Thursday, April 4, 2013

மலர்ச்சி எங்கே?

அதிகாலை எழுவது எனக்கு பிடித்தமான ஒன்று. ஆனால் அலுவலகத்தில் இரவுப் பணி போன்ற காரணங்களால் கடந்த 8 வருடங்களாகவே அதிகாலை எழும் பழக்கம் என்னிடம் இருந்து விட்டுப் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சிறுவயதில் அதிகாலையில் எழுந்து அப்பா உடன் ஆற்றில் குளித்த புத்துணர்ச்சி எந்த ஒரு சூழலிலும் இனி வரப்போவதில்லை.


தாய்மாமா வீட்டில் கொஞ்ச காலம் வளர்ந்த போது, அவருக்கு உதவியாக அதிகாலையில் பேப்பர் போடச் சென்ற அனுபவமும் அலாதியானது.

பேப்பர் போடப்போகும்போது பல் துலக்காமல் மார்கழி பனியில் பெருமாள் கோவிலில் பொங்கல் வாங்கி சாப்பிட்ட அனுபவங்கள் ரசனையானவை.

பொங்கல், தீபாவளி பண்டிகைக்கு அதிகாலையில் எழுந்து குளிப்பது. வெளியூர்களுக்கு செல்லும் போது அதிகாலையில் எழுந்து பேருந்தில் தூங்கிக்கொண்டே செல்வது என்பதும் சிறுவயது அனுபவங்களில் ஒன்றாக இருந்திருக்கிறது.

சென்னை நகர வாழ்க்கையாகிப் போனபிறகு இரவு தூங்குவதற்கே பின்னிரவாகி விடுகிறது. அப்புறம் எங்கே அதிகாலையை ரசிப்பது என்று தெரியவில்லை.

ஒரு நாள் நானும் என் மனைவியும் அதிகாலை கடற்கரைக்கு சென்றோம். சூரியன் உதிக்கும் அந்த காலைப்பொழுதை மிகவும் ரசித்தோம்.

கடற்கரை ஓரமாய் இருக்கும் ஒரு தொலைகாட்சியின் செய்திப்பிரிவில் பணியாற்றிய போது காலை ஷிப்ட்டில் வானுயர்ந்த கட்டிடத்தின் கண்ணாடி ஜன்னல் வழியே உதிக்கும் கதிரவனை பார்ப்பது அப்படி ஒரு ஆனந்தமாய் இருக்கும்.

அதிகாலை வேளையில் கடற்கரை நோக்கி செல்லும் ஏதாவது ஒரு சாலையில் நடந்து சென்றால் மெல்ல, மெல்ல சூரியன் எட்டிப்பார்க்கும் காட்சி அற்புதமானதாக இருக்கும்.

அதிகாலை வேளையில் சகமனிதர்களை பார்ப்பதும் அலாதியான அனுபவமாக எனக்கு இருக்கிறது. அதிகாலை வேளையில் எழுந்து இருசக்கர வாகனத்தில் செல்லுகையில் இரண்டு அல்லது மூன்று பயணிகளுடன் கூட்டமில்லாமல் நம்மை கடந்து போகும் மாநகரப் பேருந்துகள், வெளியூர் பயணிகளை சுமந்து செல்லும் ஆட்டோக்கள், அசோக்நகரில் நடைபயிற்சிக்காக விதவிதமான ஷூக்களில் விரையும் கால்கள் எல்லாமே உற்றுநோக்கலில் ஒருவகையான ரசனை.

அதிகாலை புத்துணர்ச்சியை அனுபவிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் என்னைப்போன்ற அனுபவங்களை பெற்றிருக்க கூடும். அலுவலகத்தில் அதிகாலையில் சிலரது முகத்தை காணும் போது ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று கேட்கத் தோன்றும்.

பெரும்பாலானோர் அதிகாலை வேளையில் கூட முகம் மலராமல் இறுக்கமாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

முடிந்து போன நாளின் தாக்கத்தின் விளைவாக, அதன் தொடர்ச்சியாக காலையிலும் அதே போல இருக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. இன்று ஒருவரை பார்த்தேன். அவரது சம்பளமோ அதிகம், எனினும் அவரது களையிழந்த முகம் எனக்கு கவலையை ஏற்படுத்தியது. அவருக்கு என்ன கவலை இருக்க முடியும், அழுது வடிந்த முகம், சட்டையில் ஏதோ கறை என அழுது வடிந்து கொண்டிருந்தார்.

மலர்ச்சியான முகத்தை காண்பது இப்போதெல்லாம் அரிதாகிவிட்டது.

பிரச்னைகளில் சிக்கி தவிக்கும் மனிதர்களில் இறுக்கத்தைத்தான் பார்க்க முடிகிறது. அதிகாலையில் மலரும் பூவைப் போல மலர்ந்த முகங்களை பார்ப்பது அரிதாகி வருகிறது.

குழந்தைகளிடம் இருக்கும் மலர்ச்சி கூட சில நேரங்களில் இல்லாமல் போய்விடுகிறது. அதிகாலையில் அவர்களை எழுப்பி, வியபார கல்வி ஆகிவிட்ட சூழலில் அவர்களை பள்ளி எனும் கொட்டடிக்குள் அடைக்க அனுப்பி வைக்கிறோம். மலர்ச்சி எங்கே போனது என்று தெரியவில்லை. எங்கேயாவது மலர்ச்சி இருந்தால் சொல்லுங்கள்....

2 comments:

  1. அதிகாலை என்பது ஆனந்தம்தான் காலையில் கண்விழிக்கும்போது ஏற்படும் கஷ்டத்தை அனுபவிக்க தெரிந்தவனுக்கு, நான் அதிகமாக அந்த அனுபவத்தை பெற்றவன். என் பள்ளி காலம் தொட்டே அதிகாலை எழுவது என் வாடிக்கை. என்னுடைய வேலையும் பெரும்பாலும் கலை நேர வேலையாக அமைந்ததால் அந்த அலாதியான அனுபவம் இன்னும் தொடர்கிறது. நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  2. தனிமனிதனின் அனுபவங்கள்தான் ஒரு சமூகத்தின் அனுபவம்.

    ReplyDelete