Saturday, October 12, 2013

என்னுடைய 2 புத்தகங்கள்

என்னுடைய முதல் புத்தகத்தை ஒரு விபத்து போல எழுத நேர்ந்தது. தினகரன் நாளிதழில் நிருபராக பணியாற்றிய போது தலைமை நிருபர் திருமாவேலன் அவர்கள் புத்தகங்கள் எழுதுவதற்கு தூண்டினார். தினகரன் பணியை விட்டு அவர் தொடங்கிய பதிப்பகத்துக்காக 2007-ம் ஆண்டு நோபல் இலக்கிய பரிசு பெற்ற டோரிஸ் லெஸ்சிங் என்ற பெண் எழுத்தாளரின் வாழ்க்கை வரலாற்றை எழுத த்தொடங்கினேன். ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தேன். நான் எழுதுவதற்கு மிகவும் தாமதப்படுத்திய நிலையில் புத்தகத்தை உடனே வெளியிடமுடியாமல் போனது. பின்னர், வேறு ஒரு நண்பர் உதவியுடன் சந்தியா பதிப்பகத்தில் என் முதல் புத்தகம் வெளியானது. புத்தகம் குறித்து தினமலர், தினமணி, தினகரன் ஆகிய இதழ்களில் வெளியான மதிப்புரைகளை இங்கு வெளியிட்டிருக்கிறேன்.


என்னுடைய இரண்டாவது புத்தகம் மணிவாசகர் பதிப்பகத்தின் மூலம் வெளியானது. உலகில் மாற்றங்களை ஏற்படுத்திய தலைவர்களின் உரைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்திருக்கிறேன். சாக்ரடீஸ் உரையை மொழி பெயர்ப்பதற்கு மட்டும் எனக்கு நீண்ட நாட்கள் பிடித்தது. 

Friday, April 26, 2013

ஏடிஎம், காவலாளிகள்....


நம்மிடம் பணம் சம்பாதிக்கும் திறன் இருக்கிறதோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் தெருவுக்கு, தெரு ஏடிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக சென்னையில் டாஸ்மாக் கடைகளுக்கு அருகே அதிக அளவு ஏடிஎம்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம்கள் அதிக அளவு டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலேயே இருக்கின்றன.

சம்பளம் வாங்கி குடித்து விட்டு வீட்டுக்குப்போ என்று அரசாங்கமே சொல்வது போல இருப்பதாக எனக்கு தோன்றியது. ஒரு வங்கியின் ஏடிஎம் ஒரே மாதிரி இருப்பதில்லை. உதாரணத்துக்கு சிட்டி யூனியன் வங்கியின் ஏடிஎம்மை எடுத்துக்கொண்டால் தியாகராயநகரில் ஒரு மாதிரி இருக்கிறது. அதற்கு பக்கத்தில் சைதாப்பேட்டை மார்க்கெட் பகுதியில் வேறு மாதிரி வடிவத்தில் இருக்கிறது. அட்டையை உள்ளே செலுத்தும் வழியில் இருந்து, பணம் எடுப்பதற்கான உத்தரவுகள் வரை அனைத்துமே ஒவ்வொரு ஏடிஎம்முக்கும் இன்னொரு ஏடிஎம்முக்கும் வித்தியாசமாக இருக்கிறது. ஒரு ஏடிஎம்மில் தொடுதிரையில் விருப்பத்தை தேர்வு செய்வது போல் இருக்கும். இன்னொன்றில், பட்டனை அழுத்த வேண்டியிருக்கும். இது போன்ற வித்தியாசங்கள் புதிய ஆட்களை, பெண்களை, முதியவர்களை குழப்புகின்றன. ஏன் ஒரே மாதிரி ஏடிஎம்களை வைக்க கூடாது? ஏடிஎம்-க்குள் செல்லும் போது முழுக்க, முழுக்க நாம் நிகழ்காலத்தில் இருக்க வேண்டியது அவசியம். ஏதாவது சிந்தித்துக்கொண்டே இருந்தோமானால், கார்டை தொலைத்து விடுவோம்.

நான் இப்படி கார்ப்பரேஷன் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது ஏதோ சிந்தனையில் திரும்ப கார்டை எடுக்க மறந்து விட்டேன். மீண்டும் ஒரு முறை பணம் எடுக்கும் தேவை எழுந்த போதுதான், கார்டை மிஷினிலேயே விட்டது ஞாபகம் வந்த்து. பின்னர் கடிதம் எழுதிக் கொடுத்து புதிய கார்டு வாங்க நேர்ந்த்து. பலருக்கு இது போல பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். சென்னை உட்பட பல ஊர்களில் அதிகமான ஏடிஎம்கள் இருப்பது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்குத்தான். ஆனால் பல இடங்களில் பழுதாகி இருப்பதும் அந்த ஏடிஎம்தான். சைதாப்பேட்டையில் ரெட்டிக்குப்பம் சாலையில் ரயில் நிலையத்துக்கு செல்லும் முன்பாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் மாத த்தில் 5 நாட்கள் இயங்கினால் அபூர்வம். எப்பொழுதுமே அவுட் ஆப் ஆர்டர் என்ற காவலாளியின் கைவண்ணத்தில் எழுதிய ஒரு அறிவிப்பு பலகை தொங்கிக் கொண்டிருக்கும்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் அவசரத்துக்கு 100 ரூபாய் எடுக்கவே முடியாது. சில நேரங்களில் 500 ரூபாய் நோட்டு கூட வராது. 1000 ரூபாய் மட்டுமே வரும். அது போல அவர்கள் போட்டு வைத்திருக்கின்றனர். இது ரிசர்வ் வங்கி விதிமுறைகளுக்கு முரணானதா? என்று தெரியவில்லை.

எச்.டி.எப்.சி., ஏடிஎம் அறைகளில் இரண்டு அல்லது மூன்று ஏடிஎம்கள் ஒரே இடத்தில் அமைத்திருக்கின்றனர். 100 ரூபாய் எடுத்தால் கூட புது தாள் ஆக வந்து விழும். ஆச்சர்யமாக இருக்கிறது. 15 வருடங்களுக்கு முன்பு 10 ரூபாய் தாளை புதுத்தாள் ஆக பார்த்தால் அதை பத்திரமாக வைக்க தோன்றும். இப்போது 100 ரூபாய் தாளை புதிதாக பார்த்தால் கூட அதை பத்திரமாக வைக்க தோனுவதில்லை. ஒரு வேளை தோன்றினாலும். செலவுக்கான முன்தேவைகள் கண்முன் வந்து நிற்கின்றன.

ஏடிஎம்-க்கு அறைகளை வாடகைக்கு விடுவதற்குத்தான் இப்போதெல்லாம் சென்னை வாடகை வீட்டுக்கார ர்கள் விருப்பப்படுகின்றனர். கீழ் தளத்தில் இருக்கும் வீடுகள் எல்லாம் ஏடிஎம்களாக முகம் மாறிப்போனது இப்படித்தான். வங்கி தரும் ஆயிரகணக்கான அட்வான்ஸ் தொகை. மாத வாடகை ஆகியவை எந்த வீட்டு உரிமையாளருக்குத்தான் கசக்கும்!

ஏடிஎம்-ஐ காவல் காக்கும் காவலாளிகளும் வித்தியாசமான நபர்களாக இருக்கின்றனர். சைதாப்பேட்டை ரெட்டி குப்பம் சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம்மை தூய்மையாக வைத்துக்கொள்வதில் அதன் காவலாளி மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். பெரும்பாலான நேரங்களில் இந்த ஏடிஎம் இயங்குவதில்லை என்று மேலே கூறியிருந்தேன். அப்படியிருக்கும் போதிலும் ஏடிஎம்மை தூய்மை படுத்துவதில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். மழை நேரங்களில் செருப்பை கழட்டி விட்டு செல்லும் படி கூறுவார். இப்படி சுத்தமான மனிதராக இருக்கிறாரே என்று ஆச்சர்யப்பட்டுப்போனேன்.

ஏடிஎம் காவலாளிகள் பெரும்பாலும் முதியவர்களாகத்தான் இருக்கிறார்கள். குறைந்த சம்பளத்தில் அவர்கள்தான் கிடைப்பார்கள் என்பதால் வங்கிகள் இது போன்று நியமித்திருக்கலாம் என்று தெரிகிறது.

