Friday, February 27, 2009

லோக்சபா 14வது கூட்டத்தொடர்




தடம் பதிவுகள் ஒரு ஆய்வு


தினந்தோறும் தொண்டை கிழிய கத்திய மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்களின் குரலை ஒலிபரப்பிய லோக்சபா ஒலிப்பெருக்கிகளுக்கு, மைக்குகளுக்கு தற்காலிக ஓய்வு வந்து வந்து விட்டது. 14வது பாராளுமன்ற கூட்டம் முடிந்து விட்டது. இந்த பாராளுமன்றம் முன் எப்போதையும் விட நானும் சளைத்ததில்லை என்பதற்கேற்ப கூச்சலும், குழப்பமாக, கூட்டம் நடந்த போதெல்லாம் தலைப்பு செய்தியாய் சுடசுட பேப்பரில் இடம்பெற்ற செய்தியாய் தடம் பதித்து வந்திருக்கிறது.
இந்த தடத்தில் முதல் பதிவு, இரட்டை
பதவி விவகாரம். சோனியா ஆதாயம் தரும் இரட்டை பதவி வகித்தார் என்று பாஜ கட்சி குய்யோ முறையோ என்று கூச்சல் போட, காங்கிரஸ் தலைவி தனது இரண்டாவது பதவியை விட்டு விலகினார். சர்ச்சை அப்போதைக்கு ஒய்ந்து, சில மாதங்கள் கழித்து, சோனியா வகித்தது ஆதாயம் தரும் பதவி அல்ல என்ற தேர்தல் ஆணையத்தின் பதிலோடு முற்றுபெற்றது.
இரண்டாவது பதிவு என்பது பாராளுமன்ற வரலாற்றில் கரும்புள்ளியை குத்திய பதிவு. பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க பாஜ, பகுஜன் சமாஜ் எம்பிக்கள், ஒரு காங் எம்பி என 11 பேர், கையூட்டு பெற்ற விவகாரம் ஸ்டார் டிவியில் ஒளிபரப்பாகி, நம் பிரதிநிதிகளின் கவுரவத்தை கப்பலேற்றியது. பாராளுமன்ற விசாரணைக்குழு போட்டு அவர்கள் செய்தது குற்றம் தான் என்று தீர்ப்புக்கூறப்பட்டது. அவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, நீங்கள் நாட்டுக்கு ஆற்றிய(!) சேவை போதுமடா சாமி நீங்கள் வீட்டுக்கு போய் வாருங்கள் என்று சொல்லபபட்டனர் அதாவது நீக்கப்பட்டனர்.
மூன்றாவது பதிவில் பாஜ, பகுஜன் சமாஜ் எம்பிக்கள் சிலர் போலிகடவு சீட்டு தயாரித்து வெளிநாட்டுக்கு ஆட்கள் கடத்திய விவகாரத்தில் போலீஸ் வழக்கு பதிவுக்கு உள்ளானார்கள். இதென்ன பிரமாதம். இதெல்லாம் அவர்களின் கூடுதல் தகுதியல்லவா?
லோக்சபா வரலாற்றின் உச்சகட்ட பதிவை நாட்டின் கடைகோடி பொதுஜனமும் பார்த்தது தொலைகாட்சி பெட்டி வழியே. மன்மோகன் சிங் அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்த போது பாஜ எம்பிக்கள் சிலர், அரசுக்கு ஆதரவாக ஓட்டுப்போட சொல்லி எங்களுக்கு பணம் தரப்பட்டது என்று பணக்கட்டுகளை காட்டி பரபரப்பை, சலசலப்பை ஏற்படுத்தினர். எப்படியோ 5 ஆண்டுகள் ஓடிவிட்டது.
இந்த தடம் பதிவுகளில் ஒரே ஒரு நல்ல பதிவு, மும்பை தாக்குதலின் போது கட்சிகளை மறந்து தீவிரவாதத்துக்கு எதிராக முழங்கிய எல்லா எம்.பிக்களுக்கு இதுதாண்டா எம்.பிக்கள் என்று பாராட்டலாம்.
எங்க கூட்டணிக்கு வாங்க தெலுங்கானா தருகிறோம் என்று சந்திரகேரராவை அழைத்துவந்து காங்கிரஸ் அல்வா கொடுத்ததால் வெகுண்டு எழுந்த அவர் கட்சி எம்பிக்கள் ராஜினாமா செய்தனர்.
ஆட்சி தலைவி அம்மணி சோனியாவும், உ.பி. தலைவி அம்மணி மாயாவும் மோதிக்கொண்டதில் மாயாவதி எம்.பிக்களும் ஆட்சிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றனர்.

