ணீர். மழை பெய்ததால் தேங்கி கிடந்த தண்ணீரை தெளியவைத்து குடித்தனர். இதனால் தொற்று நோய் பாதிப்புகள் அதிகரித்தது. ரெட் கிராஸ், ஐநா உள்ளிட்ட அமைப்புகள் இந்த கொடூரத்தை வன்மையாக கண்டித்தன. ஆனால் ராணுவம் அசைந்து கொடுக்கவில்லை.
திடீரென தமிழ் புத்தாண்டுக்காக போர்நிறுத்தத்தை அறிவித்தார். உண்மையில் சிங்கள படையினர் இறுதி தாக்குதலை மேற்கொள்ளும் முன்பு கொஞ்சம் இளைப்பாறுவதற்காக கொடுக்கப்பட்ட தற்காலிக நிறுத்தமே அது.
ராணுவத்தினரை உற்சாகப்படுத்த இந்த லீவு நாளில்தான் அவர்களுக்கு விருந்தளித்தார் ராஜபக்சே. அவர் விருந்து சாப்பிடும் நேரத்தில் தமிழர்கள் சாப்பிட்டு 13 நாட்கள் ஆகியிருந்தது. பல குழந்தைகள் பசியால் உயிரை விட்டன. சரியான சரிவிகித உணவு உண்ணாமல் தமிழ் தாய்களின் மடியில் பால் வற்றிப்போனது. பால் குடிக்காத குழந்தைகள் உயிர் விட்டன.
2 நாள் நிறுத்தத்துக்கு பிறகு புதுக்குடியிருப்பு பகுதியை முற்றுகையிட்டு ராணுவம் தாக்கத்தொடங்கியது. இந்த தாக்குதலை வீடியோவில் பார்த்து ரசித்தார் ராஜபக்சே. பசியால் குழந்தைகளை இழந்த நுவற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்கள் எங்கு சென்றால் பசி போக்கலாம் என்று நினைத்திருந்த வேளையில் அதை தந்திரமாக பயன்படுத்தியது ராணுவம். பசியால் துடித்த ஆயிரக்கணக்கான மக்கள் வேறு வழியின்றி அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தனர். வீடியோவை பார்த்து தன் தந்திர கணக்கை தானே பாராட்டிக்கொண்டார் ராஜபக்சே. இது வரை ஒன்றை லட்சம் தமிழர்கள் அரசின் கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக அரசு கணக்கு கூறுகிறது.


தமிழர்கள் எதிர்காலம்?


வன்னியில் 4 லட்சத்து 70 ஆயிரம் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். ராஜபக்சே அரசின் கொடூர ராணுவ தாக்குதல்களில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதுதவிர ஒரு லட்சத்து 40 ஆயிரம் தமிழர்களை ராணுவத்தினர் பிடித்துள்ளனர். அவர்களில் 63 ஆயிரம் பேர் மட்டும் அரசின் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீதி 77 ஆயிரம் பேர் எங்கே என்று கேள்வி எழுப்பப் பட்டுள்ளது. பொதுமக்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்? புலிகளின் கட்டுப்பாட்டில் 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் இருந்தனர். இப்போதைய வெளியேற்றத்தில் ஒன்றரை லட்சம் பேர் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளனர். ராணுவத்தினர் கைபற்றிய பகுதிகளில் பல இடங்களில் ஏராளமான மனிதப் புதைகுழிகள் இருப்பதாக ராணுவத்திடம் இருந்து தப்பி வந்தவர்கள் கூறுகின்றனர். இவை தமிழர்களை மொத்தமாக கொன்று புதைக்கப்பட்ட குழிகளா? என்பதும் வேதனைக்குரிய விஷயம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி., சதாசிவம் கனகரத்தினம் இது குறித்து பார்லி.,யில் கேள்விகள் கேட்டபோது இலங்கை அரசால் பதில் சொல்லமுடியவில்லை.



திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்

ஆரம்பத்தில் இருந்தே தமிழர்கள் பகுதிகளில் சிங்களர்கள் குடியேற்றம் நடந்து வருகிறது. அதாவது நிலமற்ற சிங்களவர்களுக்கு நிலம் தரும் திட்டங்களை செயல்படுத்துகிறோம். தமிழர்களின் உரிமைகளை பறிக்க வில்லை என்று முந்தைய அரசுகள் கூறி வந்தன. ஆனால் அங்கு வாழ்ந்த தமிழர்களின் உரிமைகளை கருத்துக்களை கேட்காமல் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்பதுதான் உண்மை.
இப்போது இலங்கை அரசு கைபற்றிய கிளிநொச்சி, யானையிறவு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் இதே பாணியில்தான் சிங்களவர்கள் குடியேற்றம் செய்யப்பட உள்ளனர். ஆனால் மீண்டும் தமிழர்களை குடியேற அனுமதிக்க வேண்டும் என்பது உலக தமிழர்களின் கோரிக்கை. இலங்கை அரசோ இப்போதைக்கு தமிழர்களை முகாம்களில் தங்க வைப்பதாக சொல்கிறது. ஆனால் நிரந்தரமாக தமிழர்களை முகாம்களிலேயே முடக்கி விட்டு புலிகளிடம் இருந்து கைப்பற்றிய பகுதிகளில் எல்லாம் சிங்களவர்களை குடியேற்றுவதுதான் ராஜபக்சேவின் திட்டம் என்பது உலகறிந்த விஷயம். இதன் மூலம் தமிழர்களின் மரபுவழி நிலப்பரப்புகளில் தமிழர்களின் மரபுவழி உரிமைகளைச் சிதைக்கும் திட்டம் நடந்து வருகிறது.





கருவில் இன அழிப்பு

தமிழர்களை முற்றிலும் அழுத்தொழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசு போர் மட்டுமின்றில பல தந்திரங்களை கையாண்டு வருகிறது. வன்னிப் பகுதிகளில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வரும் தமிழர்களில் கருவுற்றிருக்கும் தாய்மார்களின் கருக்களைக் கலைக்குமாறு வவுனியா மருத்துவமனை அதிகாரிகளுக்கு ராணுவ உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழ் கர்ப்பிணிப் பெண்கள் கருக்கலைப்பு செய்து கொண்டால் நல்ல பராமரிப்பு கிடைக்கும் என ஏமாற்றியும், சிங்கள மொழி தெரியாதத் தமிழர்களிடம் சிங்கள மொழியில் அச்சிடப்பட்ட அனுமதிப் படிவங்களில் வற்புறுத்தி கையொப்பமிட வைத்தும் கருக்கலைப்புக்கு செய்யப்படுகின்றது.
இது தமிழர்களின் வருங்காலச் சந்ததியினர்களும் இலங்கை இலங்கை தீவில் இருக்கக் கூடாது என்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கையாகும். ஒரு இனத்தைக் கருவிலேயே அழித்தொழிக்கும் செயலாகும்.


குறையும் தமிழினம்

இலங்கை மக்கள் தொகையில் சிங்களர்களுக்கு அடுத்து இரண்டாவது பெரிய இனமாக தமிழர்கள் இருந்தனர். அதாவது மக்கள் தொகையில் 12 சதவீதத்தினர் தமிழர்கள் இருந்தனர். ஈழப்போர் தொடங்குவதற்கு முன்பு 12 லட்சம் தமிழர்கள் இருந்தனர். ஆனால் 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இது குறைந்து 3.9 சதவீதமாக ஆகிவிட்டது. 1983ம் ஆண்டில் இருந்து தொடங்கிய தமிழின அழிப்பில் தமிழர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது.