வானகரத்தில் உள்ள தொலைகாட்சி ஊடகம் ஒன்றில் பணியாற்றியபோது வளசரவாக்கம் வழியாக செல்வது வழக்கம். அப்போது அங்கு உள்ள எச்டிஎப்சி ஏடிஎம்மில் பணம் எடுத்து விட்டு வரும்போது அங்கிருந்த காவலாளி பரிதாபமாக கையேந்தினார். அதர்ச்சியாக இருந்த்து. ஏடிஎம்ஐ காவல் காக்கும் ஒருவர் பணம் கேட்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அந்த ஒரு முறை மட்டும் இல்லை. இன்னொரு முறை அதே ஏடிஎம்-ல் பணம் எடுத்தபோதும் இதே போல பணம் கேட்டார். என்னிடம் மட்டும் இல்லை அங்கு வரும் எல்லோரிடமும் கேட்டார். சிலர் அவரை திட்டக்கூட செய்தனர்.

இதே போல நகரின் வேறு ஒரு இடத்திலும் இது போல ஒரு காவலாளி என்னிடம் பணம் கேட்டார். பெரும்பாலான ஏடிஎம்களில் காவலாளிகள் பணம் கேட்பதில்லை. பணம் எடுத்து விட்டு வெளியே வரும் போது எந்தவித பாவனையும் காட்டாமல்தான் காவலாளிகள் இருக்கின்றனர். சிலர் கதவை திறப்பதற்கு உதவுகின்றனர். கார்டை செலுத்தி கதவை திறப்பது எப்படி என்று சொல்லிக்கொடுக்கின்றனர்.

ஏடிஎம் காவலாளிகளிடம் எப்போதுமே நான் பேசியதில்லை. தற்போது நான் குடியிருக்கும் வீட்டுக்கு அருகிலேயே ஒரு ஏடிஎம் இருக்கிறது. அவ்வப்போது அதில்தான் பணம் எடுக்கிறேன். அந்த ஏடிஎம் காவலாளியுடன் பேசிக்கொண்டிருப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது.

ஏடிஎம் மிஷினுக்கு பணம் எடுக்க வருபவர்கள் எண்ணிக்கை 15-ம் தேதி வரை தான் அதிகம் இருக்கும் என்றார். சம்பளம் காலியாகி விடுவதால் அதன்பின்னர் பெரும்பாலானோர் வருவதில்லை என்றார்.

அந்த ஏடிஎம் காவலாளி தம்மை பற்றி நிறைய தகவல்களை என்னிடம்பகிர்ந்து கொண்டார். திருச்செந்தூரை சேர்ந்த அவர், ஒரு நாள் பள்ளி இறுதி தேர்வு விடுமுறைக்காக சென்னைக்கு அண்ணன் வீட்டு வந்தாராம். அண்ணன் பிரசாத் ஸ்டுடியோவில் வேலைபார்த்து வந்தார். அவர் தமது தம்பியையும் அங்கேயே வேலைக்கு சேர்த்து விட்டாராம். டைப்பிஸ்ட் ஆக வேலைக்கு சேர்ந்தவர், கதைகளை டைப் செய்வது, ஷூட்டிங் செட்யூலை டைப் செய்வது, ஸ்டுடியோவில் எத்தனை தளங்கள் இருக்கின்றனவோ, அந்த ந்த தளங்களில் தினந்தோறும் நடைபெறும் ஷூட்டிங் விவரங்களை டைப் செய்து அதனை ஆவணமாக்குவது போன்ற பணிகளை செய்து வந்திருக்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இணைந்து நடித்த திரைப்படங்கள் ஷீட்டிங்களை நேரில் பார்த்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

பின்னர் சொந்த தொழில் செய்து விட்டு, பிரச்னைகள் ஏற்பட்டு, இப்போது ஏடிஎம் காவலாளியாக இருக்கிறார். ஏடிஎம்-க்கு வெளியே நாற்காலியை போட்டு அமர்ந்தால் தேவையின்றி எழுந்திருக்க மாட்டார். பெரும்பாலான நேரங்களில் நாளிதழ் படித்துக்கொண்டே இருப்பார்.

இப்போதெல்லாம் ஏடிஎம் இயந்திரங்களை உடைக்க முயற்சி என்று பரவலாக செய்திகள் வருகின்றன. கோடிக்கணக்கான ரூபாய்களை புழங்கும் ஏடிஎம்-க்கு திடகாத்திரமான ஏடிஎம் காவலாளிகளை நியமிக்க வேண்டும்என்று காவலாளிகள் சங்கத்தினரும் கூறி வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் வங்கி நிறுவனங்கள் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. வங்கிகள் இப்போது வாராக்கடன் சதவீதம் என்று கணக்கு எழுதி விடுகின்றனர். அதைப்பற்றி கவலைப்படவில்லை. இதனால்தான் கடன் வாங்கிய பல அரசியல்வாதிகள் தப்பித்து வருகின்றனர். அதைப்போல ஏடிஎம் கொள்ளைகளும் சகஜமான ஒன்று என்றும், கொள்ளைகள் நடந்தால் நடக்கட்டும் என்று வங்கிகள் நினைத்து விட்டன போல்தான் தெரிகிறது. வாரா கடன் போல, ஏடிஎம் கொள்ளை கணக்கு என்று எழுதுவார்கள் போல் தெரிகிறது.

Saturday, April 13, 2013

ஏ.டி.எம். கார்டு, இயந்திரம், காவலாளி....


பல தலைமுறைகள் அறிந்திராத, தற்போதைய தலைமுறைக்கு மட்டுமே அறிமுகமான ஒன்று ஏடிஎம். என் தந்தை திண்டுக்கல் நகரில் வேளாண்விளை பொருட்களை விற்கும் கமிஷன் மண்டி வைத்திருந்தார். தினமும் ஆயிரகணக்கான ரூபாய் பணத்தை புழங்குவார். வங்கியில் நடப்பு கணக்கு வைத்திருந்தார். ஏடிஎம் வசதி இருந்தும் கூட அதற்கான ஏடிஎம் கார்டை அவர் பெற்றுக்கொண்டதில்லை, உபயோகித்ததும் இல்லை. ஒருவேளை இப்போது உயிருடன் இருந்திருந்தால் உபயோகித்திருப்பாரா? என தெரியவில்லை. என் அம்மாவும் இதுவரை ஏடிஎம் கார்டை உபயோகித்த தில்லை. என் சகோதரன் அல்லது நான் அவருடைய பணத்தேவைகளை பூர்த்தி செய்து விடுவதால் அதற்கான அவசியம் இல்லை எனலாம்.

ஏடிஎம் உள்ளே கூட சென்று பார்த்ததாக எனக்கு தெரியவில்லை. அதற்கான ஆசை இருக்கிறதா என்றும் தெரியவில்லை. இந்த கட்டுரை எழுதும் தருணத்தில் என் அம்மாவிடம் கேட்டுப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

அதே நேரத்தில் என் குழந்தைகள் ஏடிஎம்-மின் குளிர் அறைக்குள் செல்வதற்கு மிகவும் பிரியப்படுகிறார்கள். நான் முதன் முதலில் ஏடிஎம் என்ற புழக்கத்தை தெரிந்து கொண்டது ஒரு நண்பர் மூலம்தான்.

1998-2000-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் என்று நினைக்கிறேன். சென்னையில் சில பத்திரிகைகளுக்கு பகுதிநேரமாக எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது ஆறாம் திணை இணையதளத்தில் பணியாற்றிய நண்பர் சுந்தரமூர்த்தி. அவருக்கு அப்போது வங்கியில்தான் சம்பளம் கிரடிட் ஆகும். அவரிடம் ஒரு முறை பணம் கேட்டேன். ஏடிஎம்-க்கு அழைத்து சென்று எடுத்துக்கொடுத்தார்.

