Friday, April 26, 2013

ஏடிஎம், காவலாளிகள்....


நம்மிடம் பணம் சம்பாதிக்கும் திறன் இருக்கிறதோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் தெருவுக்கு, தெரு ஏடிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக சென்னையில் டாஸ்மாக் கடைகளுக்கு அருகே அதிக அளவு ஏடிஎம்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம்கள் அதிக அளவு டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலேயே இருக்கின்றன.

சம்பளம் வாங்கி குடித்து விட்டு வீட்டுக்குப்போ என்று அரசாங்கமே சொல்வது போல இருப்பதாக எனக்கு தோன்றியது. ஒரு வங்கியின் ஏடிஎம் ஒரே மாதிரி இருப்பதில்லை. உதாரணத்துக்கு சிட்டி யூனியன் வங்கியின் ஏடிஎம்மை எடுத்துக்கொண்டால் தியாகராயநகரில் ஒரு மாதிரி இருக்கிறது. அதற்கு பக்கத்தில் சைதாப்பேட்டை மார்க்கெட் பகுதியில் வேறு மாதிரி வடிவத்தில் இருக்கிறது. அட்டையை உள்ளே செலுத்தும் வழியில் இருந்து, பணம் எடுப்பதற்கான உத்தரவுகள் வரை அனைத்துமே ஒவ்வொரு ஏடிஎம்முக்கும் இன்னொரு ஏடிஎம்முக்கும் வித்தியாசமாக இருக்கிறது. ஒரு ஏடிஎம்மில் தொடுதிரையில் விருப்பத்தை தேர்வு செய்வது போல் இருக்கும். இன்னொன்றில், பட்டனை அழுத்த வேண்டியிருக்கும். இது போன்ற வித்தியாசங்கள் புதிய ஆட்களை, பெண்களை, முதியவர்களை குழப்புகின்றன. ஏன் ஒரே மாதிரி ஏடிஎம்களை வைக்க கூடாது? ஏடிஎம்-க்குள் செல்லும் போது முழுக்க, முழுக்க நாம் நிகழ்காலத்தில் இருக்க வேண்டியது அவசியம். ஏதாவது சிந்தித்துக்கொண்டே இருந்தோமானால், கார்டை தொலைத்து விடுவோம்.

நான் இப்படி கார்ப்பரேஷன் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது ஏதோ சிந்தனையில் திரும்ப கார்டை எடுக்க மறந்து விட்டேன். மீண்டும் ஒரு முறை பணம் எடுக்கும் தேவை எழுந்த போதுதான், கார்டை மிஷினிலேயே விட்டது ஞாபகம் வந்த்து. பின்னர் கடிதம் எழுதிக் கொடுத்து புதிய கார்டு வாங்க நேர்ந்த்து. பலருக்கு இது போல பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். சென்னை உட்பட பல ஊர்களில் அதிகமான ஏடிஎம்கள் இருப்பது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்குத்தான். ஆனால் பல இடங்களில் பழுதாகி இருப்பதும் அந்த ஏடிஎம்தான். சைதாப்பேட்டையில் ரெட்டிக்குப்பம் சாலையில் ரயில் நிலையத்துக்கு செல்லும் முன்பாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் மாத த்தில் 5 நாட்கள் இயங்கினால் அபூர்வம். எப்பொழுதுமே அவுட் ஆப் ஆர்டர் என்ற காவலாளியின் கைவண்ணத்தில் எழுதிய ஒரு அறிவிப்பு பலகை தொங்கிக் கொண்டிருக்கும்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் அவசரத்துக்கு 100 ரூபாய் எடுக்கவே முடியாது. சில நேரங்களில் 500 ரூபாய் நோட்டு கூட வராது. 1000 ரூபாய் மட்டுமே வரும். அது போல அவர்கள் போட்டு வைத்திருக்கின்றனர். இது ரிசர்வ் வங்கி விதிமுறைகளுக்கு முரணானதா? என்று தெரியவில்லை.