Tuesday, May 5, 2009

பிளாஷ் நியூஸ்: தமிழகத்தில் சோனியா பிரசாரம் இல்லை: தமிழர் பிரச்னை பற்றி பேச தயக்கம்


இலங்கை தமிழர்கள் ரத்தம் சிந்துவது பற்றி ஒரு வார்த்தை கூட உதிர்க்காத சோனியா தமிழகத்தில் எப்படி பிரசாரம் செய்வது என்று தயங்கிக்கொண்டிருந்தார். முதல்வர் கருணாநிதியும் எப்படி சோனியாவுடன் ஒரே மேடையில் உட்கார்ந்திருப்பது என்று தயங்கி கொண்டிருந்த வேளையில் உடல் நலத்தை காட்டி அப்பல்லோ மருத்துவமனையில் ரெஸ்ட் எடுக்கிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா களத்தில் எதிரியே இல்லாமல் 39 தொகுதிகளிலும் கலக்கி வருகிறார். அ.தி.மு.க.,வென்றால் நான் சொல்லும் மத்திய அரசு இலங்கையின் மீது போர் தொடுத்து தனி ஈழத்தை ஏற்படுத்தும் என்று முழங்குகிறார். அவருக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாத காங்., தி.மு.க., கூட்டணி என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டிருந்தது. எத்தனை நாளைக்குத்தான் ராஜபக்சேவின் ஊதுகுழலாக மாறி புலி புலி என்று புலம்புவது. புலி பிரசாரம் எடுபடாத நிலையில் பிரசாரத்துக்கு தமிழகம் வந்து அவமானப்படுவதை விட வராமல் இருப்பதே மேல் என்று கருதி விட்டார்.
தமிழகத்தில் இலங்கை தமிழர் பிரச்னை கொந்தளிப்பாக இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் சோனியா தமிழகம் வருவது அவ்வளவு நல்லதாக இருக்காது. ஒரு வேளை இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு பேட்டி அளித்து விட்டு பின்னர் வரலாம் என்று மத்திய உளவுத்துறை சோனியாவுக்கு ஆலோசனை கூறியது. ஆனால் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவா? அதெல்லாம் பேட்டியெல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டதாக டில்லி தகவல் ஒன்று கூறுகிறது.
13ம் தேதிக்கு முன்பே அல்லது 16ம் தேதி முடிவு தெரிவதற்கு முன்பே ஆளும் வர்க்கத்தின் தோல்வி முகம் வெளுத்துவிட்டது என்பதைத்தான் இது காட்டுகிறது. உண்மையை, தமிழர்களின் உணர்வை மதிக்கத்தெரியாத, அவர்களின் கண்ணீரை துடைக்காத கோழைகளாக மாறிவிட்டவர்கள் இவர்கள் என்பதை தவிர வேறு என்ன சொல்வது? சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.
வேறு ஒரு நாளில் சோனியா பிரசாரம் செய்வார் என்று அறிவித்திருக்கின்றனர்.பிரசாரத்துக்கு இன்னும் 5 நாட்கள்தான் இருக்கின்றன. அதற்குள் தமிழகத்தில் உள்ள ஓட்டு மொத்த தமிழர்களையும் சிறை வைத்து விட்டு யாரு மற்ற பரந்த மைதானத்தில் யாரை பார்த்து உரை நிகழ்த்தப்போகிறார் என்று தெரியவில்லை. அல்லது தமிழகத்துக்கு நேரே விண்வெளியில் மேடை போட்டு பேசப்போகிறாரோ என்னவோ தெரியவில்லை. எதிர்காலத்தில் காங்கிரசுக்கு தமிழகத்தில் முகம் இல்லை என்பது தெளிவாகி விட்டது.

Saturday, May 2, 2009

இன்று பத்திரிகை சுதந்திர தினம்:தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் இருக்கிறதா?


