Saturday, April 13, 2013

ஏ.டி.எம். கார்டு, இயந்திரம், காவலாளி....


பல தலைமுறைகள் அறிந்திராத, தற்போதைய தலைமுறைக்கு மட்டுமே அறிமுகமான ஒன்று ஏடிஎம். என் தந்தை திண்டுக்கல் நகரில் வேளாண்விளை பொருட்களை விற்கும் கமிஷன் மண்டி வைத்திருந்தார். தினமும் ஆயிரகணக்கான ரூபாய் பணத்தை புழங்குவார். வங்கியில் நடப்பு கணக்கு வைத்திருந்தார். ஏடிஎம் வசதி இருந்தும் கூட அதற்கான ஏடிஎம் கார்டை அவர் பெற்றுக்கொண்டதில்லை, உபயோகித்ததும் இல்லை. ஒருவேளை இப்போது உயிருடன் இருந்திருந்தால் உபயோகித்திருப்பாரா? என தெரியவில்லை. என் அம்மாவும் இதுவரை ஏடிஎம் கார்டை உபயோகித்த தில்லை. என் சகோதரன் அல்லது நான் அவருடைய பணத்தேவைகளை பூர்த்தி செய்து விடுவதால் அதற்கான அவசியம் இல்லை எனலாம்.

ஏடிஎம் உள்ளே கூட சென்று பார்த்ததாக எனக்கு தெரியவில்லை. அதற்கான ஆசை இருக்கிறதா என்றும் தெரியவில்லை. இந்த கட்டுரை எழுதும் தருணத்தில் என் அம்மாவிடம் கேட்டுப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

அதே நேரத்தில் என் குழந்தைகள் ஏடிஎம்-மின் குளிர் அறைக்குள் செல்வதற்கு மிகவும் பிரியப்படுகிறார்கள். நான் முதன் முதலில் ஏடிஎம் என்ற புழக்கத்தை தெரிந்து கொண்டது ஒரு நண்பர் மூலம்தான்.

1998-2000-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் என்று நினைக்கிறேன். சென்னையில் சில பத்திரிகைகளுக்கு பகுதிநேரமாக எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது ஆறாம் திணை இணையதளத்தில் பணியாற்றிய நண்பர் சுந்தரமூர்த்தி. அவருக்கு அப்போது வங்கியில்தான் சம்பளம் கிரடிட் ஆகும். அவரிடம் ஒரு முறை பணம் கேட்டேன். ஏடிஎம்-க்கு அழைத்து சென்று எடுத்துக்கொடுத்தார்.

அதன் பிறகு நான் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வெளிவந்த தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழில் பணியாற்றியபோது முதல் சில ஆண்டுகளில் ஒரு கவரில் வைத்து பணமாக சம்பளம் கொடுத்தனர். 2002-ம் ஆண்டு வாக்கில்தான வங்கி கணக்கில் சம்பளம் கிரடிட் ஆயிற்று. எச்டிஎப்சி வங்கியில் இருந்து பளபளக்கும் அட்டை ஒன்றை கொடுத்தனர். ஆரம்பத்தில் அது டெபிட் கார்டா அல்லது கிரெடிட் கார்டா என்ற குழப்பம் எனக்கும் என் நண்பர்களுக்கும் இருந்தது. நமது கணக்கில் பணம் இருந்தால்தான் டெபிட் கார்டை உபயோகிக்க முடியும் என்பதும், கிரெடிட் கார்டு என்பது வங்கி அளித்த வரம்புக்குள் கடனாக அதனை உபயோகித்து திருப்பி செலுத்த வேண்டும் என்பதும் ஒரு சில மாதங்கள் கழித்துத்தான புரிந்தது. ஆரம்பத்தில் இருந்தே 100 ரூபாய்க்கு குறைந்து ஏடிஎம் அட்டை மூலம் எடுக்க முடியாது என்பது விதியாக இருந்து வருகிறது. ஆரம்ப கால கட்டத்தில் இந்த விதிமுறை அதர்ச்சியாக இருந்தது. நூறு ரூபாய்க்கு கீழே குறைந்து விட்டால் அந்த பணத்தை எடுக்க முடியாமல், மாதக்கடைசியில் தவிப்பது இன்றும் சில நேரங்களில் எரிச்சலாக இருக்கிறது.