அதன் பிறகு நான் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வெளிவந்த தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழில் பணியாற்றியபோது முதல் சில ஆண்டுகளில் ஒரு கவரில் வைத்து பணமாக சம்பளம் கொடுத்தனர். 2002-ம் ஆண்டு வாக்கில்தான வங்கி கணக்கில் சம்பளம் கிரடிட் ஆயிற்று. எச்டிஎப்சி வங்கியில் இருந்து பளபளக்கும் அட்டை ஒன்றை கொடுத்தனர். ஆரம்பத்தில் அது டெபிட் கார்டா அல்லது கிரெடிட் கார்டா என்ற குழப்பம் எனக்கும் என் நண்பர்களுக்கும் இருந்தது. நமது கணக்கில் பணம் இருந்தால்தான் டெபிட் கார்டை உபயோகிக்க முடியும் என்பதும், கிரெடிட் கார்டு என்பது வங்கி அளித்த வரம்புக்குள் கடனாக அதனை உபயோகித்து திருப்பி செலுத்த வேண்டும் என்பதும் ஒரு சில மாதங்கள் கழித்துத்தான புரிந்தது. ஆரம்பத்தில் இருந்தே 100 ரூபாய்க்கு குறைந்து ஏடிஎம் அட்டை மூலம் எடுக்க முடியாது என்பது விதியாக இருந்து வருகிறது. ஆரம்ப கால கட்டத்தில் இந்த விதிமுறை அதர்ச்சியாக இருந்தது. நூறு ரூபாய்க்கு கீழே குறைந்து விட்டால் அந்த பணத்தை எடுக்க முடியாமல், மாதக்கடைசியில் தவிப்பது இன்றும் சில நேரங்களில் எரிச்சலாக இருக்கிறது.

தமிழன் எக்ஸ்பிரசில் இருந்து மாறி தினகரன் நாளிதழில் சேர்ந்த போது, வங்கி அதிகாரிகள் அலுவலகத்துக்கே வந்து கணக்கு படிவத்தில் கையெழுத்து வாங்கி போனார்கள். முதலில் சிட்டி யூனியன் வங்கியில் கணக்கு தொடங்கினர். மாத்த்தின் முதல்வராத்தில் சம்பளம் போட்டு விட்டார்களா என்பதை அறிய ஏடிஎம் கார்டை திரும்ப, திரும்ப போட்டு பார்ப்பது இயல்பான ஒன்றாகிப் போனது. ஒரு சில மாதங்களிலேயே என்ன ஆனதோ தெரியவில்லை, தினகரன் நிர்வாகத்தின் வங்கி கணக்கு கார்ப்பரேஷன் வங்கிக்கு மாற்றப்பட்டது. உடனே அனைவரும் கார்ப்பரேஷன் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டோம். அங்கு புதிதாக ஏடிஎம் கார்டு கொடுத்தார்கள். ஒரே நேரத்தில் இரண்டு ஏடிஎம் கார்டுகளை பையில் வைத்து சுற்றிக்கொண்டிருந்தேன். வங்கி கணக்கில் ஒன்றும் இல்லை. ஆனால் ஏடிஎம் கார்டு மட்டும் இரண்டு இருந்தது. சிட்டி யூனியன் வங்கி ஏடிஎம் கார்டு வைத்திருக்கும்போது ஒரு முறை பெட்ரோல் பங்கில், அந்த வங்கியின் ஏடிஎம் கார்டை உபயோகித்து பெட்ரோல் போட்டேன். டெபிட் கார்டு என்ற போதிலும் கணக்கில் இருந்த பணத்தை விட அதிகமாக டெபிட் ஆகிவிட்டது. பின்னர் வங்கியில் இருந்து என்னை அழைத்து தவறுதலாக உங்களுக்கு கூடுதலாக பணம் வந்து விட்டது. அதை திரும்பி செலுத்துங்கள் என்றனர்.

இப்படியாக ஏடிஎம்-க்கும், எனக்குமான உறவு தொடர்ந்து கொண்டிருந்தது. எழும்பூர் தினமலர் நாளிதழில் உதவி ஆசிரியராக பணியாற்றியபோது, மீண்டும் பழைய முறையில் கவரில் சம்பளம் கொடுத்தனர்.

எனினும் பகுதிநேரமாக மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளை செய்து கொண்டிருந்த போது, அதற்காக சிலர் வங்கி கணக்கில் பணத்தை செலுத்திவிடுவார்கள். அதனை எடுப்பதற்கு எனக்கு சிட்டியூனியன் வங்கி கார்டு உபயோகமாக இருந்தது. இடையில் ஒன்றை சொல்லியாக வேண்டும்.

வங்கி கடனுக்காக இடையில் அலைந்து கொண்டிருந்தேன். ஆந்திரா வங்கியில் கணக்கு ஆரம்பித்தால் வங்கி கடன் பெற்று விடலாம் என்று ஒரு நண்பர் தகவல் சொன்னார். அதை நம்பி ராயப்பேட்டையில் உள்ள ஆந்திரா வங்கியில் கணக்கு தொடங்கினேன். அதில் கொஞ்சகாலம் பணத்தை போட்டு எடுத்து வந்தேன். அந்த ஏடிஎம் கார்டையும் வாங்கி பயன்படுத்தினேன். ஒரே நேரத்தில் 3 ஏடிஎம் கார்டை வைத்துக்கொண்டு திரிந்தேன்.

ஆந்திரா வங்கியில் ஏடிஎம் கார்டில் பணம் எடுப்பது பிரச்னைக்கு உரிய ஒன்று. நான் கணக்கு வைத்திருந்த நாட்களில் சென்னையில் அந்த வங்கியின் ஏடிஎம் படுத்தி எடுத்து விடும். பெரும்பாலும் பழுதில் இருக்கும்.

தினமலரில் இருந்து சன் குழுமத்தில் சன்நியூஸ் தொலைகாட்சியில் உதவி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன்.

இன்னும் ஒரு வங்கி கணக்கா என்று அயர்ச்சி ஏற்பட்டது. நல்ல வேளையாக அவர்கள் ஏற்கனவே என்ன வங்கி கணக்கு இருக்கிறது என்று கேட்டனர். சிட்டி யூனியன் வங்கி கணக்கு இருக்கிறது என்றேன. சரி அந்த எண்ணை மட்டும் கொடுத்து விடுங்கள் என்றேன். நல்ல வேளையாக அந்த வங்கி கணக்கை செயலில் வைத்திருந்ததால் அந்த எண்ணை கொடுத்து விட்டேன்.

அடிக்கடி பணம் எடுத்து கார்டு தேய்ந்து விட்டது. எனவே சிட்டி யூனியன் வங்கியில் இருந்து புதிய கார்டு ஒன்றை வாங்கினேன்.

இந்த தருணத்தில் வீட்டு கடன் ஒன்று வாங்க முயற்சித்து, பாரத ஸ்டேட் வங்கியில் முயற்சித்த போது, அங்கே வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றனர். பின்னர் அங்கிருந்து ஒரு புதிய ஏடிஎம் கார்டு கிடைத்தது. வீட்டு கடன் கிடைக்கவில்லை என்பது வேறுவிஷயம்.

என் மனைவிக்கு என இந்தியன் வங்கியில் ஒரு கணக்கு தொடங்கினோம். அங்கு அவருக்கு ஒரு ஏடிஎம் கார்டு கொடுத்தார்கள். அதனை நெடுநாளாக உபயோகிக்க வில்லை என்பதால் மீண்டும் புதுப்பிக்க கூறினர். ஆனால் இன்னும் அதனை புதுப்பிக்க முடியாமல் இருக்கிறது.

சன்குழுமத்தில்  என்னோடு ஒரு நண்பர் பணியாற்றினார். அவருடைய ஏடிஎம் கார்டு அவரிடம் இருப்பதில்லை. அவரின் மகனிடம்தான் இருக்குமாம். அவரே சொன்ன தகவல் இது. சம்பளம் போட்டதும் அதில் இருந்து பணத்தை எடுத்து அவர் மனைவியிடம் அவர் மகன்தான் கொடுப்பானாம். கார்டை எப்போதுமே இவர் கையில் வைத்ததில்லை என்றார்.

கணவர் சம்பாதிக்கும் பணம் சரியாக வீடு வந்து சேரவேண்டும் என்ற மனைவியின் அக்கறையாக இதனை கருதினேன்.

பெரும்பாலானோர் அலுவலகத்தில் வாங்கும் சம்பளம் பற்றியோ, எப்போது வரும் என்பது பற்றியோ கூறுவதில்லை. அதன் பலனாக இது போன்ற நிலைவந்திருக்கலாம் என்று கருதுகிறேன்.

ஏடிஎம் முறை வழக்கத்தில் வந்ததில் இருந்து இன்னொரு முறை வழக்கொழிந்து போய்விட்டது என்றே கருதுகிறேன்.

சம்பளம் வாங்கும் நபர்கள் பலர் ஏடிஎம் கார்டு புழக்கத்துக்கு வருவதற்கு முன்பு சம்பள கவரை சுவாமி படத்தின் முன்பு வைத்து வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர். திருமணம் ஆகிவிட்டால் மனைவியிடம் கொடுத்து அதனை சுவாமி படத்தின் முன்பு வைக்க சொல்வதும், இல்லை எனில் அம்மாவிடம் கொடுத்து வைக்கச் சொல்வதும் நடைமுறையாக இருந்திருக்கிறது. இப்போது யாரும் ஏடிஎம் கார்டை அவ்வாறு வைப்பதில்லை. நிறைய பேருக்கு சம்பளம் பற்றி பொய் சொல்வதற்கும் இது வசதியாகி விட்டது என்றே கூறலாம்.

ஏடிஎம் இயந்திரம், காவலாளி பற்றி அடுத்த பதிவுகளில் சொல்கிறேன்.....

Thursday, April 4, 2013

மலர்ச்சி எங்கே?

அதிகாலை எழுவது எனக்கு பிடித்தமான ஒன்று. ஆனால் அலுவலகத்தில் இரவுப் பணி போன்ற காரணங்களால் கடந்த 8 வருடங்களாகவே அதிகாலை எழும் பழக்கம் என்னிடம் இருந்து விட்டுப் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சிறுவயதில் அதிகாலையில் எழுந்து அப்பா உடன் ஆற்றில் குளித்த புத்துணர்ச்சி எந்த ஒரு சூழலிலும் இனி வரப்போவதில்லை.


தாய்மாமா வீட்டில் கொஞ்ச காலம் வளர்ந்த போது, அவருக்கு உதவியாக அதிகாலையில் பேப்பர் போடச் சென்ற அனுபவமும் அலாதியானது.

பேப்பர் போடப்போகும்போது பல் துலக்காமல் மார்கழி பனியில் பெருமாள் கோவிலில் பொங்கல் வாங்கி சாப்பிட்ட அனுபவங்கள் ரசனையானவை.

பொங்கல், தீபாவளி பண்டிகைக்கு அதிகாலையில் எழுந்து குளிப்பது. வெளியூர்களுக்கு செல்லும் போது அதிகாலையில் எழுந்து பேருந்தில் தூங்கிக்கொண்டே செல்வது என்பதும் சிறுவயது அனுபவங்களில் ஒன்றாக இருந்திருக்கிறது.

சென்னை நகர வாழ்க்கையாகிப் போனபிறகு இரவு தூங்குவதற்கே பின்னிரவாகி விடுகிறது. அப்புறம் எங்கே அதிகாலையை ரசிப்பது என்று தெரியவில்லை.

ஒரு நாள் நானும் என் மனைவியும் அதிகாலை கடற்கரைக்கு சென்றோம். சூரியன் உதிக்கும் அந்த காலைப்பொழுதை மிகவும் ரசித்தோம்.

கடற்கரை ஓரமாய் இருக்கும் ஒரு தொலைகாட்சியின் செய்திப்பிரிவில் பணியாற்றிய போது காலை ஷிப்ட்டில் வானுயர்ந்த கட்டிடத்தின் கண்ணாடி ஜன்னல் வழியே உதிக்கும் கதிரவனை பார்ப்பது அப்படி ஒரு ஆனந்தமாய் இருக்கும்.

அதிகாலை வேளையில் கடற்கரை நோக்கி செல்லும் ஏதாவது ஒரு சாலையில் நடந்து சென்றால் மெல்ல, மெல்ல சூரியன் எட்டிப்பார்க்கும் காட்சி அற்புதமானதாக இருக்கும்.

அதிகாலை வேளையில் சகமனிதர்களை பார்ப்பதும் அலாதியான அனுபவமாக எனக்கு இருக்கிறது. அதிகாலை வேளையில் எழுந்து இருசக்கர வாகனத்தில் செல்லுகையில் இரண்டு அல்லது மூன்று பயணிகளுடன் கூட்டமில்லாமல் நம்மை கடந்து போகும் மாநகரப் பேருந்துகள், வெளியூர் பயணிகளை சுமந்து செல்லும் ஆட்டோக்கள், அசோக்நகரில் நடைபயிற்சிக்காக விதவிதமான ஷூக்களில் விரையும் கால்கள் எல்லாமே உற்றுநோக்கலில் ஒருவகையான ரசனை.

அதிகாலை புத்துணர்ச்சியை அனுபவிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் என்னைப்போன்ற அனுபவங்களை பெற்றிருக்க கூடும். அலுவலகத்தில் அதிகாலையில் சிலரது முகத்தை காணும் போது ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று கேட்கத் தோன்றும்.

பெரும்பாலானோர் அதிகாலை வேளையில் கூட முகம் மலராமல் இறுக்கமாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

முடிந்து போன நாளின் தாக்கத்தின் விளைவாக, அதன் தொடர்ச்சியாக காலையிலும் அதே போல இருக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. இன்று ஒருவரை பார்த்தேன். அவரது சம்பளமோ அதிகம், எனினும் அவரது களையிழந்த முகம் எனக்கு கவலையை ஏற்படுத்தியது. அவருக்கு என்ன கவலை இருக்க முடியும், அழுது வடிந்த முகம், சட்டையில் ஏதோ கறை என அழுது வடிந்து கொண்டிருந்தார்.

மலர்ச்சியான முகத்தை காண்பது இப்போதெல்லாம் அரிதாகிவிட்டது.

பிரச்னைகளில் சிக்கி தவிக்கும் மனிதர்களில் இறுக்கத்தைத்தான் பார்க்க முடிகிறது. அதிகாலையில் மலரும் பூவைப் போல மலர்ந்த முகங்களை பார்ப்பது அரிதாகி வருகிறது.

குழந்தைகளிடம் இருக்கும் மலர்ச்சி கூட சில நேரங்களில் இல்லாமல் போய்விடுகிறது. அதிகாலையில் அவர்களை எழுப்பி, வியபார கல்வி ஆகிவிட்ட சூழலில் அவர்களை பள்ளி எனும் கொட்டடிக்குள் அடைக்க அனுப்பி வைக்கிறோம். மலர்ச்சி எங்கே போனது என்று தெரியவில்லை. எங்கேயாவது மலர்ச்சி இருந்தால் சொல்லுங்கள்....

Sunday, January 8, 2012

எப்பொழுதெல்லாம் கோபம் வரும்?

ரெளத்திரம் பழகு என்று பாரதியார் சொன்னது அநியாயத்தை கண்டு பொங்கி எழுவதற்குத்தான். ஆனால் இன்றைக்கு தெருவில் இறங்கி நடந்தால் பொய்மையும், அநியாயமும்தான் நம்மை சுற்றி நடக்கிறது. பாரதியார் சொன்னது போல ரெளத்திரம் பழகினால் ரத்த அழுத்தம் அதிகமாகி மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும்.
வழக்கமாக பலர் கூறுவது போல கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று இங்கு நான் கூறப்போவதில்லை. எப்பொழுதெல்லாம் கோபம் வரும் என்பதை என்னுடைய அனுபவத்தில் நான் அறிந்ததை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். இது அறிவுரை ஏதும் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
1. பிறரிடம் ஏதாவது எதிர்பார்க்கும் போது, அதை அவர்கள் செய்யாதபோது...
2. ஒரு சிக்கலை தீர்க்க ஆழமாக யோசித்துக் கொண்டிருக்கும்போது யாராவது இடையூறு செய்யும் போது...
3. தகுதிக்கு மீறி, அளவுக்கு மீறி ஆசைப்பட்டு விட்டு, அது நிறைவேறாதபோது...
4. சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் பிறர் தொந்தரவு செய்யும்போது...
5. மாத இறுதியில் பணப்பற்றாக்குறையின் போது...
6. தகுதி இல்லாதவர்கள் உயர் அதிகாரிக்கு காக்காய் பிடித்து முன்னேறும் போது....
7. பிறர் நம்மை ஏமாற்றும் போது...
8. சரியான நேரத்துக்கு பேருந்து கிடைக்காத போது...
9. எதற்கெடுத்தாலும் விதியை சுட்டிக்காட்டுவது...
10. நேரத்துக்கு தகுந்தவாறு மாறும் மனிதர்களை பார்க்கும்போது....
எனக்கு தெரிந்த என்னை கோப ப் படுத்தும் பத்து விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளேன். பலருக்கு இதுதவிர வேறு ஏதாவது அனுபவங்கள் இருக்கலாம். சரி கோபத்தை தெரிந்து கொண்டாயிற்று.. அது வராமல் தடுப்பது எப்படி என்று அடுத்த கேள்வி எழலாம். ஆனால் கோபம் எப்படி வருகிறது ஏன் வருகிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்து விட்டாலே நீங்கள் அதில் இருந்து விடுபட விரும்புகிறீர்கள் என்று அர்த்தம் எனவே. அது பற்றி சொல்லி கூடுதலாக போரடிக்க விரும்பவில்லை. நாளை அல்லது நேரம் கிடைக்கும் போது இன்னொரு விஷயம் பற்றி சொல்கிறேன்.

