Wednesday, March 18, 2009

வருண் காந்தி: புறக்கணிக்கப்பட்ட குழந்தை

செய்திக்கு கீழே வீடியோவை பார்க்கவும்

நேரு குடும்பத்து வாரிசு வருண்காந்தி, அந்த குடும்பம் கட்டி காப்பாற்றி வந்த மதஒற்றுமைக்கு வேட்டு வைத்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ஆனால் உண்மையில் இதில் உளபூர்வமான விஷயமும் ஒளிந்துகிடப்பதுதான் நிஜம். இந்திராவின் பிள்ளைகளில்் ராஜிவ் விமான ஓட்டி என்று அரசியல் ஆர்வமற்று போனதால், சஞ்சய் காந்தியை, இந்திரா முன்னிலைப்படுத்தினார் என்றும், பின்னர் அதுவே அவருக்கு குடைச்சலாக மாறி விட்டது. அதன் பின்னர் நிகழ்ந்த அவரின் மரணத்தில் இன்று வரை தீர்க்கப்படாத ரகசியம் ஒளிந்து கிடக்கிறது. இந்திராவின் மரணத்துக்கு பின்னர் வேறு வழியின்றி அரசியலுக்கு நுழைந்த ராஜிவ், அவரது மரணத்துக்கு பின்னர் அரசியலுக்கு வந்த இந்தியாவின் இத்தாலி மருமகள் சோனியா, தன் மகன் ராகுலை காங்கிரசில் எல்லாமாய் மாற்றிவிட்டார். வட இந்திய பத்திரிகைகள் மட்டுமின்றி, தென்னிந்திய பத்திரிகைகளும் ராகுல் பற்றி தினமும் ஒரு பத்தியாவது செய்தியை வெளியிட்டு விடுகின்றன. மரத்தடியில் கல்லூரி மாணவிகளுடன் குழுமியிருக்கும் படங்கள் வாராம் ஒன்றாவது கலர் புல்லாக வெளிவருகின்றன. இவையெல்லாம் மேனகாவின் மகன், வருணின் மனதில் நம்மை பற்றிய செய்திகள் வருவதில்லையே என்ற ஒரு ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். அதன் விளைவாகவே அவர் அதிரடியாக பேசி ஒரே நாளில் வட இந்திய பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாகவும், தென்னிந்திய பத்திரிகைகளில் முதல் பக்கத்து செய்தியாகவும், சற்றுமுன் வந்த தகவலாக இன்னும் வருண் பற்றிய செய்திகளுக்கு தொலைகாட்சி செய்தி ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
வருண் அதிரடியாக பேசியது, தவறு, தவறல்ல என்ற வாதத்துக்கு போகும் முன், அவரை போல முன்பு பேசிய நரேந்திரமோடிக்கு நம்நாட்டின் உச்சநீதிமன்றம் கொடுத்த கண்டன கனைகள் என்ன? கோத்ரா அறிக்கைகளில் வைக்கப்பட்ட குட்டுகளுக்கு குறைவில்லை. அவர் பேசிய மேடை முழக்கங்கள் என்ன என்பதும் ஊரறிந்தவிஷயம். மீடியாக்களும், நீதி அமைப்புகளும் அவருக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு இருக்க தேர்தலில் அவர் நிச்சயம் தோற்றுப்போவார் என்று அவரை தவிர தேசமே எதிர்பார்த்தது. நடந்தது என்ன? அவரின் ஆவேசமான பேச்சை ரகசியமாக பலர் மனதுக்குள் ரசித்ததன் விளைவுதான் அவருக்கு வெற்றியை கொடுத்திருக்கிறது. இந்த அதிரடிகளை பார்த்து வந்த வருண் இப்போது புதிதாய் கிளம்பியிருக்கிறார். இத்தனை நாள் ஒதுக்கப்பட்டிருந்தேன். இதோ நானும் இருக்கிறேன். என்னையும் கவனியுங்கள் என்ற புறக்கணிக்கப்பட்ட ஒரு குழந்தையை போல அவர் எட்டிப்பார்த்திருக்கிறார். அவ்வளவுதான். அதற்கு அவருக்கு, எப்போதுமே சர்ச்சையை கிளப்பும் இந்து,முஸ்லீம் பேச்சு கைகொடுத்திருக்கிறது. அவ்வளவுதான்.

No comments:

Post a Comment