ஊடகச் சுதந்திரம் என்பது மிரட்டலும் தணிக்கையும் இல்லாமல் தகவலை வெளியிடுவதற்கான சுதந்திரமாகும். சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், ஊடகம் ஆகியவை மக்களாட்சியின் நான்கு தூண்களாக கருதப்பட்டுகின்றன. அதன் நீட்சியாக சுதந்திரமான ஊடகம் சமூகத்தின் முக்கிய அங்கமாக கருதப்படுகிறது.
வெவ்வேறு நாடுகளில் ஊடகச் சுதந்திரம் வெவ்வேறு நிலைகளில் உள்ளது. நேர்டிக் நாடுகள், கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஊடகங்கள் மிகச் சுதந்திரமாக இயங்குகின்றன. சீனா, ஈரான், வட கொரியா, கியூபா, இலங்கை ஆகிய நாடுகளில் ஊடகங்கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா ஒரளவு கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரு இடைப்பட்ட நாடாக உள்ளது.
சர்வதேச அளவில் ஊடகச் சுதந்திரம் இருக்கிறதா? என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். தமிழகத்தில் இருக்கிறதா? என்ற கேள்விக்கு வருவோம். இந்த கேள்விக்கு வலைப்பூ வாசகர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் என்னை பொறுத்தவரை ஊடகச் சுதந்திரம் தமிழகத்தில் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது.
ஊடகச் சுதந்திரம் என்பது முதல்வர் கருணாநிதியை சுற்றித்தான் இருக்கிறது. அவரை பற்றி அவருடைய ஆட்சி பற்றி விமர்சனம் செய்யாமல் இருப்பதுதான் ஊடகச் சுதந்திரம் என்று பலர் கருதிக்கொண்டிருக்கிறார்கள்.
மீறி யாராவது விமர்சனம் செய்தால் கருணாநிதி எதிர் கட்சி வரிசையில் இருந்தாலும் நேரடி விவாதம் நடந்து கொண்டிருக்கும் ஸ்டுடியோவுக்கு போன் போட்டு திட்டுவார்(உதாரணம்: விஜய் டிவியில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் விவாதத்தை வழி நடத்திய கோபியை போனில் விரட்டியதை யாரும் மறந்து விட முடியாது) இதுதான் ஊடகச் சுதந்திரம்.
தினகரனில் கருணாநிதி ஆசியுடன் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்புக்கு தினகரன் ஊழியர்களே எரிக்கப்படுவார்கள். இதுவும் கருணாநிதி ஆட்சியில் நிகழ்ந்த ஊடகச் சுதந்திரத்துக்கு எடுத்துக்காட்டு.
கருணாநிதி திட்டிவிடுவாரோ என்று பயந்து கொண்டு எதிர்கட்சிகளின் பேட்டியைக்கூட அடக்கி வெளியிடும் பத்திரிகைகள் இருக்கின்றன. வாழ்க ஊடகச் சுதந்திரம். இலங்கை தமிழர்களின் உணர்வுகளை பலிகளை செய்தியாக்காமல் ராஜபக்சேவின் ஊதுகுழலாக மாறி விட்ட, ஒரு காலத்தில் உண்மை செய்திகள் என்றால் நாங்கள்தான் என்று மார்தட்டிக்கொண்ட இந்து பத்திரிகையின் சுதந்திரம். வாழ்க ஊடகச் சுதந்திரம்.
ஜெயலலிதாவிடம் மட்டும் வீரம் காட்டும் நக்கீரன் கோபாலின் பத்திரிகை சுதந்திரம் வாழ்க
இவையெல்லாம் சமீபத்திய உதாரணங்கள்.
பழைய உதாரணங்களில் ஊடகச் சுதந்திரம் எப்படி காக்கப்பட்டது என்பதற்கு நிறையவே உதாரணங்கள் உள்ளன. பிரபல தமிழ் வார இதழான தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பணியாற்றிய ஒரு புகைப்படக்கரார் ஜெயலலிதாவை படம் எடுத்தார் என்ற குற்றத்துக்காக ஒரே நாள் இரவில் அவர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இது போன்று ஜெயலிதா ஆட்சியில் எண்ணற்ற ஊடகச் சுதந்திர மீறல்கள். இந்து பத்திரிகை வட்டாரத்தையே கதிகலங்க அடித்தவர். அதன் நிருபர் ராதா வெங்கடேசனை ஓட ஓட விரட்டி துரத்தினார் ஜெயலலிதா. அப்போது ஊடகச் சுதந்திரம் மீறப்பட்டதாக பத்திரிகையாளர்கள் குரல் கொடுத்தனர்.
அந்தந்த ஆட்சியாளர்களுக்கு ஒத்துப்போவதுதான் ஊடகச் சுதந்திரம். வாழ்க மேலும் வளர்க

Friday, May 1, 2009

தமிழக வேட்பாளர்களின் கிரிமினல் பட்டியல் எங்கே?