தமிழன் எக்ஸ்பிரசில் இருந்து மாறி தினகரன் நாளிதழில் சேர்ந்த போது, வங்கி அதிகாரிகள் அலுவலகத்துக்கே வந்து கணக்கு படிவத்தில் கையெழுத்து வாங்கி போனார்கள். முதலில் சிட்டி யூனியன் வங்கியில் கணக்கு தொடங்கினர். மாத்த்தின் முதல்வராத்தில் சம்பளம் போட்டு விட்டார்களா என்பதை அறிய ஏடிஎம் கார்டை திரும்ப, திரும்ப போட்டு பார்ப்பது இயல்பான ஒன்றாகிப் போனது. ஒரு சில மாதங்களிலேயே என்ன ஆனதோ தெரியவில்லை, தினகரன் நிர்வாகத்தின் வங்கி கணக்கு கார்ப்பரேஷன் வங்கிக்கு மாற்றப்பட்டது. உடனே அனைவரும் கார்ப்பரேஷன் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டோம். அங்கு புதிதாக ஏடிஎம் கார்டு கொடுத்தார்கள். ஒரே நேரத்தில் இரண்டு ஏடிஎம் கார்டுகளை பையில் வைத்து சுற்றிக்கொண்டிருந்தேன். வங்கி கணக்கில் ஒன்றும் இல்லை. ஆனால் ஏடிஎம் கார்டு மட்டும் இரண்டு இருந்தது. சிட்டி யூனியன் வங்கி ஏடிஎம் கார்டு வைத்திருக்கும்போது ஒரு முறை பெட்ரோல் பங்கில், அந்த வங்கியின் ஏடிஎம் கார்டை உபயோகித்து பெட்ரோல் போட்டேன். டெபிட் கார்டு என்ற போதிலும் கணக்கில் இருந்த பணத்தை விட அதிகமாக டெபிட் ஆகிவிட்டது. பின்னர் வங்கியில் இருந்து என்னை அழைத்து தவறுதலாக உங்களுக்கு கூடுதலாக பணம் வந்து விட்டது. அதை திரும்பி செலுத்துங்கள் என்றனர்.

இப்படியாக ஏடிஎம்-க்கும், எனக்குமான உறவு தொடர்ந்து கொண்டிருந்தது. எழும்பூர் தினமலர் நாளிதழில் உதவி ஆசிரியராக பணியாற்றியபோது, மீண்டும் பழைய முறையில் கவரில் சம்பளம் கொடுத்தனர்.

எனினும் பகுதிநேரமாக மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளை செய்து கொண்டிருந்த போது, அதற்காக சிலர் வங்கி கணக்கில் பணத்தை செலுத்திவிடுவார்கள். அதனை எடுப்பதற்கு எனக்கு சிட்டியூனியன் வங்கி கார்டு உபயோகமாக இருந்தது. இடையில் ஒன்றை சொல்லியாக வேண்டும்.

வங்கி கடனுக்காக இடையில் அலைந்து கொண்டிருந்தேன். ஆந்திரா வங்கியில் கணக்கு ஆரம்பித்தால் வங்கி கடன் பெற்று விடலாம் என்று ஒரு நண்பர் தகவல் சொன்னார். அதை நம்பி ராயப்பேட்டையில் உள்ள ஆந்திரா வங்கியில் கணக்கு தொடங்கினேன். அதில் கொஞ்சகாலம் பணத்தை போட்டு எடுத்து வந்தேன். அந்த ஏடிஎம் கார்டையும் வாங்கி பயன்படுத்தினேன். ஒரே நேரத்தில் 3 ஏடிஎம் கார்டை வைத்துக்கொண்டு திரிந்தேன்.

ஆந்திரா வங்கியில் ஏடிஎம் கார்டில் பணம் எடுப்பது பிரச்னைக்கு உரிய ஒன்று. நான் கணக்கு வைத்திருந்த நாட்களில் சென்னையில் அந்த வங்கியின் ஏடிஎம் படுத்தி எடுத்து விடும். பெரும்பாலும் பழுதில் இருக்கும்.