Saturday, December 31, 2011

உதவி செய்யும் பழக்கத்தை வளர்த்தெடுப்பது எப்படி?

உதவி செய்வது என்றால் பண உதவி என்பது மட்டும் அர்த்தம் அல்ல. வங்கி அல்லது தபால் அலுவலகத்துக்கு சென்றால் நான் உங்களுக்கு உதவலாமா? என்று அழகாக எழுதப்பட்ட ஒரு பெயர் பலகை மட்டும் வைக்கப்பட்டிருக்கும். அந்த பெயர் பலகைக்கு அருகில் யாருமே இருக்கமாட்டார்கள்.
இன்றைய காலத்தில் உதவி என்ற வார்த்தையும் இப்படித்தான் அனாதையாக யாரும் கேட்பாரற்று கிடக்கிறது. அதே நேரத்தில் சத்தம் இல்லாமல் சிலர் உதவிகளை செய்து வருகின்றனர் என்பதும் நிதர்சனமான உண்மை.

உதவி என்றால் பண உதவி மட்டும்தானா? இல்லை. பணம் மட்டும் பரிமாறிக்கொள்வது அதனைத் திருப்பி கொடுப்பது உதவி அல்ல.

எந்தெந்த வகைகளில் உதவலாம்?

1. நீங்கள் பள்ளியில் அல்லது கல்லூரியில் படிக்கும் மாணவராக இருக்கும் பட்சத்தில் ஆசிரியர் நடத்தும் பாடம் உங்களுக்கு புரியும்படி இருக்கும். அதே நேரம் உங்களின் சக நண்பருக்கு அந்த பாடம் புரியாமல் இருக்கலாம். அதை உங்கள் சக நண்பருக்கு புரியும்படி சொல்லி கொடுத்து உதவலாம். எப்படி பாடத்தை புரிந்து படிக்க வேண்டும் என்று கூறலாம்.

2. கல்லூரி முடிந்து வேலை தேடும் இளைஞராக இருந்தால் வேலை வாய்ப்பு தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம். ஒரு இடத்துக்கு நேர்முகதேர்வுக்கு செல்லும் போது உங்களிடம் அந்த நிறுவனம் எதிர்பார்க்கும் தகுதி இல்லாவிட்டால் உங்கள் நண்பருக்கு அந்த தகவலை சொல்லலாம். இப்போது சில பெரிய நிறுவனங்கள் மொத்தமாக ஆட்களை தேர்வு செய்கின்றன. அப்போது நீங்கள் அங்கு பெரிய பொறுப்பு வகிக்க நேரிடும் போது உங்களின் சரியான தகுதியான நண்பர்களுக்கு உதவுங்கள்.

3. உங்கள் பக்கத்துவீட்டுக்கார ர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால், அவர் ஊருக்கு புதிதாக இருந்தால் மருத்துவமனை எங்கிருக்கிறது. குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவமனை எது என்று தகவல் கொடுக்கலாம். ஆரோக்கியமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உதாரணமாக தண்ணீரை சுட வைத்து குடியுங்கள் என்பது போல சுருக்கமாக கூறலாம். வந்துட்டான்யா அறுவை பார்ட்டி என்பது போல இருக்கக் கூடாது.

4. சிலருக்கு ரேஷன் கார்டு எங்கு வாங்குவது? மொபைல் போனில் குறுந்தகவல் எப்படி அனுப்புவது என்ற விஷயங்கள் கூட தெரியாமல் இருக்கும். அத்தகையவர்களுக்கு அவர்களே அதனை செய்து கொள்வதற்கு உதவ வேண்டும். எப்படி குறுந்தகவல் டைப் செய்வது என்பது போன்ற வழிமுறைகளை சொல்லிக்கொடுக்கலாம்.

5. ஒருவர் உங்களிடம் முன்பின் அறியாதவர் யாரும் பண உதவி கேட்கமாட்டார்கள். உறவினர்கள் அல்லது நண்பர்கள் மட்டுமே பண உதவி கேட்பார்கள். அத்தகையவர்களுக்கு, உங்களிடம் இருக்கும் பட்சத்தில் கொடுத்து உதவுங்கள். கொடுக்க கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்லாமல் தவிக்க விட வேண்டாம். இல்லை என்பதை புரியும்படி சொல்லுங்கள்.

6. மாதம் தோறும் சம்பளம் வாங்கிய உடன் குறைந்த து 4 ஏழை எளியர்வர்களுக்காவது உணவு பொட்டலங்கள் வாங்கிக் கொடுங்கள். பிறந்த நாளின் போதும் இதே போல செய்யலாம். தாய், தந்தையின் நினைவு நாளில் இது போல செய்வது சிறந்த தாகக் கருதப்படுகிறது. குறிப்பாக இந்த உதவியை செய்யும் போது உங்கள் மனம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. இந்த உதவியை ஒரு முறை செய்து பாருங்கள். உங்களுக்கு அன்றைக்கு நன்றாக பசி எடுக்கும்.இது என் அனுபவத்தில் உணர்ந்த ஒன்று.

7. உதவி செய்வதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது. உதவி செய்தோம் என்று அடிக்கடி சொல்லிக்காட்டக்கூடாது. பதில் உதவியை எதிர்பார்க்க க் கூடாது. எதிர்பார்ப்புடன் கூடிய உதவியானது அதை செய்பவருக்கும், ஏற்பவருக்கும் என இருதரப்புக்குமே கஷ்டத்தையே கொடுக்கும்.

நாளை இன்னொரு விஷயம் குறித்து சொல்கிறேன்.

Friday, December 30, 2011

பாசிடிவ் ஆக இருப்பது எப்படி?


தமிழ் சினிமா வரலாற்றை எடுத்துக் கொண்டால் எம்.ஜி.ஆருக்கு எவ்வளவு வரவேற்பு இருந்ததோ அதைப்போல வில்லன் நம்பியாருக்கும் வரவேற்பு இருந்தது. சத்யராஜ் கதாநாயகனாக வரவேற்பு பெற்றதை விட வில்லனாக இருந்த போது அவருக்கு கிடைத்த வரவேற்பு அளவு கடந்த தாகும்.
எதற்கு இந்த உதாரணம்? நமது வாழ்க்கையில் எப்போதுமே சாதகமான, நல்ல எண்ணங்களுக்கு இடம் கொடுக்கிறோமோ இல்லையோ, பாதகமான , கெடுதலான, நேர்மறையான எண்ணங்களுக்குத்தான் நம் மனதில் இடம் கொடுத்து வருகிறோம். நல்லது மனதில் பதிவதை விட கெடுதல் மனதுக்குள் எளிதாக பதிந்துவிடுகிறது என்பதும் உண்மையே. என்னேரமும் கெட்டதையே நினைத்து கொண்டிருக்கவும் சிலர் பழகி விடுகின்றனர். உலகமே கெட்டதாகி வரும்போது நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதும் பலரின் தத்துவக் கருத்தாக உள்ளது.
உண்மையில் நல்ல எண்ணங்களுடன் பாசிட்டிவ் ஆக இருக்கவே முடியாதா?
நிச்சயம் முடியும்? எதையும் சாதகமாக பார்க்க தொடங்கிவிட்டால் எதிர்மறையான எண்ணங்களை நாளடைவில் மனதில் இருந்து நீக்கிவிடலாம்.
சாதகமான எண்ணங்களை நோக்கி மனதை திருப்புவது எப்படி?

1. முடியாது என்று சொல்வதை நிறுத்துங்கள்
2. எந்த செயலுக்கும் முடிவான ஒன்று என்பது இல்லை.
3. யாரையும் வெறுக்காதீர்கள், அவமதிக்காதீர்கள்
4. எதையும் வெளிப்படையாக பேசுங்கள்
5. உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாதீர்கள்
6. உங்கள் மதம் போதிக்கும் தத்துவங்களை மனதில் அடிக்கடி சொல்லுங்கள்
7. உங்களுக்கு பிடித்தமான கடவுளை பிரார்த்தியுங்கள்
8. நெகட்டிவ் ஆன எண்ணங்களை ஏற்படுத்துபவர்களை தவிருங்கள்
9. நெகட்டிவ் எண்ணங்களை அதிகரிக்கும் திரைப்படங்களை பார்க்காதீர்கள்
10. அப்துல் கலாம், விவேகானந்தர் போன்றோர் எழுதிய புத்தகங்களை படியுங்கள்.