எச்.டி.எப்.சி., ஏடிஎம் அறைகளில் இரண்டு அல்லது மூன்று ஏடிஎம்கள் ஒரே இடத்தில் அமைத்திருக்கின்றனர். 100 ரூபாய் எடுத்தால் கூட புது தாள் ஆக வந்து விழும். ஆச்சர்யமாக இருக்கிறது. 15 வருடங்களுக்கு முன்பு 10 ரூபாய் தாளை புதுத்தாள் ஆக பார்த்தால் அதை பத்திரமாக வைக்க தோன்றும். இப்போது 100 ரூபாய் தாளை புதிதாக பார்த்தால் கூட அதை பத்திரமாக வைக்க தோனுவதில்லை. ஒரு வேளை தோன்றினாலும். செலவுக்கான முன்தேவைகள் கண்முன் வந்து நிற்கின்றன.

ஏடிஎம்-க்கு அறைகளை வாடகைக்கு விடுவதற்குத்தான் இப்போதெல்லாம் சென்னை வாடகை வீட்டுக்கார ர்கள் விருப்பப்படுகின்றனர். கீழ் தளத்தில் இருக்கும் வீடுகள் எல்லாம் ஏடிஎம்களாக முகம் மாறிப்போனது இப்படித்தான். வங்கி தரும் ஆயிரகணக்கான அட்வான்ஸ் தொகை. மாத வாடகை ஆகியவை எந்த வீட்டு உரிமையாளருக்குத்தான் கசக்கும்!

ஏடிஎம்-ஐ காவல் காக்கும் காவலாளிகளும் வித்தியாசமான நபர்களாக இருக்கின்றனர். சைதாப்பேட்டை ரெட்டி குப்பம் சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம்மை தூய்மையாக வைத்துக்கொள்வதில் அதன் காவலாளி மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். பெரும்பாலான நேரங்களில் இந்த ஏடிஎம் இயங்குவதில்லை என்று மேலே கூறியிருந்தேன். அப்படியிருக்கும் போதிலும் ஏடிஎம்மை தூய்மை படுத்துவதில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். மழை நேரங்களில் செருப்பை கழட்டி விட்டு செல்லும் படி கூறுவார். இப்படி சுத்தமான மனிதராக இருக்கிறாரே என்று ஆச்சர்யப்பட்டுப்போனேன்.

ஏடிஎம் காவலாளிகள் பெரும்பாலும் முதியவர்களாகத்தான் இருக்கிறார்கள். குறைந்த சம்பளத்தில் அவர்கள்தான் கிடைப்பார்கள் என்பதால் வங்கிகள் இது போன்று நியமித்திருக்கலாம் என்று தெரிகிறது.

வானகரத்தில் உள்ள தொலைகாட்சி ஊடகம் ஒன்றில் பணியாற்றியபோது வளசரவாக்கம் வழியாக செல்வது வழக்கம். அப்போது அங்கு உள்ள எச்டிஎப்சி ஏடிஎம்மில் பணம் எடுத்து விட்டு வரும்போது அங்கிருந்த காவலாளி பரிதாபமாக கையேந்தினார். அதர்ச்சியாக இருந்த்து. ஏடிஎம்ஐ காவல் காக்கும் ஒருவர் பணம் கேட்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அந்த ஒரு முறை மட்டும் இல்லை. இன்னொரு முறை அதே ஏடிஎம்-ல் பணம் எடுத்தபோதும் இதே போல பணம் கேட்டார். என்னிடம் மட்டும் இல்லை அங்கு வரும் எல்லோரிடமும் கேட்டார். சிலர் அவரை திட்டக்கூட செய்தனர்.

இதே போல நகரின் வேறு ஒரு இடத்திலும் இது போல ஒரு காவலாளி என்னிடம் பணம் கேட்டார். பெரும்பாலான ஏடிஎம்களில் காவலாளிகள் பணம் கேட்பதில்லை. பணம் எடுத்து விட்டு வெளியே வரும் போது எந்தவித பாவனையும் காட்டாமல்தான் காவலாளிகள் இருக்கின்றனர். சிலர் கதவை திறப்பதற்கு உதவுகின்றனர். கார்டை செலுத்தி கதவை திறப்பது எப்படி என்று சொல்லிக்கொடுக்கின்றனர்.