உ.பி.,யில்தான் கிரிமினல் வேட்பாளர்கள் அதிகம், பீகாரில் அதிகம் என்று தேர்தல்களம் 2009 பக்கத்தில் தமிழ் பத்திரிகைகள் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டன. ஆனால் தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீதுள்ள கிரிமினல் வழக்குகள் பற்றி இந்த பத்திரிகைகள் கண்டு கொள்ளாதது ஏன். வேட்பு மனுத்தாக்கல் முடிந்ததும் அன்றைய தினமே தொகுதி தேர்தல் அதிகாரியின் நோட்டீஸ் போர்ட்டில் ஒட்டப்பட்டிருக்கும் தகவல்களை சேகரித்து பகிரங்கப்படுத்தும் வேலையில் இருந்து தமிழ் பத்திரிகைகள் நழுவியது ஏன்? அல்லது செய்தியாளர்கள் திரட்டிக் கொண்டு வந்து கொடுத்த தகவல்களை வெளியிட ஆசிரியர், முதலாளிகளுக்கு என்ன தயக்கம்?
தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் கிரிமினல் பிண்ணனி என்ன என்பது தெரியாமலேயே வாக்காளன் ஓட்டுப்போட வேண்டுமா? வேட்பாளர்களின் குற்ற நிலவரம் பற்றி தெரிந்து கொள்ளத்தானே இந்த மாதிரி ஒரு முறையை தேர்தல் ஆணையம் கொண்டு வந்தது. தேர்தல் ஆணையம் தெரிவிப்பதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஏன் அச்சம் என்று யாருக்குமே புரியவில்லை.
இந்த பட்டியலில் தென் மாவட்டத்தை ஆளும் தி.மு.க. புள்ளியின் பெயரும் இடம் பெற வேண்டியிருக்கும் அதனால் நமக்கேன் வம்பு என்று பத்திரிகைகள் கருதுகின்றனவோ. அதுவாகத்தான் இருக்கும். வேறு என்ன இருக்கப்போகிறது. ஒருவரின் பட்டியலை வெளியிட வேண்டியிருக்குமே என்பதற்காக யாருடைய தகவல்களையும் வெளியிடாமல் இருப்பது என்னநியாயம்? தகவல் அறியும் உரிமை சட்டம் என்று இருக்கிறது. பத்திரிகைகள் வெளியிட மறுக்கும் உண்மைகளை வெளிக்கொணருவதற்கு என்ன செய்வது? ஏன் இந்த மூடி மறைப்பு?
இது ஒரு புறம் இருக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் இணையத்தளத்தை பார்த்தபோது அதிலும் வேட்பாளர்களின் குற்றப்பட்டியல் இல்லை. வேறு சில மாநிலங்களில் எல்லாம் இந்த தகவல் உடனுக்குடன் அப் லோட் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலை? நரேஷ்குப்தா சொல்லத்தான் முடியும். தேர்தல் பணியாற்றுகின்றவர்கள் மாநில அரசு அதிகாரிகள் தானே? ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 20க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கொடுத்த அபிடவிட்டை ஸ்கேன் செய்து அப் லோட் செய்ய எவ்வளவு நேரமாகும். ஏன் இந்த தாமதம்? சரி 13ம் தேதி காலை 8 மணிக்குள்ளாவது இந்த தகவல்களை தேர்தல் இணையத்தளத்தில் பார்க்கலாமா? அல்லது அதற்குள்ளாவது பத்திரிகைகள் பட்டியல் வெளியிடுமா? இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வது யார்?