இதனை தவறாமல் கடைபிடித்தால் உங்கள் மனது கொஞ்சம், கொஞ்சமாக சாதகமான எண்ணங்களை நோக்கி திரும்பும். பாசிட்டிவ் ஆக இருந்தால் படபடப்பு ஏற்படாது. கோபம் வராது. மனது எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும்.முயற்சித்துப் பாருங்கள்.

Thursday, December 29, 2011

நிகழ்காலத்தில் இருப்பதால் என்ன நன்மை?

கற்பனையில் உழன்று கொண்டிருக்கமால் நிகழ்காலத்தில் இருக்க பழகிக் கொண்டால், அதைவிட வரம் என்பது வேறு இல்லை. அதனால் கிடைக்கும் நன்மைகள்;

1. அடுத்தவர்கள் பேசும்போது என்ன சொன்னீங்க என்று கேட்க தேவையில்லை
2. நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியும்.
3. இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்துக்களை தவிர்க்க முடியும்
4. மாணவர்களாக இருந்தால் ஆசிரியரின் பாடங்கள் புரியும்
5. வேலை செய்பவர்களாக இருந்தால் அலுவலகத்தில் கவனமாக செயல்பட முடியும்.
6. தொழிலில் புதிய யுத்திகளை செயல்படுத்த முடியும்.
7. பேசுவதில் தெளிவு ஏற்படும்(கற்பனையில் இருந்தால் வார்த்தைகள் தடுமாறும் )
8. முக்கியமாக எவ்வளவு நேரத்தை நாம் வீணாக்குகிறோம் என்பது புரியும்
9. அனாவசிய குழப்பங்கள் தீரும்
10. சாதிப்பதில் கவனம் ஏற்படும்

Tuesday, December 27, 2011

நிகழ்காலத்தில் இருப்போம்


கடந்த காலம், எதிர்காலத்தை பற்றி ஏன் நினைக்க வேண்டும்?

மனிதர்களின் இயல்பானது கடந்த காலத்தை நினைத்து துன்ப ப்படுவது அல்லது எதிர்காலத்தை எண்ணி கவலைப்படுவது. கடந்தகாலம், எதிர்காலம் இரண்டையும் நினைத்துக்கொண்டே உழன்று கொண்டே இருப்பதுதான்.நாள் ஒன்றுக்கு 24 மணிநேரம் உள்ளது. தூங்குவதற்கு 8 மணி நேரம் செலவிடுவது போல 16 மணி நேரத்துக்கும் மேலாக நாம் கடந்த காலத்தை பற்றியும், எதிர்காலத்தை பற்றியும் நினைத்துக்கொண்டே இருந்தால். நிகழ்காலத்தை பற்றி நாம் நினைக்கிறோமா என்ற கேள்வி எழுகிறதல்லவா?
இதனால் நேரம் விரையம் ஆகியது என்பது புரிகிறதல்லவா?

கடந்த காலத்தை பற்றி நினைப்பதால் எழும் விளைவுகள்
1. மனசோர்வு
2. மனதில், மூளையில் ஏற்படும் வேண்டாத பதிவுகள்
3. செயலில் வேகமின்மை.
4. முடிவு எடுக்க முடியாமல் திணறுதல்
5. அல்சர் போன்ற வியாதிகள்
6. மனபீதி, குழப்பம் உள்ளிட்டவை

எதிர்காலத்தை பற்றி நினைப்பதால் ஏற்படும் விளைவுகள்

1. எந்நேரமும் கற்பனையில் இருப்பது
2. நிறைவேறுமா என்று தெரியாமல் ஆசைப்படுவது
3. நமக்கு உண்மையில் தகுதி இருக்கிறதா என்று தெரியாமல் குழப்பம்
4. நாளை என்ன நடக்குமோ என்ற பயம், பீதி

நிகழ்காலத்தில் எப்படி இருப்பது?
வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு தினமும் செல்கிறோம். நம் வீட்டில் இருந்து கோவிலுக்கு போது எத்தனை அடிகள் எடுத்து வைக்கிறோம் என ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக்கொண்டே செல்லுங்கள். தினமும் இப்படி செய்தால் நீங்களாகவே கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும்போது எண்ணிக்கொண்டே செல்லும் பழக்கத்துக்கு வந்து விடுவீர்கள். பாதையில் சாணி, குப்பைகள் இருந்தாலும் அதையெல்லாம் கவனித்து, ஒதுங்கி செல்வீர்கள். நடப்பதில் கவனம் இருக்கும்.
உங்கள் வீடு இரண்டாம் மாடியில் இருக்கிறது என்றால் உங்கள் வீட்டுக்கு செல்வதற்கு எத்தனை படிகள் இருக்கிறது என்று எண்ணிப்பார்த்திருக்கிறீர்களா? பலருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இனி படிகளை எண்ணிக்கொண்டே செல்லுங்கள். இப்போது உங்களுக்கு படியில் என்ன நிறத்தில் பெயிண்ட் அடித்திருக்கிறார்கள். ஒரு சில படிகள் லேசாக பெயர்ந்திருக்கின்றன. சுண்ணாம்பு ஒட்டியிருக்கிறது என்ற சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் கவனத்துக்கு வரும்.
இப்படித்தான் ஒவ்வொரு செயலையும் நிகழ்காலத்தில் செய்ய வேண்டும். நிகழ்காலத்தில் இருப்பதால் என்ன நன்மைகள் என்பது பற்றி நாளை சொல்கிறேன்.

நச்சுன்னு நாலு வார்த்தை

வாழ்க்கை என்பது பல்வேறு விதிகளைக் கொண்ட நடுவர் அற்ற ஒரு விளையாட்டு. புனிதமான நூல்கள் உட்பட எந்த ஒரு புத்தகத்தின் ஆலோசனையையும் பெறுவதையும் விட அந்த விளையாட்டின் பார்வையாளராக நீங்கள் இருக்கலாம். அந்த வாழ்க்கையில் நீங்களே விளையாடவும் செய்யலாம்.
ஜோசப் பிராட்ஸ்கி,
ரஷ்ய கவிஞர்.

Monday, December 26, 2011

நைட் ஷிப்ட்டில் அவதிப்படுகிறீர்களா? அதில் இருந்து தப்பிக்கும் வழி


இரவு எட்டு மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை ஒரு மனிதன் தூங்க வேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதி. ஆனால் தற்போதைய அவசர உலகத்தில் பணம் சம்பாதிக்கும் உலகத்தில் இதையெல்லாம் யாரும் பொருட்படுத்துவதில்லை.
இரவு பணியால் விளையும் உடல் நலக்கேடுகள் என்னென்ன?
உடல் குண்டாகுதல்
கோபம் அதிகரித்தல்
வயிற்றுக்கோளாறுகள்
செரிமான உறுப்புகள் கெட்டுப்போதல்
மனைவியுடன் சண்டை வரும்
நீங்கள் பகலில் தூங்கும் போது குழந்தைகள் சிரித்து விளையாடினால் உங்களுக்கு பிடிக்காது.
அடிக்கடி நீங்கள் குழந்தைகளை அடிப்பீர்கள்
நெகட்டிவ் எண்ணங்கள் அதிகரிக்கும்

தவிர்க்க என்ன வழி?
கூடுமான வரை அலுவலகத்தில் நைட் ஷிப்ட் பார்க்காமல் தவிர்க்க வேண்டும்.
முடியாத பட்சத்தில், இரவு பணியின் போது உடல் நலத்தைக் கெடுக்கும் கார உணவுகளை சாப்பிடவே கூடாது. பழங்களை சாப்பிடலாம். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.
உடல் வெப்பத்தை சீராக வைத்திருக்க யோகா அல்லது உடற்பயிற்சி, தியானம் உள்ளிட்டவற்றை அவசியம் செய்ய வேண்டும்
பகலில் உணவு சாப்பிட்ட உடன் தூங்க கூடாது. ஒரு மணிநேரம் கழித்து தூங்குங்கள்.
சில நேரங்களில் பகலில் தூக்கம் வரமால் இருக்கலாம். அப்போது புத்தகங்கள் படித்தால் உடனடியாக தூக்கம் வரும்.
அடிக்கடி மருத்துவரிடம் சென்று உடல் நலத்தை சீராக வைத்திருங்கள்.