நாட்டின் நிகழ்வுகளை விவாதிக்கிறேன் பேர் வழி என்று தீர்வை தீர்வை ஏற்படுத்தாமலேயே போன பிரச்னைகள்

நந்திகிராம் மோதல், சிங்கூர் டாடா சிறுகார் தொழிற்சாலை, கூர்காலாந்து தனிமாநிலம், தெலுங்கானா தனிமாநிலம், குஜ்ஜார் இட ஒதுக்கீடு, காஷ்மீர் அமர்நாத் நிலவிவகாரம் ஆகியவை அடுத்தடுத்த பிரச்னை கிளந்தெழும் வரை தொடர்ந்தன.

தமிழ்நாட்டோடு தொடர்புடைய இலங்கை தமிழர் பிரச்னை, பெரியாறு அணை பிரச்னைகளுக்கும் உருப்படியாக தமிழக எம்பிக்கள் குரல் கொடுக்கவில்லை.

14வது கூட்டத்தொடர் சில பட்டங்கள்

கைகொடுத்த நாயகன்: முலாயம்சிங்

அணுகுண்டு நாயகர்கள்: காம்ரேட்டுகள்



Monday, February 23, 2009

இசை சிகரம் ஏ.ஆர். ரகுமான்

திலீப் குமாராய் மாணவ பருவத்திலிருந்தே கீ போர்டு ஆர்ட்டிஸ்டாக இசையை கரம் பற்றி ராஜா என்ற கிராமத்து காட்டு பூ பள்ளியில் மகரந்த சேர்க்கையாய் இசை தேன் குடித்த இந்தியாவின் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமானுக்கு தேன் தமிழ் வலைப்பூ சார்பாக வாழ்த்துகள். சாதனைக்கு தலை வணங்குகிறோம்.

Sunday, February 22, 2009

முதல்வர் உண்ணாவிரதம்

சென்னை ஐகோர்ட் மோதல் முடிவுக்கு வர முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறியிருக்கிறார். இலங்கை தமிழர் பிரச்னை என்பது திசைமாறி காக்கி&கறுப்பு மோதலாகிவிட்டது வேதனையில் அப்பாவி தமிழனின் கேள்வி இதுதான்: இலங்கையில் போர்நிறுத்தம் கோரி முதல்வர் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்திருந்தால் இவ்வளவு பிரச்னை முற்றியிருக்குமா?

Thursday, February 19, 2009

முதல் வணக்கம்

தினமும் அல்லலுறும் தேவை தேடலில் கொஞ்சம் இளைப்பாற இந்த வலைப் பூவில் தடம் பதித்திருக்கிறேன். தினமும் கொஞ்சம் போல் எழுதுவேன் என்ற எதிர்பார்ப்புடன் முதல் வணக்கம்.




குப்பை

வீட்டில் சேரும் குப்பை
தெருக்கோடியில்
மனதில் சேரும் குப்பை
எண்ணற்றவையாய்
எண்ணத் தொட்டியில்
ஆழப்பதிகிறது
கோபமாய்
அழுகையாய்
ஆத்திரமாய்
சந்தோஷமாய்
வெளிப்படுதலில்
நாற்றமடிக்கிறது
குப்பை
நம் எல்லோருள்ளும்.