ஏடிஎம் காவலாளிகளிடம் எப்போதுமே நான் பேசியதில்லை. தற்போது நான் குடியிருக்கும் வீட்டுக்கு அருகிலேயே ஒரு ஏடிஎம் இருக்கிறது. அவ்வப்போது அதில்தான் பணம் எடுக்கிறேன். அந்த ஏடிஎம் காவலாளியுடன் பேசிக்கொண்டிருப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது.

ஏடிஎம் மிஷினுக்கு பணம் எடுக்க வருபவர்கள் எண்ணிக்கை 15-ம் தேதி வரை தான் அதிகம் இருக்கும் என்றார். சம்பளம் காலியாகி விடுவதால் அதன்பின்னர் பெரும்பாலானோர் வருவதில்லை என்றார்.

அந்த ஏடிஎம் காவலாளி தம்மை பற்றி நிறைய தகவல்களை என்னிடம்பகிர்ந்து கொண்டார். திருச்செந்தூரை சேர்ந்த அவர், ஒரு நாள் பள்ளி இறுதி தேர்வு விடுமுறைக்காக சென்னைக்கு அண்ணன் வீட்டு வந்தாராம். அண்ணன் பிரசாத் ஸ்டுடியோவில் வேலைபார்த்து வந்தார். அவர் தமது தம்பியையும் அங்கேயே வேலைக்கு சேர்த்து விட்டாராம். டைப்பிஸ்ட் ஆக வேலைக்கு சேர்ந்தவர், கதைகளை டைப் செய்வது, ஷூட்டிங் செட்யூலை டைப் செய்வது, ஸ்டுடியோவில் எத்தனை தளங்கள் இருக்கின்றனவோ, அந்த ந்த தளங்களில் தினந்தோறும் நடைபெறும் ஷூட்டிங் விவரங்களை டைப் செய்து அதனை ஆவணமாக்குவது போன்ற பணிகளை செய்து வந்திருக்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இணைந்து நடித்த திரைப்படங்கள் ஷீட்டிங்களை நேரில் பார்த்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

பின்னர் சொந்த தொழில் செய்து விட்டு, பிரச்னைகள் ஏற்பட்டு, இப்போது ஏடிஎம் காவலாளியாக இருக்கிறார். ஏடிஎம்-க்கு வெளியே நாற்காலியை போட்டு அமர்ந்தால் தேவையின்றி எழுந்திருக்க மாட்டார். பெரும்பாலான நேரங்களில் நாளிதழ் படித்துக்கொண்டே இருப்பார்.

இப்போதெல்லாம் ஏடிஎம் இயந்திரங்களை உடைக்க முயற்சி என்று பரவலாக செய்திகள் வருகின்றன. கோடிக்கணக்கான ரூபாய்களை புழங்கும் ஏடிஎம்-க்கு திடகாத்திரமான ஏடிஎம் காவலாளிகளை நியமிக்க வேண்டும்என்று காவலாளிகள் சங்கத்தினரும் கூறி வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் வங்கி நிறுவனங்கள் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. வங்கிகள் இப்போது வாராக்கடன் சதவீதம் என்று கணக்கு எழுதி விடுகின்றனர். அதைப்பற்றி கவலைப்படவில்லை. இதனால்தான் கடன் வாங்கிய பல அரசியல்வாதிகள் தப்பித்து வருகின்றனர். அதைப்போல ஏடிஎம் கொள்ளைகளும் சகஜமான ஒன்று என்றும், கொள்ளைகள் நடந்தால் நடக்கட்டும் என்று வங்கிகள் நினைத்து விட்டன போல்தான் தெரிகிறது. வாரா கடன் போல, ஏடிஎம் கொள்ளை கணக்கு என்று எழுதுவார்கள் போல் தெரிகிறது.

No comments:

Post a Comment