Sunday, July 11, 2010

சீமான் ஜாக்கிரதை


இன்னொரு விஜயகாந்த் உருவாக்கப்படுகிறார்; சீமான் ஜாக்கிரதை


சீமான் மீது வழக்குப்பதிவு! தலைமறைவு என்று தினத்தந்தி முதல் இணையம் வரை செய்திகள் களை கட்டி உள்ளன.
சட்டசபை தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் ஓட்டுக்களை பிரிக்க அரசின் தந்திரம் ஆரம்பமாகிவிட்டது என்றே இதை நான் கருதுகிறேன்.
விஜயகாந்த் இந்த முறையும் தனித்து போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்று தி.மு.க.கூட்டணி எதிர்பார்த்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பில் மண்ணை கொட்டிவிட்டார் விஜயகாந்த். கொடநாட்டில் அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி ஏறக்குறைய முடிவாகிவிட்டது. ஓட்டுக்களை பிரிக்க அடுத்த தந்திரத்தை கருணாநிதி கையில் எடுக்க ஆரம்பித்துவிட்டார்.
அதன் விளைவுதான் சீமான் மீது அடுக்கடுக்கான வழக்குகள். சீமான் தன் சுய உரிமையை, தமிழர்கள் நலன் பற்றி பேசட்டும். அதில் தவறு ஒன்றும் இல்லை. சட்ட சபை தேர்தலின் போது தனித்து போட்டி என்ற முடிவை மட்டும் அவர் எடுத்து விடக்கூடாது.
அப்படி முடிவெடுக்கும் பட்சத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தமிழர் நலனுக்கு எதிராக செயல்பட்ட மத்திய, மாநில அரசுகளை மீண்டும் ஆதரித்தது போல் ஆகிவிடும்.

இன்றைய பஞ்ச் டயலாக்

எண்ணைய் நிறுவனங்களுக்கு மானியம் கொடுக்காதீர்கள், பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் மானியம் கொடுங்கள்;
சொன்னவர்; திட்டக்குழு துணைத்தலைவர் மான்டேசிங் அலுவாலியா

Sunday, December 6, 2009

முடியப்போகுது 2009









இந்த ஆண்டு முடிய இன்னும் 24 நாட்கள் இருக்கின்றன. உலகைச் சுற்றி, நாட்டை சுற்றி, மாநிலத்தை சுற்றி, நகரை சுற்றி, தெருவை சுற்றி, வீட்டை சுற்றி எத்தனையோ சம்பவங்கள் நடந்துவிட்டன. இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் தமிழினத்துக்காக போராடிய ஒரு போராட்டம் வீழ்ந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவை மீண்டும் ஆட்சி செய்ய காங்கிரஸ் ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் எல்லாம் தி.மு.க. கூட்டணியே வெற்றிக்கனி பறித்தது. அம்மா வீட்டுக்குப்போன ராமதாஸ் அதே வேகத்தில் அங்கிருந்து வெளியேறினார். கொடநாட்டில் ஓய்வெடுத்த அம்மா மீண்டும் சென்னைக்கு வந்து இடைத்தேர்தலில் குதிப்பதாக அறிவித்திருக்கிறார். எங்கள் தெருவில் இந்த மழைகாலத்தில் சில முதியவர்கள் இறந்து விட்டனர். என் குழந்தை நிறைய கேள்விகள் கேட்கிறாள். ஏர்டெல் இணைப்பில் இருந்து பிஎஸ்என் இணைப்புக்கு மாறியிருக்கிறேன். ஏன்? மாறினேனோ என்று என்னும் படி பிஎஸ்என்எல்லில் படுத்தி எடுத்துவிட்டனர்.
இந்த வருடம் மழை சென்னையை அவ்வளவாக மிதக்க விடவில்லை. ஆந்திராவில் அடுத்தடுத்த அதிரடிகளால் அந்த மாநிலம் குலுங்குகிறது. ராஜசேகர ரெட்டி மரணம். சந்திசேகரராவ் உண்ணாவிரதம்.
தமிழகத்திலோ நேற்று திடீரென முதல்வர் கருணாநிதியில் ஓய்வு அறிவிப்பு வெளியானது. 2010 ஜூனுக்கு பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். ஆனால் இந்த அறிவிப்பு முரசொலியை தவிர மற்ற எல்லாவற்றிலும் வந்திருக்கிறது. உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டாரோ என்னவோ தெரியல.
இந்த ஆண்டில் ஒரு சிறிய பழைய அப்பார்ட்மெண்ட் வாங்க முயற்சித்து தோல்வியில் முடிந்தது. மன கசப்பும் ஏற்பட்டுவிட்டது.
எப்படியோ 2009 குழந்தையின் ஆயுள் முடியப்போகிறது. அடுத்த புதுவரவான 2010 எப்படி இருக்குமோ?



சோனியா-சபத்தில் வென்ற நாயகி. (தமிழினத்தை அழித்து)
பல்டியின் நாயகர்(முதல்வர் கருணாநிதி)
ராமதாஸ் (எப்படிங்கன்னா தோத்த கட்சியாச்சு?)
திருமாவளவன்(இரண்டு மனம் வேண்டும். பிழைத்து வாழ ஒன்று, தமிழர்களை பற்றி பேச ஒன்று)

Saturday, September 5, 2009

ஒரு வேலை வாய்ப்பு

எனது நண்பர் ஒருவர் சமீபத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா விளம்பர ஏஜென்சி எடுத்திருக்கிறார். இந்த பணிக்காக விளம்பரம் சேகரிக்கக்கூடியவர்கள் இருந்தால் தொடர்புகொள்ளலாம். இப்போது நாளிதழ்களில் பணியாற்றிக்கொண்டிருந்தாலும் இந்த பணியை விருப்பம் இருந்தால் செய்யலாம். புதிதாக இந்த பணியை செய்ய விரும்புவர்களும் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய செல் நம்பர் 99529 36461 அல்லது தொலைபேசி எண் 044 43523526 அல்லது varshaad09@gmail.com உங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடமும் இது பற்றி சொல்லுங்கள் நன்றி.

Thursday, August 6, 2009

பிளாஷ் நியூஸ்: செல்ராசா பத்மநாதன் தாய்லாந்தில் கைது

கொழும்பு: இலங்கையில் 25 ஆண்டுகளாக நீடித்து வந்த போர் கடந்த மே 18ம் தேதி முடிவுக்கு வந்தது. புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போரில் கொல்லப்பட்டனர். புலிகளின் வெளியுறவுத்துறை தலைவர் செல்ராசா பத்மநாதன் உட்பட மேலும் சில புலிகள் தலைவர்கள் வெளிநாடுகளில் பதுங்கியிருந்தனர். இந்நிலையில், பிரபாகரன் விட்டுச் சென்ற போராட்ட பாதையை செல்வராசா பத்மநாதன் தலைமை தாங்கி வழி நடத்துவார் என்று புலிகளின் செயலகத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு பரபரப்பு அறிக்கை வெளியானது. இந்நிலையில், புலிகளின் புதிய தலைவர் பற்றி இலங்கை அரசு நீண்டநாட்களாக கருத்து எதுவும் சொல்லவில்லை. இலங்கைப் பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயக கூறுகையில், புதிய தலைவரின் கீழ் புலிகள் மீண்டும் ஒன்றுபடுவதை இலங்கை அரசு அழிக்கும் என்று ஆவேசமாகக் கூறியிருந்தார். இதற்கிடையே அதிரடி திருப்பமாக தாய்லாந்து நாட்டில் பதுங்கியிருந்த செல்வராசா பத்மநாதன் நேற்று கைது செய்யப்பட்டதாக கொழும்பு பத்திரிகை உலக வட்டாரங்கள் தெரிவித்தன. புலிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள் கடத்திய வழக்கில் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள செல்வராசா பத்மநாதன் மீது இன்டர்போல் போலீசாரின் கைது வாரண்ட் நிலுவையில் இருந்தது என இலங்கை டிவி சேனல்கள் கூறுகின்றன.