தினமலரில் இருந்து சன் குழுமத்தில் சன்நியூஸ் தொலைகாட்சியில் உதவி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன்.

இன்னும் ஒரு வங்கி கணக்கா என்று அயர்ச்சி ஏற்பட்டது. நல்ல வேளையாக அவர்கள் ஏற்கனவே என்ன வங்கி கணக்கு இருக்கிறது என்று கேட்டனர். சிட்டி யூனியன் வங்கி கணக்கு இருக்கிறது என்றேன. சரி அந்த எண்ணை மட்டும் கொடுத்து விடுங்கள் என்றேன். நல்ல வேளையாக அந்த வங்கி கணக்கை செயலில் வைத்திருந்ததால் அந்த எண்ணை கொடுத்து விட்டேன்.

அடிக்கடி பணம் எடுத்து கார்டு தேய்ந்து விட்டது. எனவே சிட்டி யூனியன் வங்கியில் இருந்து புதிய கார்டு ஒன்றை வாங்கினேன்.

இந்த தருணத்தில் வீட்டு கடன் ஒன்று வாங்க முயற்சித்து, பாரத ஸ்டேட் வங்கியில் முயற்சித்த போது, அங்கே வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றனர். பின்னர் அங்கிருந்து ஒரு புதிய ஏடிஎம் கார்டு கிடைத்தது. வீட்டு கடன் கிடைக்கவில்லை என்பது வேறுவிஷயம்.

என் மனைவிக்கு என இந்தியன் வங்கியில் ஒரு கணக்கு தொடங்கினோம். அங்கு அவருக்கு ஒரு ஏடிஎம் கார்டு கொடுத்தார்கள். அதனை நெடுநாளாக உபயோகிக்க வில்லை என்பதால் மீண்டும் புதுப்பிக்க கூறினர். ஆனால் இன்னும் அதனை புதுப்பிக்க முடியாமல் இருக்கிறது.

சன்குழுமத்தில்  என்னோடு ஒரு நண்பர் பணியாற்றினார். அவருடைய ஏடிஎம் கார்டு அவரிடம் இருப்பதில்லை. அவரின் மகனிடம்தான் இருக்குமாம். அவரே சொன்ன தகவல் இது. சம்பளம் போட்டதும் அதில் இருந்து பணத்தை எடுத்து அவர் மனைவியிடம் அவர் மகன்தான் கொடுப்பானாம். கார்டை எப்போதுமே இவர் கையில் வைத்ததில்லை என்றார்.

கணவர் சம்பாதிக்கும் பணம் சரியாக வீடு வந்து சேரவேண்டும் என்ற மனைவியின் அக்கறையாக இதனை கருதினேன்.

பெரும்பாலானோர் அலுவலகத்தில் வாங்கும் சம்பளம் பற்றியோ, எப்போது வரும் என்பது பற்றியோ கூறுவதில்லை. அதன் பலனாக இது போன்ற நிலைவந்திருக்கலாம் என்று கருதுகிறேன்.

ஏடிஎம் முறை வழக்கத்தில் வந்ததில் இருந்து இன்னொரு முறை வழக்கொழிந்து போய்விட்டது என்றே கருதுகிறேன்.

சம்பளம் வாங்கும் நபர்கள் பலர் ஏடிஎம் கார்டு புழக்கத்துக்கு வருவதற்கு முன்பு சம்பள கவரை சுவாமி படத்தின் முன்பு வைத்து வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர். திருமணம் ஆகிவிட்டால் மனைவியிடம் கொடுத்து அதனை சுவாமி படத்தின் முன்பு வைக்க சொல்வதும், இல்லை எனில் அம்மாவிடம் கொடுத்து வைக்கச் சொல்வதும் நடைமுறையாக இருந்திருக்கிறது. இப்போது யாரும் ஏடிஎம் கார்டை அவ்வாறு வைப்பதில்லை. நிறைய பேருக்கு சம்பளம் பற்றி பொய் சொல்வதற்கும் இது வசதியாகி விட்டது என்றே கூறலாம்.

ஏடிஎம் இயந்திரம், காவலாளி பற்றி அடுத்த பதிவுகளில் சொல்கிறேன்.....

1 comment: