என்னுடைய முதல் புத்தகத்தை ஒரு விபத்து போல எழுத நேர்ந்தது. தினகரன் நாளிதழில் நிருபராக பணியாற்றிய போது தலைமை நிருபர் திருமாவேலன் அவர்கள் புத்தகங்கள் எழுதுவதற்கு தூண்டினார். தினகரன் பணியை விட்டு அவர் தொடங்கிய பதிப்பகத்துக்காக 2007-ம் ஆண்டு நோபல் இலக்கிய பரிசு பெற்ற டோரிஸ் லெஸ்சிங் என்ற பெண் எழுத்தாளரின் வாழ்க்கை வரலாற்றை எழுத த்தொடங்கினேன். ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தேன். நான் எழுதுவதற்கு மிகவும் தாமதப்படுத்திய நிலையில் புத்தகத்தை உடனே வெளியிடமுடியாமல் போனது. பின்னர், வேறு ஒரு நண்பர் உதவியுடன் சந்தியா பதிப்பகத்தில் என் முதல் புத்தகம் வெளியானது. புத்தகம் குறித்து தினமலர், தினமணி, தினகரன் ஆகிய இதழ்களில் வெளியான மதிப்புரைகளை இங்கு வெளியிட்டிருக்கிறேன்.
என்னுடைய இரண்டாவது புத்தகம் மணிவாசகர் பதிப்பகத்தின் மூலம் வெளியானது. உலகில் மாற்றங்களை ஏற்படுத்திய தலைவர்களின் உரைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்திருக்கிறேன். சாக்ரடீஸ் உரையை மொழி பெயர்ப்பதற்கு மட்டும் எனக்கு நீண்ட நாட்கள் பிடித்தது.