Tuesday, July 21, 2009

பிளாஷ் நியூஸ் புலிகளின் புதிய தலைவர்:


ஜூலை 21: புலிகள் தலைவர் பிரபாகரனால்,அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட செல்வராஜா பத்மநாதன்- இனிவரும் காலத்தில் எமது தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு ஏற்ப போராட்ட நகர்வுளை வழிநடத்திச் செல்வார் என புலிகள் அறிவித்துள்ளனர்.
புலிகளை ஒழித்துக்கட்டிவிட்டோம் என்று கொக்கரித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அதர்ச்சியளிக்கும் வகையில் புலிகள் மீண்டும் போராட்ட களத்தில் இறங்குவதாக அறிவித்துள்ளனர். போராட்டம் தோற்றுவிட்டது என இலங்கையும், அதன் ஜால்ரா நாடுகளும் நினைத்திருக்கும் மாயையையும் தகர்த்தெறிவோம் என்று கூறியுள்ளனர்.
புலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து உலகத் தமிழ் மக்களுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் புலிகளின் நிறைவேற்றுச் செயற்குழு சார்பில் சுரேஸ் (அமுதன்), ராம் ஆகியோர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் நெருக்கடி மிகுந்த, துயர்மிகுந்த காலகட்டம் ஒன்றினுள் ஈழத் தமிழினம் இப்போது நிலைகுலைந்து நிற்கின்றது. ஈடுசெய்ய முடியாத - கனவில் கூட நாம் ஏற்றுக்கொள்ள விரும்பாத - மிகப்பெரிய இழப்புக்களை, எம் இனம் சந்தித்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.
புலிகள் இயக்கத்தை அழித்துவிட்டதாகவும், முற்றாக ஒடுக்கிவிட்டதாகவும், இலங்கை அரசு பரப்புரை செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் - தமிழீழ விடுதலைக்காக நாம் வீறுகொண்டு எழுந்து போராடவேண்டியது எமது வரலாற்றுக்கடமை. எங்கள் தேசியத் தலைவர் அவர்களினாலும், எங்கள் மண்ணுக்காக விதையாகிப் போன மாவீரர்களினாலும், தமது உயிர்களைத் தந்துவிட்ட மக்களினாலும் இந்த கடமை எங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் - வரலாற்றின் தேவை கருதி - பிறந்திருக்கும் புதிய சூழலுக்கு ஏற்ப - புதிய வழிமுறைகளுக்கு ஊடாகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் -விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பை ஒழுங்கமைப்புச் செய்துள்ளோம்.
போராட்ட வடிவங்களும் அதற்கான உத்திகளும் பாதைகளும், காலத்திற்கு ஏற்பவும் தேவைக்கு ஏற்பவும் மாற்றமடையலாம். இறுதி இலட்சியமான தமிழீழம் என்பது என்றும் மாறாதது.
எம்முடைய மக்களுடன் ஒன்றிணைந்து விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வை மேற்கொள்ளவேண்டிய தருணத்தில் இருக்கின்றோம். அன்றும் இன்றும் இனி என்றும் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே தமிழ்த் தேசியத்தின் தலைவர்.
எமக்கு முன்னால் உள்ள தடைகளை உடைத்து எறிந்து எமது செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள எமது ஒருங்கிணைப்பாளர்கள், தாயகத்தின் களத்தில் இருந்து எதிரியின் முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளிவந்த போராளிகள், பொறுப்பாளர்கள் என எமது உறுப்பினர்கள் பலரையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட - நீண்ட - விரிவான - ஆழமான கருத்துப் பரிமாற்றங்களின் விளைவாக இறுதியான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டு முடிவுக்கு ஏற்ப தேசியத் தலைவர் பிரபாகரன், புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளராக நியமித்த செல்வராஜா பத்மநாதன்- இனிவரும் காலத்தில் எமது தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு ஏற்ப எமது போராட்ட நகர்வுளை வழிநடத்திச் செல்வார். புலிகள் இயக்கத்தின் நிறைவேற்றுச் செயற்குழுவினராகிய நாங்கள் எமது அன்புக்குரிய மக்களுக்கும், இந்த உலக சமூகத்திற்கும் அதிகாரபூர்வமாக இதை அறிவிக்கின்றோம்.
போராட்டத்தை முனைப்புடன் முன்நகர்த்தும் நோக்கில், இயக்கத்திற்கான ஒரு தலைமைச் செயலகமும், பல்வேறு துறைசார் வேலைத் திட்டப் பிரிவுகளும், நிறைவேற்றுச் செயற்குழுவும் உருவாக்கப்பட்டுள்ளன. இவை பற்றிய விபரங்களை விரைவில் அறிவிப்போம். எமது எதிர்கால செயல்பாடுகளை வலுப்படுத்தும் முகமாக தமிழ் மக்களாகிய உங்களின் மலைபோன்ற ஆதரவையும் அறிவார்ந்த கருத்துகளும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.
இலங்கையில் தமிழ் மக்களின் நிலங்களை கையகப்படுத்தியதாலும் பல்லாயிரம் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததாலும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தோற்றுவிட்டது என்று சிங்கள தேசமும் அதனுடன் கூட்டுச்சேர்ந்த நாடுகளும் நினைத்தால் அந்த மாயையை நாம் உடைத்தெறிவோம்.
எமது தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வளர்த்துவிட்ட விடுதலைத் தாகம் என்ற பெருநெருப்பு, உணர்வுள்ள ஒவ்வொரு தமிழர்களின் நெஞ்சிலும் கனன்று கொண்டிருப்பதையும் தேச விடுதலை ஒன்று மட்டுமே அந்தப் பெருநெருப்பை அணைக்கும் சக்தி உள்ளது என்ற உண்மையையும் நாம் எமது அடுத்தகட்ட போராட்ட நகர்வுகளின் ஊடாக உலகிற்கு உணர வைப்போம்.
இவ்வாறு புலிகள் கூறியுள்ளனர்.

Sunday, July 19, 2009

இளகிய மனதுள்ளவர்கள் இதை படிக்க வேண்டாம், படங்களை பார்க்க வேண்டாம்









மனிதனின் உடல் உறுப்புகளான கிட்னி, கண்களை விற்கும் தொழிற்சாலை ஒன்று ரஷ்யாவில் இருக்கிறது. இதை சிலர் நம்பாமல் போகலாம். அதற்கு சாட்சிதான் இந்த படங்கள். கார்விபத்துகளில் பலியாகும் நபர்கள், யாருமற்ற அனாதைகளாக மரணம் அடையும் நபர்கள், தூக்கிலிடப்படும் நபர்கள், விவரிக்கமுடியாத மரணங்கள், யாரும் கோராமல் பிணவறையில் இருக்கும் பிணங்கள் இந்த தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படுகின்றன. பின்னர் இவை மருத்துவமாணவர்களுக்காக மருத்துவப்பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இர்லேந்து மற்றும் ஜெர்மனியில் உள்ள மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மனிதனின் எலும்புகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவிலும் இதே போல மனித உடல் பாகங்களை ஏற்றுதி செய்யும் தொழிற்சாலை இருக்கிறதாம். யாருக்காவது தெரிந்தால் அந்த செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Saturday, July 18, 2009

கலைஞர் டிவியில் வரும் கேடுகெட்ட தொடர்




கலைஞர் டிவியில் தங்கமான புருஷன் என்ற தொடர் ஒன்று இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை ஒளிரப்பாகிறது. நம் வலை நண்பர்கள் தற்செயலாக அதை பார்த்திருக்கலாம். தொடர் முழுவதுமே நெகட்டிவ் தாட்களைக் கொண்டிருக்கிறது என்பது ஒருபுறம் இருக்க, அந்த தொடரின் ஒளிப்பதிவு, படமாக்கப்பட்ட விதம் எல்லாமே மோசம் என்பதும் குறிப்பிடத்தான் வேண்டும். தவிர இந்த தொடரில் வரும் காட்சிகளின் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்த தொடரில் வந்த ஒரு காட்சியில் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கிறது. அதை விரும்பாத ஒருவன் திருமணத்திற்கு பந்தல் போடுதற்கு முகூர்த்தக்கால் ஊன்றுவார்கள் இல்லையா? அந்த முகூர்த்தகாலுக்கு தீவைக்கிறான். இதுவரை இது போன்று நடைமுறையில் நடந்திருக்கிறதா? என்று யாராவது சொல்லமுடியுமா? இந்த தொடரப்பார்த்த பிறகு வேண்டுமானால் அது போல் பலர் முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன். இது போன்ற கேடுகெட்ட காட்சியை தமிழகத்தின் முதல்வர் குடும்பம் நடத்தும் டிவியில் இடம் பெறலாமா?
இது போன்று நெகட்டிவ் தாட் உடன் கூடிய காட்சிகள் இந்த தொடரில் அதிகம் இடம் பெறுகின்றன.